பணியிலும் பகவான் நாமம்

துகாராம், பாண்டுரங்க விட்டலனின் பரம பக்தர். அவர் பகவானுக்கும், மக்களுக்கும் சேவை செய்து வந்தார். ஒருநாள் பக்கத்து வீட்டில் வசித்த இரு பெண்களுக்கு இடையே பலத்த சண்டை வந்துவிட்டது. இருவரும் ஒன்றாகச் சேர்ந்து ஒரே இடத்தில் வரட்டி தட்டினார்கள். உலர்ந்தபின் அவை ஒன்றோடு ஒன்று கலந்துவிட்டன. யாருடையது எவ்வளவு என்று தெரிந்துகொள்ள முடியாமல் சண்டை வந்துவிட்டது.

துகாராம் அந்த வழியாகப் போனார். சண்டைக்குக் காரணம் புரிந்தது. தான், வரட்டிகளைப் பிரித்துத் தருவதாகச் சொன்னார். குவியலாக வரட்டிகளைச் சேர்த்தார். ஒவ்வொன்றாக எடுத்து காதில் வைத்துக் கொண்டார். தனித்தனியே பிரித்துவிட்டார்.

‘‘அம்மா, உங்கள் இருவரில் ஒருவர் வரட்டி தட்டும் போது ‘விட்டல்,’ என்று சொல்லிக்கொண்டே செய்தீர்களா?’’ என்று கேட்டார். அம்மாதிரி சொன்ன பெண்மணி முன்னால் வந்தாள். அவளிடம் ‘‘இடப்பக்கம் உள்ள குவியல் உன்னுடையது; வலக்கப்பக்கம் உள்ள குவியல் மற்றொருவருடையது”, என்றார்.

வேடிக்கை பார்த்த கும்பல் ‘‘சுவாமி இதை எப்படி பிரித்தீர்கள்?’’ என்று கேட்டனர்.

‘‘நாம் இறைவனின் திருநாமம் சொல்லும் போது நாம அலைகள் சுற்றுப்புறத்தில் முழுவதும் பரவும். நாம அதிர்வுகள் இந்த வரட்டிகளில் உள்ளன. அது கேட்டுப் பிரித்தேன்.’’

நாமஜபம் செய்ய இடம், நேரம் பார்க்க வேண்டியதில்லை. நாமஜபம் நமக்கு நன்மை செய்வதோடு சுற்றுப்புற சூழ்நிலையையும் தூய்மையாக்குகிறது.