ஜனாதிபதியிடம் ‘நாரி சக்தி’ விருது பெற்ற சாதனை பெண்கள்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண் சாதனையாளர்களுக்கு ‘நாரி சக்தி புரஸ்கர்’ விருதினை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் ‘நாரி சக்தி புரஸ்கர்’ விருதுகள் வழங்கப்பட்டன. டில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருது வழங்கினார்.

இந்திய விமானப்படையில் முதன்முதலாக போர் விமானங்களை இயக்கிய பெண் விமானிகளான மோகனா ஜிட்டர்வால், அவனி சதுர்வேதி, பாவனா காந்த் ஆகியோர் உட்பட மொத்தம் 15 பேருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அதில் உலகெங்கிலும் தடகள விளையாட்டில் 30க்கும் மேற்பட்ட பதக்கங்களை பெற்ற, சண்டிகரை சேர்ந்த மன்கவுர் என்பவரும் இந்த விருதினை பெற்றார்.

சமூக அடிப்படையிலான அமைப்பின் மூலம் பழங்குடி பெண்கள், விதவைகளின் வளர்ச்சிக்காக பணியாற்றிய தெலுங்கானாவை சேர்ந்த பதலா பூதேவி, ஜம்மு-காஷ்மீரின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை புதுப்பிக்க மேற்கொண்ட முயற்சிக்காக, ஸ்ரீநகரை சேர்ந்த அர்பா ஜான், படிப்பில் அசத்தி பிரதமர் மோடியிடம் பாராட்டை பெற்ற கேரளாவை சேர்ந்த மூதாட்டிகள் பகீரதி அம்மாள், கார்த்தியாயிணி அம்மாள் உட்பட 15 பெண்களுக்கு ராம்நாத் கோவிந்த் விருது வழங்கினார். விழாவில் ஜனாதிபதியின் மனைவி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.