நாடு நெடுக சிறுவர்கள் உயிர் குடிக்கும் ‘நீல திமிங்கல’ விஷம் பரவுது

இருபது ஆண்டுகளுக்கு முன் இண்டர்நெட் வந்த புதிது. பட்டி மன்றம் நடத்துவார்கள். இண்டர்நெட்டால் நண்மையா தீமையா என்று. குண்டு தயாரிக்க, தற்கொலை செய்துகொள்ள, இணையதளத்தை எல்லா வயதினரும் பயன்படுத்த வழி திறந்துவிட்டது என்றெல்லாம் பேசுவார்கள். இத்தனைக்கும் அப்போது நூற்றுக்கு இரண்டு பேர் கூட இண்டெர்நெட் இணைப்பு இல்லாதவர்கள். இன்று நிலைமை தலைகீழ். கம்ப்யூட்டர் தான் வேண்டும் என்பது இல்லை. ஸ்மார்ட் போன் வந்துவிட்டது. அதில் விஷமாக வந்து கொட்டுகிறது விபரீதங்கள். அந்த விஷம் டெங்கு போல, பன்றி காய்ச்சல் போல உயிர்களை குடிக்கத் தொடங்கிவிட்டது. அதுதான் நீல திமிங்கலம் என்ற பெயரில் படையெடுத்து வந்துள்ள ‘விளையாட்டு’. வீட்டில் மகனோ மகளோ மொபைலில் மூழ்கியிருப்பதை குறைக்க பெற்றோர்கள் தலைகீழாக நின்று பார்க்கும் தருணத்தில் இந்த விபரீத விளையாட்டு போதையைவிட கேவலமாக சிறுவர்களிலிருந்து பெரியவர்கள் வரை தன் மரண வலையில் சிக்கவைத்து வருகிறது. அதைப் பற்றிய செய்திகளை படித்து கேட்டு மனம் வெதும்பிய நமது செய்தியாளர் ஜம்புநாதன் இளைய தலைமுறையை விளித்து பின்வருமாறு வேதனைகளை வெளிப்படுத்துகிறார்:

இளைஞனே, நீல திமிங்கலம் (Blue Whale) என்றொரு கணினி விளையாட்டு உங்களை எல்லாம் ஈர்க்கிறதாமே?

ஆனால் போன இரண்டு மூன்று வாரங்களில் நிகழ்ந்த சில கொடுமைகள்தான் என்னைப்போன்ற பெரிசுகளை இந்த மெய் சிலிர்க்கும் விபரீதத்தைப் பற்றி வலைதளத்தில் மேய வைத்தன.

உங்களை எல்லாம் ஆட்டிப்படைத்த அந்த ஒப்பற்ற மனிதன் யார்? அவன் பெயர் பிலிப் புடேகின் என்ற ரஷ்ய இளைஞன். பிலிப் மனவியல் கல்லூரிப் படிப்பை முடிக்காமல் தோற்றவன். 2013ம் ஆண்டு ஞானஒளி பெற்று துவங்கியதுதான் இந்த நீல திமிங்கலம் என்ற விளையாட்டு. இல்லை..  இல்லை.. விபரீதம்.

விளையாடும் முறை தான் என்ன? கணினி மூலமாக (அலைபேசி மூலமாகவும் தான்) ஆர்வமுள்ளவர்கள் இணையத்தில் கணக்கைத் துவங்க வேண்டும். இந்த விளையாட்டு வீரருக்கு வலைதள நடத்துனர் (administrator) சில சில சவால்களை நாள்தோறும் வீசுவார்.

சவால்கள் எப்படி இருக்கும்?

* அவர்கள் அனுப்பும் சில கர்ண கொடூரமான பாடல்களைத் தொடர்ந்து குறிப்பிட்ட கால அளவிற்கு கேட்கவேண்டும்.

* சகிக்க முடியாத திகில் காட்சிகளை கண்டு களிக்க வேண்டும்.

* பாலத்தின் சுவற்றினில் / வீட்டு மொட்டை மாடியின் சுவற்றின் விளிம்பில் நிற்கவேண்டும்.

* பளு தூக்கியில் அந்தரத்தில் தொங்க வேண்டும் என்று 50 நாட்கள் வரை நீள்கிறது. (மன்னிக்க வேண்டும் வாசகர்களே! இதற்கு மேல் அந்த பட்டியலைத் தொடர என் தொழில் தர்மம் தடுக்கிறது).

