பறந்தே போகும் மருந்துச் செலவுக் கவலை!

என்ன பெரியவரே…! மருந்து சீட்ட கையில் வெச்சிகிட்டு தயங்கி நிக்கிறீங்க…?” – என்று ஒரு இளைஞர் கேட்க, அதற்குப் பெரியவர், இந்த டாக்டர் எழுதின மருந்துச் சீட்ல ஒன்னும் தெரியல,… சரி மருந்து வாங்கிக்கலாம்னு வந்தா, மொத்த மருந்தும் ஐநூறு ரூபா ஆகுமாம்…! கையில 150 தான் இருக்கு…! என்ன செய்யறதுன்னு முழிக்கிறேன்…. இதுல வேற இந்த டாக்டரு, மருந்து வாங்கியாந்து காட்டச் சொல்றாரு!” – என்று ஒரே மூச்சாய் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். பெரியவரே! ஒன்னும் கவலைப்பட வேணா… நீங்க வெச்சிருக்கற மருந்து சீட்டுல உள்ள மருந்து 100 ரூபாய்லயே வாங்கிடலாம். எங்கன்னுதானே கேக்குறீங்க..? நம்ம மந்தவெளி, ராமகிருஷ்ணா மடம் ரோட்ல இருக்குற ஜெனரிக் மருந்து கடையில…! என்ன ஆச்சர்யமா..! உண்மையத்தான் சொல்றேன்…!” என்று பெரியவருக்கு வழி காட்டினார் அந்த இளைஞர்.  இத்தனை மலிவான மருந்துக் கடையைப் பற்றி மக்களுக்கு எடுத்துக் சொல்ல முனைந்தோம்! ஜெனரிக் மருந்துக் கடை நடத்தும் முனைவர் தி. சங்கர் வரவேற்று விளக்கினார்.

 உங்க மருந்துக் கடையில் இவ்வளவு குறைந்த விலையில் மருந்துகளை எப்படி விற்கிறீர்கள்? உங்களின் நோக்கம் என்ன?

முக்கியமாக பாமர மக்கள் பயன் அடைய வேண்டும். அதிலும் நடுத்தர, ஏழை எளிய மக்கள் மருந்துக்கென செலவு செய்வதில், செலவினத்தைக் குறைக்க வேண்டும். அதாவது, மருந்துச் செலவை 30%லிருந்து 80% வரை குறைத்து அதனை சேமியுங்கள் – என்று கூறுகிறோம்!

வெளியில், பொதுவாக, 120 ரூபாய்க்கு விற்கும் ஒரு மருந்து மாத்திரை அட்டை எங்களிடம் 20 ரூபாய்க்கு கிடைக்கும். அதே குறையாத தரம், அதே வேதிப் பொருட்கள், அளவு எல்லாம் அப்படியே இருக்கும்.

எங்கள் கடை லாபநோக்குடன் செயல்படவில்லை. உதவுவதே நோக்கமாக செயல்படுகிறது. இன்னும் சொல்லப்போனால், இந்த மருந்து மாத்திரை தயாரிக்கும் கம்பெனிகள் கணிசமான லாபத்தை ஈட்டுகின்றன. பொதுவாக, ஏதோ ஒரு மாத்திரையைத் தயாரிக்க, ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய்தான் ஆகும். பிறகு, அட்டை, டப்பா, பாதுகாப்பான பேக்கிங், போக்குவரத்து என பல வகை செலவினத்தை அதன் தலையில் வைத்து, 100, 150, ரூபாய் என்று சில்லரை விலை அச்சிட்டிருக்கும். நாங்கள் வாங்கும் விலையுடன் சொற்ப அளவு சேர்த்து விற்பனை செய்வதால், மருந்துப் பொருட்கள் மிகமிக குறைந்த விலையில் விற்கமுடிகிறது.

ஜெனரிக் மருந்துகள் பற்றி…?

பொதுவாக, பாராசெடமால் – என்று ஒரு மாத்திரை ஜெனரிக் மருந்து. அதாவது, பொது மருந்து. இந்த மாத்திரையை, பலவித பெயர்களில் பல கம்பெனிகள் தயாரிக்கின்றன. அதுவும் பலவித விலைகளில், இதேபோல் பல மருந்துகள் உள்ளன.  மருந்துகள் பலவித பெயர் என்பது Brand பெயர்களில் தயாரிக்கப்படுகிறது. தயாரிப்புகள் யாவும் ஒன்றாக இருந்தாலும், அட்டை பெட்டி, வடிவம் இவற்றில் மாற்றம் இருக்கலாம்.

