நாட்டு மக்களே எனது பாதுகாப்பு கவசம்: பிரதமர் மோடி பேச்சு

”நான் பிரதமரானதும் காங்கிரசின் கொள்ளை அடிக்கும் உரிமத்தை ரத்து செய்தேன். காங்கிரஸ் கடை மூடப்பட்டுவிட்டது. அதற்காக என்னை திட்டுகிறார்கள். கோடிக்கணக்கான என் நாட்டு மக்கள் எனது பாதுகாப்பு கவசமாக மாறியுள்ளதாக” பிரதமர் மோடி பேசினார்.
சத்தீஸ்கர் மாநிலம் பஸ்டர் பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: சத்தீஸ்கர் மக்களாகிய நீங்கள் இங்கு பா.ஜ., ஆட்சியை அமைத்தது மட்டுமல்லாமல், வளர்ந்த இந்தியாவின் அடித்தளத்தையும் பலப்படுத்தியுள்ளீர்கள். பல ஆண்டுகளுக்குப் பிறகு, பா.ஜ.,வின் நிலையான மற்றும் வலுவான ஆட்சி அமைந்துள்ளது. ஏழைகளின் நலனுக்கு எங்கள் அரசு அதிக முன்னுரிமை கொடுக்கிறது. சுதந்திரத்திற்குப் பிறகு, காங்கிரஸ் அரசு பல ஆண்டுகளாக ஏழைகளின் தேவைகளைப் புறக்கணித்தது. அவர்கள் ஒருபோதும் ஏழைகளைப் பற்றி கவலைப்படவில்லை; அவர்களின் பிரச்னைகளை கூட புரிந்து கொள்ளவில்லை.
பாதுகாப்பு கவசம் சுதந்திரத்திற்குப் பிறகு, நாட்டைக் கொள்ளையடிக்கும் உரிமம் தங்களிடம் இருப்பதாக நினைத்திருந்தது காங்கிரஸ். ஆனால் 2014ல் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், காங்கிரசின் கொள்ளை உரிமத்தை ரத்து செய்தோம். மக்களாகிய நீங்கள் எனக்கு லைசென்ஸ் கொடுத்ததாலேயே இதனை செய்ய முடிந்தது. இப்போது அவர்களின் கடையே மூடப்பட்டுவிட்டது. இதற்காக என்னை திட்டுவார்களா மாட்டார்களா? அப்படியானால் என்னை யார் பாதுகாப்பார்கள்? இந்த கோடிக்கணக்கான என் நாட்டு மக்கள், என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள், இன்று எனது பாதுகாப்பு கவசமாக மாறியுள்ளனர்.
சம்பந்தமில்லை
ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவிற்கான அழைப்பை காங்கிரஸ் அரச குடும்பம் நிராகரித்தது. காங்கிரசின் இந்த செயலை விமர்சித்த தலைவர்களையும் கட்சியில் இருந்து நீக்கியது காங்கிரஸ். அவர்களின் திருப்திக்காக எந்த எல்லையையும் தாண்டுவார்கள். காங்கிரசின் தேர்தல் அறிக்கையிலும் முஸ்லிம் லீக்கின் முத்திரை உள்ளது. காங்கிரசுக்கும் நாட்டு மக்களின் தேவைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பா.ஜ., அரசுதான் எல்லா உத்தரவாதங்களையும் செயல்படுத்துகிறது.
பழங்குடி
பழங்குடியின சமூகத்தை காங்கிரஸ் எப்போதுமே அவமானப்படுத்துகிறது. அதே பழங்குடியின சமூகத்தின் மகள் இன்று நாட்டின் ஜனாதிபதியாக இருக்கிறார். சத்தீஸ்கருக்கு முதல் பழங்குடியின முதல்வரை பா.ஜ., அளித்துள்ளது. பழங்குடியினருக்கென தனி அமைச்சகமும், தனி பட்ஜெட்டும் உருவாக்கிய பா.ஜ., கடந்த 10 ஆண்டுகளில் பழங்குடியினர் நலத்துக்கான பட்ஜெட்டை 5 மடங்கு உயர்த்தியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.