பறக்கும் ரயில் நிலையங்களில் விரைவில் உணவகங்கள்

சித்திரை பிறந்தால் சூடு பறக்கும் இட்லி!

சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இத்தடத்தில் உள்ள ரயில் நிலையங்களில் உணவகங்களை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நெடுங்காலமாக நிலுவையில் உள்ளது. கடற்கரை, திருவான்மியூர், திருமயிலை ஆகிய மூன்று ரயில் நிலையங்களில் உணவகங்கள் அமைக்க ரயில்வே நிர்வாகத்திடம் ஐஆர்சிடிசி இரண்டு ஆண்டுகளுக்கு முன் அனுமதி கோரியது. இது பரிசீலிக்கப்பட்டது. மேலே குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் 2000 ச. அடி முதல் 4000 ச. அடி வரையிலான பரப்பில் உணவகம் அமைத்து நடத்துவதற்கான ஓராண்டு உரிமக் கட்டணம் ரூ. 60 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் இந்த தொகை மிகவும் அதிகம். இவ்வளவு தொகையை உரிமக்கட்டணமாகச் செலுத்தினால் இழப்புதான் ஏற்படும் என்று கருதப்பட்டதால் யாரும் தொகை செலுத்தி உரிமம் கோர முன்வரவில்லை. இதையடுத்து இத்திட்டம் கைவிடப்பட்டது.

குறைந்த ச.அடி பரப்பில் குறைவான உரிமக்கட்டணத்துடன் உணவகங்கள், துரித உணவகங்கள் நடத்த ரயில்வே நிர்வாகத்திடம் ஐ.ஆர்.சி.டி.சி மீண்டும் அனுமதி கோரியது. இப்போது இதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடற்கரை, வேளச்சேரி ஆகிய இரண்டு ரயில் நிலையங்களில் உணவகங்களும் திருவான்மியூர், திருமையிலை ஆகிய இரண்டு ரயில் நிலையங்களில் துரித உணவகங்களும் திறக்கப்பட இருக்கின்றன. கடற்கரை ரயில் நிலையத்தில் 1400 ச.அடி பரப்பும் வேளச்சேரி ரயில் நிலையத்தில் 1465 ச.அடி பரப்பும் உணவகம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் நடத்த 9 ஆண்டுகள் வரை உரிமம் வழங்கப்படும். உணவகத்துக்கான ஓராண்டு உரிமக் கட்டணம் கடற்கரை ரயில் நிலையத்தில் ரூ. 65 லட்சம், வேளச்சேரி ரயில் நிலையத்தில் ரூ. 40 லட்சம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

துரித உணவகம் அமைக்க திருமயிலை ரயில் நிலையத்தில் 620 ச.அடியும் திருவான்மியூர் ரயில் நிலையத்தில் 850 ச.அடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. துரித உணவகம் நடத்த ஆண்டுக்கட்டனம் ரூ. 20 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உரிய தொகையை செலுத்தி ஆண்டுதோறும் உரிமத்தை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். கடற்கரையில் உணவகமும் திருவான்மியூர், திருமயிலை ஆகிய ரயில் நிலையங்களில் துரித உணவகங்களும் ஏப்ரல் மாதம் முதல் இயங்கத் தொடங்கிவிடும். வேளச்சேரியில் மே மாதம் அல்லது ஜூன் மாதம் உணவகம் திறக்கப்படும். இந்த உணவகங்களும் துரித உணவகங்களும் பறக்கும் ரயில்கள் இயக்கப்படும் நேரங்களில் திறந்திருக்கும். சைவ ஆகாரங்களும் அசைவ உணவு வகைகளும் நியாயமான விலையில் தரம் குன்றாமல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்ட நான்கு ரயில் நிலையங்களில் உணவகங்களும் துரித உணவகங்களும் திறக்கப்படுவது முதல் கட்ட நடவடிக்கைதான். சேப்பாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட இதர ரயில் நிலையங்களிலும் அடுத்த ஆண்டு முடிவதற்குள் துரித உணவகங்களை திறக்க வழிவகை செய்யவேண்டும் என்பது இத்தடத்தில் பிரயாணம் செய்யும் பயணிகளின் கோரிக்கை.