மருத்துவர்கள் எழுதும் மருந்துகள், பெயர்கள் விதவிதமாக இருக்குமா? ஒருசில மருத்துவர்கள் எழுதும் மருந்துகள் விலை உயர்ந்ததாக இருக்கிறதே?

பொதுவாக, மருத்துவர்கள் எழுதும் மருந்துகளின் பெயர்கள் Brand பெயர்களாகவே இருக்கும். ஜெனரிக் பெயரானது சிறிய அளவில் அட்டையில் இருக்கும். இதன்கீழ் பெரிய அளவில் Brand பெயர் இருக்கும். மருந்து கம்பெனியின் பிரதிநிதிகள் மருத்துவரை அணுகி, தம் கம்பெனியின் மருந்துகளை எழுதுமாறு வலியுறுத்துகின்றனர். அதுவும், வெறுமென வற்புறுத்தாமல், பேப்பர் வெயிட், பேனா, போஸ்டர்கள், பரிசுப் பொருட்கள், ஆண்டுதோறும் இலவச சுற்றுலா ஏற்பாடு, கமிஷன் என பல கவர்ச்சிகர அன்பளிப்பும் கொடுத்து தம் கம்பெனி மருந்துகளை எழுத வைக்கின்றனர்.

இதன் காரணமாகத்தான் சில மருத்துவர்கள், தான் எழுதிய மருந்தை வாங்கிக் கொண்டுவந்து காட்டச்சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர். மருந்துத் தொழில் மகத்தான தொழில். சொற்ப, அற்ப, தொகைக்காக பரிசு பொருட்களுக்காக நோயாளிகளுக்கும் அதிக செலவில் மருந்துகள் வாங்கச் செய்வது ஏற்றதல்ல. அதிலும், ஏழை எளியவர்கள்  என்ன செய்வார்கள்? ஆகவேதான், எங்கள் ஜெனரிக் மருந்துக் கடையில் மிக மிகக் குறைந்த விலையில் லாப நோக்கமின்றி தருகிறோம்…!

இதுபோல், கமிஷன் தரும் கம்பெனிகளின் மருந்துகள் விலை அதிகம்தான் இருக்கும். இதில், ஒரு சிலர் விலை அதிகம் உள்ள மருந்துகள்தான் உயர்ந்தது என்று எண்ணுவது மிகவும் வருந்தத்தக்கது. மருத்துவர்கள் எழுதும் மருந்துகளை பல பெயரில், பல கம்பெனிகள் தயாரிக்கின்றன. இதில் குறைந்த விலையுள்ள மருந்துகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

உங்கள்  ஜெனரிக் மருந்துக்கடை எங்கே உள்ளது? எப்படி இயங்குகிறது?

எங்கள் மருந்துக் கடையின் முழுபெயர், ‘பாரத் விகாஸ் பொது மருந்து விற்பனையகம்’. இந்த மருந்துகடை, பாரத் விகாஸ் பரிஷத் ஜனசேவா ட்ரஸ்ட் – என்ற அமைப்பின் மூலம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த ட்ரஸ்ட் இந்திய அளவில் செயல்பட்டுவருகிறது. இந்த பொது மருந்து விற்பனையகம் அமைக்க முழு முதற்காரணமாய் இருந்தவர் ஹைதராபாத், பாரத் விகாஸ் பரிஷத் சாரிட்டபிள் ட்ரஸ்டின் சேர்மன் சுப்பராவ் தான். இவரின் ஆலோசனைப் படிதான் சென்னையில் இந்த மருந்துக் கடை துவங்கப்பட்டது.

இந்தக் கடையில் மாத்திரை மருந்துகள் மிகவும் மலிவு விலையில் தரம் மாறாமல் விற்கப்படுகின்றன என்ற தகவல் அனைவர்க்கும் தெரிவது நல்லது. இதுவரை, எங்கள் கடைக்கென சுமார் 800 வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். தொலைவில் இருந்தாலும் வந்து தேவையான மருந்துகளை மொத்தமாக இரண்டு மூன்று மாதத்திற்கு சேர்த்து வாங்கிச் செல்கின்றனர். எங்கள் கடை சென்னை மந்தைவெளி, ராமகிருஷ்ணா மடம் சாலையில், 224/2V எண்ணில் செயல்படுகிறது.

இப்படி மலிவு விலை மருந்து விற்பனை அல்லாமல் வேறு ஏதேனும் செய்து வருகிறீர்களா?

செயற்கை உறுப்புகளைத் தயாரித்து தேவையானவர்களுக்கு வழங்குகிறோம். அதாவது, கை, கால் இழந்தவர்களுக்கு செயற்கை கால், கைகளை சீராக உருவாக்கி அணிவிக்கிறோம்.

