நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூங்கில் பிஸ்கட்

சர்வதேச மூங்கில் தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 18ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. மூங்கில், புல் இனத்தைச் சார்ந்த தாவரம். உணவு, உடை, உறைவிடம் ஆகிய மனிதர்களின் பிரதான தேவைகள் மூன்றையும் நிறைவேற்ற உதவி செய்வது மூங்கில் என்பது குறிப்பிடத்தக்கது. பிரசித்தி பெற்ற பல்வேறு ஆலயங்களிலும் தலவிருட்ச மாக மூங்கில் உள்ளது.

இவ்வருடம் செப்டம்பர் மாதம் 18ம் தேதி உலக மூங்கில் தினத்தையொட்டி மூங்கில் பிஸ்கட்டுகளை பா.ஜ.க. மூத்த தலைவரும் திரிபுரா முதலமைச்சருமான பிப்லப்குமார் தேவ் அறிமுகப்படுத்தினார்.

“இந்த மூங்கில் பிஸ்கட்டுகளை மூங்கில் தளிர்கள் மூலம் உருவாக்கியுள்ளோம் என்பதை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம். இந்த பிஸ்கட் தயாரிக்க கோதுமை மாவை நொறுக்கப்பட்ட மூங்கில் தளிர்களுடன் கலக்கிறோம். (மூங்கில் தளிர்கள் புரதம், வைட்டமின், பாஸ்பரஸ், தாமிரம், துத்தநாகம், மெக்னீசியம், கால்சியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இது ஆன்டி-பயோடிக், வைரஸ் எதிர்ப்பு, புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது.)

 

திரிபுரா முதல்வர் பிப்லப்குமார்

 

மூங்கில் தளிர்கள் நோய் எதிர்ப்பு சக்தி மிக்கவை. அதுமட்டுமல்லாமல் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த பெரிதும் உதவும்” என்று தேவ் கூறினார். இந்த பிஸ்கட்டுகள் திரிபுராவில் ஏராளமாகக் கிடைக்கும் ஆர்கானிக் ‘முலி’ மூங்கில்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. டெராய் மூங்கில் தளிர்களில் இருந்தும் பிஸ்கட்டுகளை தயாரிக்கலாம்.

நோய் எதிர்ப்பு ஆற்றலை வலுப்படுத்துவதில் மூங்கிலுக்கு முக்கியப் பங்குண்டு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் மூங்கில் பயன்பாடு அதிகமாக உள்ளதால் தான் கொரோனாவின் தாக்கம் குறைவாக உள்ளது என்ற கருத்தை புறந்தள்ளி விட முடியாது.

தற்போது, திரிபுரா 3,246 சதுர கி.மீ பரப்பளவில் 21 வகையான மூங்கில் காடுகளை வளர்த்து வருகிறது. 2019 ம் ஆண்டில், 15,000 ஹெக்டேர் பரப்பளவை மூங்கில் சாகுபடிக்கு உட்படுத்தும் ஒரு லட்சிய திட்டத்தை மாநில அரசு மேற்கொண்டது.

இந்த மூங்கிலில் 80 சதவீதம் ‘முலி’ வகையாகும். கூடுதல் நடவடிக்கைகளாக, ஆற்றங்கரை, சாலையோர, தரிசு நிலங்களிலும் மூங்கில் தோட்டங்களை அமைக்க மாநில அரசு ஏற்கனவே முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

முதலமைச்சர் தேவ், தேனை சேமிக்க மூங்கிலால் தயாரிக்கப்பட்ட ஒரு சிறப்பு பாட்டிலையும், மூங்கிலால் தயாரிக்கப்பட்ட தேன் கொள்கலனையும் அறிமுகப் படுத்தினார். மேலும் இந்த இரண்டு தயாரிப்புகளும் மாநிலத்தின் கைவினை நிபுணத்துவத்தின் கிரீடத்தில் மற்றொரு இறகாக மிளிரும் என்று அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். சுயசார்பு பாரதத்தை நோக்கிய பயணத்தில் இது குறிப்பிடத்தக்க மைல் கல் என்று அவர் உறுதிபட உரைத்தார்.