திருவனந்தபுரம் இஸ்ரோ மையத்தை பார்வையிட விமானத்தில் அழைத்து செல்லப்பட்ட அரசு பள்ளி மாணவர்கள்

பல்லாவரம் மறைமலை அடிகள் அரசினர் மேல்நிலை பள்ளியில் பயிலும் மாணவர்களில் சட்ட நுழைவுத் தேர்வு, மெரிட் ஸ்காலர்ஷிப் மற்றும் தமிழ் திறனாய்வுத் தேர்வு போன்ற போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக இப்பள்ளியின் 12 மாணவ, மாணவிகள் (பிப்.17) திருவனந்தபுரத்துக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு அங்குள்ள இஸ்ரோ மையத்தை பார்வையிட்டனர். பள்ளி நிர்வாகமும், ‘தட்ஸ் மை சைல்ட்’ அமைப்பும் இணைந்து இந்தப் பணியை மேற்கொண்டன.
மாணவர்கள் தங்கள் அனுபவங்களைப் பற்றி கூறியதாவது: இது எங்களுடைய முதல் விமானப் பயணம் என்பதால் புதிய அனுபவமாக இருந்தது. மேலும் எங்களை அரசுப் பள்ளி சீருடைகளில் பார்த்த விமான நிலைய அலுவலர்கள், நாங்கள் எங்கே செல்கிறோம் என்பதைத் தெரிந்து கொண்டுஎங்களை வரவேற்று ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்வதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தோம்.
திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வகங்களைப் பார்வையிட்டதோடு, அங்கே நிறுவப்பட்டுள்ள வானியல் தொலைநோக்கி மூலம் பார்த்தது பிரமிப்பாக இருந்தது. இதைச் சிறப்பாக விவரித்த விஞ்ஞானிகளுக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும் எங்களுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் இந்த விமானப் பயணத்துக்கு உதவிய தட்ஸ் மை சைல்ட் (Thats my child) அமைப்புக்கும் பள்ளி நிர்வாகத்துக்கும் நன்றி. இவ்வாறு மாணவர்கள் கூறினர்.