இந்த உசுப்பேற்றல் மெல்ல மெல்ல வளர்ந்து விளையாடும் அந்த இளைஞனைத் தற்கொலைக்கு தள்ளுமாம்.

இந்த விளையாட்டை அறிமுகப்படுத்தியதற்கு பிலிப் கூறும் காரணம் என்ன?

மன வலிமையற்றவர்கள் என் பார்வையில் வாழ தகுதியற்றவர்கள். அவர்களை 50  நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக சோதித்து, கடைசியில் விளையாடும் நபரின் மனநிலையைப் புரிந்து கொள்கிறேன். அதன் அடிப்படையில் உச்சகட்ட போட்டியாக அவருக்கு ‘தற்கொலைக்குத் தயாரா?’ என்று சவால் விடுவேன். அதனை ஏற்று செயல்படுபவர் ஒரு மனவலிமையற்ற கோழை. இந்த உலகிற்கு தேவையில்லாத குப்பை. அகற்றப்பட வேண்டியவர்.”

அடடா, என்ன ஒரு சமூக சேவை?!

இளைஞனே, இத்தகைய மேன்மையான விஞ்ஞான பரிசோதனையில் நீ ஒரு எலி (Guinea Pig) என்பதனை உணர்கிறாயா?

உனக்கு வேண்டாமே இந்த விபரீதம் என்று புத்திமதி சொன்னால் பெரிசு, வாயைப் பொத்து என்பாய்.

சரி அரசாங்கம் இதனைக் கண்டறிந்து நிறுத்தச் சொன்னால் உடனே ‘Moral Policy’ அறநெறிக் கண்காணிப்பு என்று இடதுசாரிகளும் ஊடகங்களும் கூப்பாடு போடும்.

கடந்த 20 நாட்களில் மட்டும் 10 முதல் 15 வரை வயதுள்ள 4 சிறுவர்கள் (திருவனந்தபுரம் – 1, மும்பை – 1, இந்தூர் – 1, மேற்கு வங்கம் – 1) இந்தியாவில் மட்டும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஒரு 10 வயது சிறுவன் பூனாவில் கடைசி நிமிடத்தில் காப்பாற்றப் பட்டுள்ளான். இந்த எல்லா நிகழ்வுகளிலும் பொதுவான ஒரு காரணம் என்னவென்றால் அந்த சிறுவர்கள் எல்லோரும் இந்த வீர விளையாட்டில் ஈடுபட்டவர்கள்.

இளைஞனே, இளைஞியே, இந்த இடத்தில் சின்ன வயதில் படித்த ‘Pied Piper of Hamelin’ என்ற கதைதான் நினைவுக்கு வருகிறது. அந்தக் கதையில் குழலிசைக்கும் நாயகன் தனக்கு சொன்னபடி வேலையை முடித்ததும் கூலி கொடுக்க மறுத்த ஊர்மக்களைப் பழிவாங்க / பாடம் புகட்ட அந்த ஊரில் சிறுவர் சிறுமிகளைக் குழலூதி மயக்கி கூட்டம் கூட்டமாக பின்தொடரச் செய்து கடைசியில் ஆற்றில் இறக்கி மூழ்கடித்துக் கொல்லுவான்.

அதைப்போலத்தான் பிலிப் புடேகின் திரை மறைவில் இருந்துகொண்டு உங்களை எல்லாம் ஆட்டிப் படைத்திருக்கிறான்.

பிற்செய்தி:

மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நவீஸ், கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டிக்கொண்ட படி, நீல திமிங்கலம் விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ளது. பாரத அரசு, கூகுள், முகநூல், யாஹு போன்ற இணையதள சேவை நிறுவனங்களுக்கு இந்த வலைதளத்திற்கு இணைப்பினைத் துண்டிக்கும்பதி அறிவுறுத்தியிருக்கிறது.

பெற்றோர்களே, உங்கள் மகன் அல்லது மகளின் கைகளில் நீங்கள் வாங்கிக் கொடுக்கும் மடிகணினியோ அலைபேசியோ எங்கெல்லாம் அவர்களை கொண்டு சேர்க்கின்றன என்று அறிவீர்களா? பத்து வயது பையனுக்கு எதற்கு ஸ்மார்ட்போன்? அவன் பள்ளியில் டியூசன் படித்துவிட்டு அவனை அழைத்து வர தொடர்பு கொள்ள தேவைப்படுகிறது என்று சொல்லுவீர்கள். அப்படியே ஆனாலும் ஒரு எளிய ஆரம்பநிலை அலைபேசி போதாதா?

