பத்தாவது. அப்புறம்? சத்தான தொழில் திறம்!

நூறு பேரில் ஐந்து பேர் சம்பந்தமான அக்கறை முக்கியமா? பாக்கி தொண்ணூற்று ஐந்து பேர் சம்பந்தமான அக்கறை முக்கியமா? முக்கியம் ஒருபுறம் இருக்கட்டும். தேசத்திற்கு அவசியம் எது? டாக்டர் படிப்பு, என்ஜினியர் படிப்பு படிக்கிறவர்கள் 5 பேர் என்றால், மற்றவர்கள்? அந்த மற்றவர்களின் பங்களிப்புதான் தேசத்தின் முதுகெலும்பு. இது ஒரு புறம்.

சராசரி வீட்டை எடுத்துக்கொள்வோம். மகன் / மகள் எம்பிபிஎஸ் / ஐடி படிப்பில் சேராவிட்டால் கௌரவ குறைச்சல் என்பதுபோல ஒரு எண்ணம் பல பெற்றோர் மூளையில் குடிகொண்டிருக்கிறது. தேசத்திற்கோ திறன் மிக்க (ஸ்கில்டு) தொழிலாளர்கள் தேவை. ஊரார் மனது இப்படி இருந்தால் எங்கிருந்து கிடைப்பார்கள் அந்த தொண்ணூற்று ஐந்து பேர்? உடல் உழைப்புத் தேவைப்படும் பணிகளுக்கு பயிற்சி எடுக்க ‘கௌரவம்’ பார்க்காமல் மகனை, மகளை அனுப்பும் மனமாற்றம் இன்றைய சூழ்நிலையில் மிக அவசியம்.

காசு பணமும் பேசுகிறது. தமிழகத்தில் ஒரு இளைஞன் எம்பிபிஎஸ் பட்டதாரி ஆக ஒரு கோடி ரூபாய் வரை ஆகிறது என்கிறது ஒரு செய்தி. எம்பிபிஎஸ் முடித்ததும் வைத்தியம் பார்க்க அனுமதிதர மறுக்கும் நிர்வாகம் அவர்களுக்கு ‘வெளியேறும் தேர்வு’ (எக்ஸிட் டெஸ்ட்) வைக்கிறது. என்னதான் வங்கிக் கடன் கிடைத்தாலும் கடனாளியாக, திறன் இல்லாமல் வாழ்க்கையை தொடங்கும் இளைஞன் பரிதாபத்திற்கு உரியவன். என்ஜினியரிங் (ஐடி) படித்து முடித்த இளைஞர்களும் திறன் இல்லாமல் (அன்எம்ப்ளாயபிள்) திண்டாடுகிறார்கள் என்பது இன்னொரு செய்தி.skill-india

நமது கவலையெல்லாம், 10வது படித்து முடித்த மகன் / மகள் (அந்த தொண்ணுற்று ஐந்து பிரிவை சேர்ந்தவர்கள்) நல்லபடியாக ஏதாவது ஒரு தொழிலில் திறன் பெற்றவர்களாகி தெம்பாக வாழ்க்கையை தொடங்கவேண்டுமே என்பதுதான். அதற்கான வசதி, வாய்ப்பு இவற்றைப் பட்டியலிடுவதுதான் இந்த வார அட்டைப்படக் கட்டுரை.

‘விஜயபாரதம்’ இதற்கு முன்புகூட இரு முறை அந்த தொண்ணூற்றைந்து பேர் பற்றி அக்கறை எடுத்துக்கொண்டு அட்டைப்படக்கட்டுரைகள் வழங்கியுள்ளது என்பதை குறிப்பிட விரும்புகிறோம் (பார்க்க படங்கள்).

பாரத அரசும் நம்மைப் போலவே அந்த தொண்ணூற்றைந்து பேர் பற்றி கவலைப்படுவதாக தோன்றுகிறது. மேக் இன் இந்தியா, ஸ்கில் இந்தியா, முத்ரா வங்கி என்று அடுக்கடுக்காக, கச்சிதமாக அந்த தொண்ணூற்று ஐந்து பேருக்காகவே சுலபமான படிக்கட்டுகளை நிர்மாணித்து வைத்துள்ளது.

அதில் பாதம் பதித்து படிப்படியாக உயர வேண்டியது படித்து முடித்த இளைஞர், யுவதிகளின் பிரியத்துக்குரிய கடமை