பகீரதனைக் கண்டோமே

‘இவர் சாதனையை மிஞ்சியவர் இல்லை” – ஆச்சார்ய வினோபா

“பகீரதன் பூவுலகுக்கு கங்கையைக் கொண்டு வந்தது போல, இந்த புண்ணிய சீலர் மேற்கத்திய உலகத்தவருக்கு பக்தி கங்கையைக் கொண்டு சென்றுள்ளார் ” – பூஜ்ய விஸ்வேஸ்வர தீர்த்தர்,

“பன்னிரெண்டே ஆண்டுகளில் இவர் ஆற்றிய பணிகளும் அவற்றின் நல் விளைவுகளும் ஆன்மீக வரலாற்றில் இது வரை நாம் கண்டிராத ஒரு அற்புதம்.”  – அடல் பிஹாரி வாஜ்பாய்

இவர்களால் போற்றப் படும் அந்த மகான் யார்?

அவர் தான் ஸ்வாமி பிரபுபாதா என்றழைக்கப்பட்ட அபய் சரண் பக்தி வேதாந்தா. நினைத்துப்
பாருங்கள், 69 வயதில் ஒரு சரக்கு கப்பலில் – வெங்காய- உருளைக் கிழங்கு  மூட்டைகளுக்கு இடையில் படுத்துக்கொண்டு   தன்னந்தனியா ளாய் கையில் வெறும் 7 டாலரை   (அதுவும் இந்திய கரன்சி நோட்டுகளில் சுமார் 35 ரூபாய்) வைத்துக் கொண்டு அமெரிக்காவின் பாஸ்டன் துறைமுகத்தில் சென்று இறங்குகிறார். அது ஆண்டு 1965. அவரிடம் இருந்த தொகை என்னவோ குறைவுதான்; ஆனால், மனதில் கண்ணன் திருவடிகள் மீது இருந்த பக்தியும் நம்பிக்கையும் அளப்பற்றவை. ஒரு வருடம் முழுவதும் பூங்காக்களி லும்  சின்ன சின்ன சங்கங்களிலும், ஒய்.எம்.சி.ஏ போன்ற இளைஞர்கள் கூட்டங்களிலும் பக்தியின் பெருமை யையும் அறம் சார்ந்த வாழ்க்கையின் மேன்மையையும் எடுத்துரைக்கிறார். இடை இடையே தன்னிடம் உள்ள டோலக்கை இசைத்துக் கொண்டு கிருஷ்ண பக்தி பாடல்களை இனிமையான குரலில் பாடுகிறார். தங்க அடைக்கலமும்  எளிய சைவ உணவும் எந்த அன்பர் கொடுக்கிறாரோ  அவற்றை மட்டுமே ஏற்றுக்கொண்டு இன்னல்களைப் பாராமல் இறைவன் அளித்த பணியினை – தன் குருநாதர் கட்டளையை மட்டுமே கருத்தில் கொண்டு தொடர்ந்து முயற்சியில் ஈடுபடுகிறார். ஒரே வருடத்தில், (1966 ஜூலை) இஸ்கான் (International Society for Krishna Consciousness)   என்ற கிருஷ்ண பக்தி இயக்கத்தை நியூயார்க் நகரின் ஒரு சின்ன பலசரக்கு கடையின் முன்னறையில் துவக்கினார். அடுத்த ஆண்டு, சான் பிரான்சிஸ்கோ நகரில் கிளை துவக்கி அங்கு பூரி ஜகந்நாதர் ரதத்தைப் போல வடிவைமைக்கப்பட்ட  யாத்திரையை நடத்திக் காட்டுகிறார். இரண்டு ஆண்டுகளில் அமெரிக்காவில் 6 பெருநகரங்களில் கிளைகள். இளைஞர்கள், பெரியவர்கள், யுவதிகள் என்று மெல்ல மெல்ல இயக்கம் வேகம் எடுத்தது.
பலரும் மேற்கத்திய நடை உடை பாவனைகளைத் துறந்து சந்நியாசம் பெற்று பாரதிய வாழ்க்கை முறைக்கு  மாறினார்கள். பக்தி கானம், கூட்டுப் பிரார்த்தனை, குருகுல வாழ்க்கை, பகவத் கீதை, பாகவத பாராயணம், சாத்வீகமான சைவ உணவு (ஆமாம், வெங்காயம்- பூண்டு என்றபேச்சே கிடையாது), ஏழைகளுக்கு அன்னதானம் என்று தங்களையும் மேம்படுத்திக்கொண்டு சமுதாயத்திற்கும் நல்வழி காட்டினார்கள். பின்னாளில் புகழ்பெற்ற ஆப்பிள் என்ற கணினித் துறை நிறுவனத்தைத் துவக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ், இளமையில் வேலை இல்லாமல் கஷ்டப்பட்டபோது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் 7 மைல் நடந்து சென்று இஸ்கான் கிளையின் நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டுவிட்டு பிரசாதமான மதிய உணவையும் உண்டு பெரும் மனநிறைவைப் பெற்றதை 2005ல்  ஸ்டான் போர்ட் பல் கலைக்கழக மாணவர்களிடம் உரையாடும் போது நினைவு கூர்ந்தார்) அப்படி அமெரிக்காவில் பயிற்சி பெற்ற இளைஞர்களே இங்கிலாந்து, ஐரோப்பா, தென் அமெரிக்கா, கீழை நாடுகளுக்கும் இயக்கத்தைக் கொண்டு சென்றார்கள். அவ்வளவு ஏன், அன்றைய சோவியத் யூனியனுக்கும் துணிச்சலாய் 70களின் மத்தியிலேயே போய்ச் சேர்ந்து விட்டார்கள்!  ஆமாம், ‘எங்கள் நாட்டிலிருந்து ஏசுவை நாடு கடத்திவிட்டோம்’ என்று எந்த கம்யூனிஸ்ட் அதிபர்கள் கொக்கரித்தார்களோ அந்த நாட்டிற்குத் தான். 1896 செப்டம்பர்1ம் தேதி அபய் சரண் ஆகத் துவங்கியபூவுலக வாழ்க்கை, 1977 நவம்பர் 14ம் நாள் பிரபு பாதராக, வெகு பொருத்தமாய் பிருந்தாவனத்தில் கண்ணன் திருவடிகளில் நிறைவுற்றது. இறைவன் கடைக்கண் வைத்தான்,  வாமிஜியின் வாழ்நாளில் 108 கிளைகள். இன்று 500க்கும் மேற்பட்ட  கிளைகள் வழியாய் அவர்கள் ஆற்றும் நற்பணிகள்தான் எத்தனை எத்தனை?உதாரணத்திற்கு ஒன்று: அக்ஷய பாத்திரம் என்ற திட்டத்தின் மூலம் பல மாநிலங்களில் சத்தான காலை உணவு வழங்கி ஏழைக் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தைத் தந்து  கல்வியில் நாட்டத்தையம் ஏற்படுத்துகிறார்கள். இரண்டு: ஐந்து வயது முதல் பன்னிரண்டு வயது வரை உள்ள சிறுவர் சிறுமியர்களுக்கு பண்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தி மன ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கிறார்கள்.