போன்கள் ஸ்மார்ட் ஆகிவிட்டன; நாம் எப்போது ஸ்மார்ட் (சமர்த்தர்கள்) ஆகப் போகிறோம்?

 

****************

நீலத்துக்கு மாற்றாக இளஞ்சிவப்பு?

மடமடவென்று மகாராஷ்ட்ரா, கோவா, கேரளா, டில்லி என்று நாடு தழுவிய அளவில் நீலத் திமிங்கிலம் சின்னஞ்சிறுவர்களின் இளைஞர்களின் இன்னுயிரை குறிவைத்து குடிக்கத் தொடங்கிவிட்டது. அந்தந்த மாநிலங்களின் காவல் துறை டிஜிபிக்கள் மக்களை உஷார்படுத்தி வருகிறார்கள். மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், வாட்ஸ்ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் முதலிய சமூக வலைதளங்களில் இருந்து நீலத் திமிங்கில இணைப்பு முகவரியை நீக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக அந்த துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிலிருந்து நீலத் திமிங்கிலம் புறப்பட்டது என்றால் அமெரிக்காவிலிருந்து இளஞ்சிவப்பு திமிங்கிலம் புறப்பட்டிருப்பதாக தகவல். இது ஆக்கப்பூர்வமான 50 கட்டங்களில் தன்னையும் குடும்பத்தையும் ஊரையும் தேசத்தையும் நேசிக்க ஒவ்வொருவருக்கும் பயிற்சி கொடுக்கிறதாம்.

 

****************

மூளைச் சலவை செய்யும் நீலத் திமிங்கலம்

உறுதிப்படுத்துகிறது உச்ச நீதிமன்றம்

25 வயது நிரம்பிய ஹிந்துப் பெண் அகிலா, ஷபின் ஜஹான் மூலம் மூளைச் சலவை செயப்பட்டு ஹாடியா என பெயர் மாற்றம் செது கொண்டு, இஸ்லாத்துக்கு மாறினார். அதன் பின் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேரும் அளவுக்கு மாறினார்… என்ற அந்தப் பெண் அகிலாவின் புகாரை விசாரித்த கேரள உயர் நீதிமன்றமும் ஒப்புக் கொண்டது.

ஆனால், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் ஷபின் ஜஹானுக்காக வாதாடிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான கபில் சிபல், அந்தப் பெண் மேஜர் தான் என்றும், தாமாக சிந்தித்து முடிவு எடுக்கும் திறன் கொண்டவர் என்றும், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளவுக்கு அதிகமாகக் கற்பனை செது கொண்டு இந்த வழக்கை அணுகுகிறது என்றும் வாதாடினார்.

அப்போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.ஸ்.கெஹர், நம் நாட்டில் ‘ப்ளூ வேல் சேலஞ்ச்’ என்ற ஆன்லைன் விளையாட்டு குறித்து கேள்விப் பட்டிருக்கிறீர்களா? சிறியவர்களைப் பற்றி என்ன பேச்சு வேண்டிக் கிடக்கிறது, பெரியவர்கள் கூட அதற்கு அடிமையாகிக் கிடக்கிறார்கள். அந்த விளையாட்டைப் பார்ப்பவர்கள் தாங்களும் தற்கொலை செதுகொள்ளும் எண்ணத்தைப் பெறுகிறார்கள். பலர் அதன் மூலம் தற்கொலை செதுகொள்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.

நீதிபதியின் இந்தக் கருத்தானது, மேஜர் என்பதற்காக அந்தப் பெண் தானாக விரும்பி ஒருவரைத் திருமணம் செது கொண்டார் என்று கூறுவதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது. ஒரு கருத்துக்கு, ஒரு கருத்தியல் சார்ந்த இயக்கத்துக்கு அல்லது ஒருவருக்கு அடிமைப்பட்டு மனம் மாறவோ, மதம் மாறவோ வயது ஒரு காரணியாகக் கொள்ள முடியாது என்பதும், ஒருவரின் மனத்தை ஈர்த்து மயக்கும் அல்லது அடிமைப்படுத்தும் எந்த ஒரு விளையாட்டோ, மத மாற்றமோ, கருத்தியல் சார்போ, திருமணமோகூட, வயது வித்தியாசமின்றி மனத்தை மட்டுமே மயக்கி தற்கொலைக்குத் தூண்டும் விளையாட்டைப் போன்றது என்பதைச் சோல்லாமல் சோன்னது உச்ச நீதிமன்றம்.