மலிவு விலை என்பதன் காரணமாக மக்கள் ஏதும் எண்ணுவதுண்டா?

பொதுவாக விலை குறைவு என்றாலே சிலர் தரத்தினைக் குறைவாக எண்ணக் கூடும். ஆனால், நாங்கள் மருந்து வாங்கும் கம்பெனிகள் முதன்மையானவை. அதாவது, மிக பெரிய 14 கம்பெனிகள் எங்களுக்கு மருந்துகளை அனுப்புகின்றன. உதாரணமாக, லூப்பின், சிப்லா, சன், ரன்பாக்ஸி, காடிலா என பல முன்னணி கம்பெனிகள் எங்களுக்கு விநியோகம் செய்கின்றன.

ஒருசிலர் விலை அதிகம் என்றால் தான் நோய் குணம் ஆகும் என்று தவறாக எண்ணுவதும் பிறகு எங்க கடையை அணுகியபின் மனம் மாறுவதும் உண்டு.

உங்கள் வாடிக்கையாளர்கள் பற்றி…?

பொதுவாக, எங்களுக்கு நிலைத்த வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வந்து மருந்து வாங்குகின்றனர். இதில், நீரழிவு, உயர்ரத்த அழுத்தம், இதய நோய் கொண்டவர்கள் தொடர்ந்து தினமும் சாப்பிடும் மருந்துகளை எங்களிடம் மொத்தமாக வாங்குவது உண்டு. எந்தப் பொருளை வாங்கினாலும் பேரம் பேசும் பண்பு மக்களுக்கு உண்டு. ஆனால், மெடிக்கல் ஷாப்களில் பேரம் பேசமாட்டார்கள். அதிலும் எங்கள் கடையில் மருந்து வாங்கும் போது மனநிறைவோடு, வெளியில் வாங்குவதைவிட மலிவாக உள்ளதே என்று எண்ணி அந்தப் பணத்தை சேமிக்கலாமே என்று எண்ணுவோரும் உண்டு.

மருத்துவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்…?

மருத்துவர்கள் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளித்தாலே போதும். அதுவும், கற்ற கல்வியை அதாவது மருத்துவப் படிப்பை, சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். ஏதோ சுயலாபத்திற்கு, தேவையில்லாத மருந்துகளை எழுதுவதும் தேவையற்ற பரிசோதனைக்கு எழுதிக் கொடுப்பதும் தேவையில்லை. குறிப்பாக, நோயை குணமாக்க, நோயாளிக்கு அதிக செலவின்றி, ஜெனரிக் மருந்துகளை அதாவது, மருந்துப் பெயர்களை மட்டும் தெளிவாக பெரிய எழுத்துகளில் எழுதினால் போதும்… ஆணூச்ணஞீ ணச்ட்ஞு  எனப்படும் கம்பெனிகள் வெளியிடும் பெயர்களை எழுதாமல் இருந்தால் போதும். இன்னும் சொல்லப்போனால், இதுபோன்ற மலிவு விலை மருந்தகம் செயல்படுவதை ஒரு குறிப்பால் உணர்த்தினாலும் போதும். இதுவே, ஏழை எளியவர்க்கு செய்யும் உபகாரம்.

நேர்காணல் : ஜெ. லோகநாதன்

மருந்து வாங்க தொடர்புக்கு :044 – 4217 3660

 

 

ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு மருந்துச் செலவு குறையும். அதே நேரத்தில் தரமான கம்பெனிகள் தயாரித்த மருந்துகள். மருத்துவ செலவு சுமார் 80 சதவீதம் மிச்சமாகும். குறிப்பாக தினமும் மருந்து சாப்பிடுபவர்களுக்கு இந்த மருந்துக்கடை வரப்பிரசாதம் தான்.

– பேராசிரியர் பி.எம். கோபாலகிருஷ்ணா

 

 

 

 

இந்த நவீன காலத்துல இது மாதிரி கொறஞ்ச விலையில மருந்து, மாத்திரை கிடைக்கறது பெரிய புண்ணியம். அதுவும் வயசானவங்களுக்கும் தினம் மருந்து சாப்பிடறவங்களுக்கும் ரொம்ப உபயோகம். மக்கள் நல்லா புரிஞ்சிக்கிட்டு இந்த மருந்து கடைய அதாவது ஜெனரிக் மருந்து விற்பனையகத்தை அணுகி பயன் பெறணும்!

– பி. பத்ரிநாத், சென்னை