பயிற்சி இருக்கு, வேலையும் இருக்கு, பட்டம் தேடும் பரிதவிப்பு எதற்கு?

ஐடிஐ முடித்த மாணவர்கள் 10,000 பேருக்கு வேலை; பாஷ் (ஆணிண்ஞிட), டாடா மோட்டார்ஸ், மாருதி, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் உறுதி!” என்ற செய்தி, உலக இளைஞர் திறன் நாளில் வெளிவந்தது. இதற்கு முக்கிய காரணமாக, மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா’ திகழ்கிறது. ஐடிஐ படிப்பு என்றால் என்ன? யாருக்கு இப்படிப்பு உதவுகிறது? என்னென்ன விதமான படிப்புகள் உள்ளன என்பது பற்றி அறிய ஆவலாக இருப்பீர்கள்.

10வது படித்தபின்?JOP

10வது பரீட்சை என்பதெ பலருக்கும் வாழ்வின் முதல் போராட்டம். அதை பிளஸ் 2, டிகிரி என்று மட்டும்தான் படிக்க வேண்டுமா என்ன? அப்படியில்லை. பல விதமான படிப்புகள் உண்டு. அதில் டெக்னிகல் படிப்பு எனப் பார்த்தால் ஐடிஐதான் உருப்படியாக உள்ளது. ஒருவர் எலக்ட்ரீஷியன், மெஷ்னிஸ்ட், ஃபிட்டர், பிளம்பர், டர்னர், வெல்டர் என என்னவாக ஆக விருப்பம் கொண்டவராகவும் இருக்கலாம். இதை 1லிருந்து 3 வருடங்கள் வரை படிக்கலாம். மேலும் ஏதாவது நிறுவனத்தில் சேர்ந்து நேரடி பயிற்சி பெறலாம்.

ITI – Industrial Training Institute –  தொழிற்சாலை பயிற்சி நிலையங்கள் அரசு நேரடியாக நடத்துபவை. ITC – Industrial Training Centres தொழிற்சாலை பயிற்சி மையங்கள் பெரும்பாலும் தனியார் நடத்துபவை.

என்னென்ன படிக்க?

* டேட்டா பிரிப்பரேஷன் அஸிஸ்டென்ட்

* ஒயர்மேன் * கார்பென்டர் * ப்ளாக்ஸ்மித்

* கட்டிங் & டெய்லரிங் * மேசன் * ஷீட் மெட்டல் ஒர்க் * கன்சோல் ஆபரேட்டர் – ப்ரோகிராமிங் அசிஸ்டென்ட் * புக் பைண்டிங் * பிளம்பர் * மோல்டர் * வெல்டர்

* வைண்டர் * டீசல் மெக்கானிக் * ஸ்டெனோகிராஃபி * பிட்டர் * எலக்ட்ரீஷியன் * டிராஃப்ட்ஸ்மேன் * மெக்கானிக் * ஃபைபர் ரீஇன்ஃபோர்ச்டு பிளாஸ்டிக் கோர்ஸ் * ரேடியோ – டிவி மெக்கானிக் * எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் * மெஷினிஸ்ட் (கிரைண்டர்)  * டிராஃப்ட்ஸ்மேன் மெகானிக்கல் * ரிஃபிஜிரேட்டர் – ஏர் கண்டிஷன் மெக்கானிக்.

ஐடிஐ முடித்ததும்?

பாரம்பரியமாக நாம் ஒரு தொழிலை, அதன் நெளிவு சுளிவு தெரிந்திருப்போம். இருந்தாலும் சர்டிஃபிகேட் இல்லையென்றால் பிரயோஜனம் இல்லை. முறையான கல்வி + அனுபவம் பெற்றால்தான் சர்டிஃபிகேட் சாத்தியம்.

‘திறன் வாய்ந்த தொழிலாளர்களுக்கு நாட்டில் தேவை அதிகம் உள்ளது. அதை பூர்த்தி செய்வதற்காகவே ஐடிஐக்கள் இயங்குகின்றன’ என்கிறார் திருச்சி ஐடிஐ தலைமை ஆசிரியர் ஜான் பாஸ்கோ. ஐடிஐயில் படித்து சிங்கப்பூரில் வெல்டராக வெற்றிகரமாகப் பணிபுரியும் தங்கள் மாணவர்களைப் பற்றிய சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்கிறார் அரசு ஐடிஐயில் ஆசிரியராகப் பணிசெய்யும் அப்துல் மஜீத் என்பவர். ‘கர்ணன் என்ற எங்கள் ஐடிஐ முன்னாள் மாணவர் சிங்கப்பூரில் வெல்டராக தனியார் நிறுவனத்தில் லட்சக்கணக்கில் சம்பாதிப்பது சுற்றுப்புறத்தில் உள்ள கிராம மாணவர்களுக்குப் பெரிய உந்துதல். வெல்டிங்கில் சாதாரண ஹெல்ப்பர் போல வேலையில் சேர்ந்து தனித் திறமையை வளர்த்துக் கொண்டதால் இந்த சாதனையைச் செய்ய முடிந்ததாம்.

