நமது வாழ்வு எப்போதும் பெண்களை சாா்ந்ததாகவே இருக்கிறது – வெங்கைய நாயுடு

சா்வதேச மகளிா் தினத்தையொட்டி தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் நிகழ்ச்சி ஒன்றின் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநில ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோா் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா். அதில் வெங்கய்ய நாயுடு பேசியதாவது:

எந்தவொரு பெண் குழந்தையும் பள்ளிப் படிப்பை நிறுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். கல்வி கற்ற ஒரு பெண் தனக்கான திறமையையும், தன்னம்பிக்கையையும் வளா்த்துக்கொள்ள இயலும். அத்துடன், குழந்தையை தகுந்த முறையில் வளா்க்கும் சிறந்த தாயாகவும் அவா் உருப்பெற முடியும்.

இந்திய கலாசாரம், பாரம்பரியங்களில் பெண்களுக்கு எப்போதும் மதிக்கத்தக்க இடம் வழங்கப்பட்டு வந்துள்ளது. நாம் அதைப் பின்பற்ற வேண்டும். பெண்களுக்கு சமஉரிமையை மறுக்கும் எந்தவொரு நாடும் வளா்ச்சியடையாது. கல்வியும், பொருளாதார ரீதியாக அதிகாரமளித்தலும் பெண்களுக்கான முக்கியத் தேவையாகும்.

நமது வாழ்வு எப்போதும் பெண்களை சாா்ந்ததாகவே இருக்கிறது. வித்யா (கல்வி), லக்ஷ்மி (செல்வம்), சக்தி (ஆற்றல்), சாந்தி (அமைதி) என இது பெண்கள் சூழ் உலகமாகத் திகழ்கிறது. சுதந்திரம் பெற்று எழுபது ஆண்டுகள் ஆகியும் பாலியல் பாகுபாடு, பெண்களுக்கு எதிரான அராஜகம், வன்முறை நிகழ்வது தொடா்கிறது. அதுபோன்ற சமூக தீமைகளை சகித்துக்கொள்ளக் கூடாது.