பக்தர்கள் நன்கொடையால் அதிக கும்பாபிஷேகங்கள் நடந்துள்ளன: சொல்கிறார் அர்ஜூன் சம்பத்

”தமிழத்தில் அதிகப்படியான கும்பாபிஷேகங்கள் அரசோ, அறநிலையத்துறையோ நிதி ஒதுக்கி நடக்கவில்லை. பக்தர்களின் நன்கொடையால் நடந்துள்ளன,” என, திண்டுக்கல்லில் ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: திண்டுக்கல் மலைக்கோட்டையில் கோயில், கருவறை இருக்கிறது. ஆனாலும் அங்கே பூஜைகள் நடப்பதில்லை. அபிராமி அம்மன், பத்மகிரீஸ்வர் என இரண்டு திருமேனிகளும் யுத்த நேரங்களில் பாதுகாப்பு கருதி மலை மீதிருந்து கீழே கொண்டு வரப்பட்டன. மலைக்கோட்டையில் பிற மதத்தின் வழிபாட்டு தலங்கள் கிடையாது. அந்த இடத்தில் மீண்டும் அபிராமி அம்மன் எழுந்தருள வேண்டும் என்பது மக்கள் எதிர்பார்ப்பு. அரசு முதற்கொண்டு எவருமே இதற்கு எதிர்ப்பு இல்லை. ஆனாலும் 200 ஆண்டுகளுக்கும் மேலாக வழிபாடு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

அயோத்தியில் சட்டப்பூர்வமாக பாலராமர் எழுந்தருளியிருப்பதை போல் திண்டுக்கல் மலைக்கோட்டையிலும் அபிராமி அம்மன், பத்மகிரீஸ்வரை மீண்டும் பிரதிஷ்டை செய்ய வேண்டும். லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் பிரதமர் மோடியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தை தொடங்கியுள்ளோம்.

பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் விதம் இண்டியா கூட்டணியின் தேர்தல் பிரசாரம் இருக்கிறது. தி.மு.க., தமிழகத்திற்கு நல்லது செய்வோம் என பிரசாரம் செய்யவில்லை. மாறாக பா.ஜ., வை விமர்சித்து வருகிறது.

தி.மு.க., கூட்டணியின் 39 எம்.பி., க்களால் தமிழகத்திற்கு எந்த பிரயோஜனமும் இல்லை. மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்ததால் வரவேண்டிய நல்ல திட்டங்கள் நின்று போய் விட்டது. தமிழகத்தில் பிரதமர் மோடி போட்டியிட வேண்டும் என்பதை வேண்டுகோளாக வைக்கிறோம்.

ஆக்கிரமிப்பு போன்ற காரணங்களைக்கூறி பல கோயில் இடிப்பு சம்பவங்கள் நடந்திருக்கிறது. கோயிலை வர்த்தக ஸ்தாபனம் போல் தி.மு.க.,வினர் நடத்திக் கொண்டிருக்கின்றனர். கோயில் வருவாய் அரசியல்வாதிகளுக்குதான் செல்கிறது. தரிசனம் செய்ய கூட பணம் வசூலிக்கின்றனர் என்றார்.