வேலையில் சேர்ந்த பின்னர் ஐடிஐயா, டிப்ளமாவா அல்லது பொறியியல் பட்டதாரியா என்று பார்ப்பது இல்லை. திறன் தான் முன் நிற்கிறது. எனவே பொறியியல் கலூரி என்ற எலிப் பொறிக்குள் எல்லாரும் சிக்குண்டு திணறத் தேவையில்லை.

பாலிடெக்னிக், ஐடிஐ

பாலிடெக்னிக் படிப்பு தியரியை விரிவாக சொல்லிக் கொடுக்கும் படிப்பு. ஆனால் ஐடிஐயில் பிராக்டிகலுக்கு அதிக அழுத்தம். எந்த ஒரு தொழிற்சாலையிலும் ஐடிஐ டெக்னிஷியன்களின் தேவை அதிகம். இந்தியாவில் மட்டுமல்ல, கனடா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, துபாய் போன்ற நாடுகள் ஐடிஐ மாணவர்களுக்கு டிமாண்ட் இருப்பதாகச் சொல்கின்றனர் விஷயம் அறிந்தோர். ஐடிஐ படித்துவிட்டு சிகரம் தொட்டவர்கள் இதை எல்லாம் தாண்டி, தொழில் முனைவோராக, நிர்வாகத் திறன் மிக்க சிஇஓக்களாகவும் ஐடிஐ மாணவர்கள் மிளிர்கின்றனர்.

எனவே தைரியமாக ஐடிஐ யில் மகனையோ, மகளையோ சேர்த்து பயன்பெற வாழ்த்துக்கள்.

வெற்றிச் செய்தி – 1

பெருமாள், துவாக்குடி இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், திருச்சி: நான் பத்து வருடங்களுக்கு முன்னர் தனியார் ஐடிஐயில் பயின்றேன். சென்னையில் ஒரு தொழிற்சாலையில், ஃபிட்டராக ஐந்து வருடங்கள் பணிபுரிந்தேன். நான் என் தங்கையை நல்லபடியாக மணம் முடித்துக் கொடுக்கவும், என் மனைவியின் இரண்டாவது பிரசவம் மற்றும் இரு பள்ளிச் செலவையும் இப்போது பார்க்கும் வேலையில் இருந்தே சமாளிக்கிறேன்”

வருது 18,000 ஐடிஐக்கள்! 1,500 தொழில்  படிப்புகள்

* தேசத்தில் ஐடிஐகளின் எண்ணிக்கை தற்போது 13,105. இது இந்த ஆண்டு செப்டம்பருக்குள் 18,000 ஆகும்.

* ஒரே ஆண்டில் பிரதமர் திறன் மேம்பாட்டு திட்டப்படி ஒரு கோடியே 4 லட்சம் இளைஞர்கள் தொழில் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.

* திறன் மேம்பாட்டுக்கு என 1,500 விதமான பயிற்சிப் படிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

* பிரதமர் திறன் மேம்பாட்டு திட்டத்தில் 20 லட்சம் பேர் தாங்கள் விரும்பும் தொழிலில் பயிற்சி பெற்றார்கள். இவர்களில் 40 சதவீதம் பேர் பெண்கள்.

ராஜீவ் பிரதாப் ரூடி, (பாரத அரசின் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர்)

வெற்றிச் செய்தி – 2

சுவேதா, அரசு ஐடிஐயில் போன வருடம் சேர்ந்தவர்: எங்கள் வீட்டில் கொஞ்சம் கஷ்டமான சூழல். உடனே மேலே பிளஸ் 2, டிகிரி என எல்லோரையும் போல படிக்காமல் ஐடிஐயில் சேர்ந்தேன். வெறும் தியரி என்று இல்லாமல் நம் கையாலேயே செய்து திறன் பெறுவதால் நல்ல தொழில் கல்வியாக இருக்கிறது. எனக்கு கான்ஃபிடன்ஸ் வந்திருக்கிறது”.