பந்திகுறி அரசு தொடக்கப் பள்ளியில் வகுப்பறை மேற்கூரை சீரமைப்பு பணி முடக்கம்: மாணவர்கள் அச்சம்

வேப்பனப் பள்ளி அருகே பந்திகுறி அரசு தொடக்கப் பள்ளியில் வகுப்பறை மேற்கூரை சீரமைப்பு பணி முடங்கியுள்ளதால், மாணவர்கள் அச்சத்துடன் கல்வி பயிலும் அவலம் இருந்து வருகிறது.

வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம் மாதேப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது பந்திகுறி கிராமம். இக்கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 100 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், பள்ளியில் உள்ள 3 வகுப்புகள் உள்ள கட்டிடத்தின் மேற் கூரை சேதமடைந்து, மழைக் காலங்களில் தண்ணீர் கசிந்து, வகுப்பறை கட்டிடம் வலுவிழந்த நிலையில் இருந்தது.

இதையடுத்து, மழைநீர் கசியாத வகையில் வகுப்பறை மேற்கூரையைச் சீரமைக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, வகுப்பறை கட்டிடத்தில் மேற்கூரையைச் சீரமைக்க ஒப்பந்தம் விடப்பட்டு, பணி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது. இதில், முதல் கட்டமாக மேற்கூரையின் தரைதளத்தில் உள்ள ஓடுகள் பிரித்து எடுக்கப்பட்ட நிலையில் கடந்த ஒரு மாதமாக பணி முடங்கியுள்ளது. இதனால், மாணவர்கள் வகுப்பறையில் அச்சத்துடன் கல்வி பயிலும் நிலையுள்ளது.

இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோர் சிலர் கூறியதாவது: பந்திகுறி அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் நலனுக் காக பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகளைப் போராடி பெற வேண்டிய நிலை உள்ளது. வகுப்பறையின் மேற்கூரைச் சீரமைக்கும் பணிக்கு ஒப்பந்தம் எடுத்தவர்கள் பணியை தொடங்கிய நிலையில், கடந்த ஒரு மாதமாக பணியை அப்படியே முடக்கி விட்டனர். தற்போது, மழை பெய்யும் போது, மழை நீர் மேற்கூரை வழியாக அதிகளவில் கசிந்து கட்டிடத்தின் உறுதித்தன்மை கேள்விக் குறியாகி உள்ளது. இதனால், மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்ப அச்சமாக உள் ளது. மழை பெய்யும் நாட்களில் நாங்கள் குழந்தை களை பள்ளிக்கு அனுப்பாமல் இருந்தாலும், ஆசிரியர்கள் அழைத்துச் செல்கின்றனர்.

இதனால், குழந்தைகளின் பாதுகாப்பை நினைத்து அச்சத்துடனே இருக்கும் நிலையுள்ளது. எனவே, மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி உடனடியாக மேற்கூரைச் சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேப்பனப் பள்ளி வட்டார வளர்ச்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த கல்வியாளர்கள் கூறியதாவது: இப்பகுதி மக்கள் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள நிலையில், தங்கள் குழந்தைகளை வறுமைக்கு இடையில் பள்ளிக்கு அனுப்பும் நிலையில், வகுப்பறை கட்டிடத்தின் நிலை மாணவர்கள் பாதுகாப்புக்கு அச்சமூட்டுகிறது. இதனால், மாணவர்கள் இடைநிறுத்தும் நிலையுள்ளது. எனவே, பருவ மழை தீவிரம் அடையும் முன்னர் வகுப் பறை கட்டிட சீரமைப்பு பணியை விரைந்தும், உறுதித் தன்மையுடனும் முடிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.