நமது மூதாதையரின் நீர் மேலாண்மை

வரவு எட்டணா செலவு ஐந்தணா!

தமிழகம் தற்சமயம் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. போதிய அளவு நீர் இல்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் போராட்டத்தில் குதித்தனர். இதன் விளைவாக தமிழகம் தற்போது வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையில் தமிழகம் வறட்சி மாநிலமா? அது வறட்சி மாநிலம் என்பது உண்மையானால் எப்படி பழங்காலத்தில் மக்கள் இங்கு வசிக்க முடிந்தது. யானை கட்டி போர் அடிக்கும் பாண்டியநாடு” என்று வறட்சியில் இருந்த மக்களால் எப்படி பெருமையாக பாடமுடிந்தது? கண்ணுக்கெட்டும் தூரம் வரை பச்சை போர்வையை போர்த்தியது போல தஞ்சை மாவட்டம் எதனால் ஜொலித்தது?

இந்த கேள்விகளுக்கான விடைகளை நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையிலிருந்துதான் நாம் தெரிந்துகொள்ள முடியும்.

தென்பாரதத்திற்கு நீராதாரமாக விளங்குவது தென் மேற்குப் பருவ மழை. அரபிக் கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு நிலையால், மழைக்காலத்தில், மேகங்கள் கேரளத்தில் நீரை கொட்டித்தீர்க்கும்.

தமிழகம் மேற்குத்தொடர்ச்சி மலைகளின் கிழக்கே அமைந்துள்ளதால், மேகங்கள் கேரளாவிலேயே தங்கிவிடும். எனவே தமிழகத்திற்கு தென்மேற்கு பருவ மழையின்போது, பெரிய அளவில் நீர் கிடைக்காது.

அதனால் தமிழகம் நம்பியிருப்பது, குறைவான நாட்கள் மட்டுமே மழைபொழியும் வடகிழக்கு பருவ காலத்தையே.

இந்த பருவம் ஒரு ஆண்டுக்கு 15 முதல் 20 நாட்கள் வரைதான்.

இந்த குறுகியக்கால மழைப்பொழிவை வைத்துதான் இங்கு வாழ்ந்த முன்னோர்கள், இந்த பூமியை வளமாக மாற்றியுள்ளனர்.

ஆச்சர்யமாக உள்ளதா? நம்பமுடியவில்லையா? நம்பித்தான் ஆகவேண்டும். இந்த மழைதான் நம் விவசாய  செழிப்பிற்கு ஆதாரமாக இருந்துள்ளது. தமிழகத்தின் வளம் மழை நீரை விவசாயத்திற்கு பயன்படுத்தியதால் ஏற்படவில்லை. இந்த செழிப்பிற்கான சூட்சுமம் மழையின் நீரை அவர்கள் சேமித்த முறையில் தான் அடங்கியுள்ளது.

நம் மாநிலத்தின் நில அமைப்பு மேற்கிலிருந்து, கிழக்காக இறங்குமுகமாக அமைந்துள்ளது. எனவே இதை உணர்ந்த நம் முன்னோர்கள், பிரம்மாண்டமான ஏரிகளை வரிசையாக கட்டினார்கள். ஒவ்வொரு ஏரியையும் கால்வாய்கள் மூலமாக இணைத்தனர், இதுதவிர நதியிலிருந்தும் பல வாய்க்கால்களை வெட்டி வழிகளை அமைத்தனர்.

இதனால் மழைக்காலத்தில் ஏரிகள் நிரம்பத்தொடங்கும். ஒரு ஏரி நிரம்பினால், அதிலிருந்து வெளிவரும் உபரிநீர் வாய்க்கால்கள் மூலமாக அடுத்த ஏரியை வந்தடையும்.  இப்படியாக தமிழகத்தின் பல பகுதிகளில் நீர் சேமிக்கப்படும். ஒருவேளை இங்கு பருவமழை பொய்த்தாலும்கூட, கர்நாடகத்தில் மழைபெய்தால், காவிரி ஆறு மூலம் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பிவிடும். இது தவிர பல கோயில்களைக் கட்டி அவற்றில் பெரிய குளங்களை அமைத்தனர். எனவே, வறட்சி ஏற்பட்டால் கூட, அதை ஈடு செய்யும் அளவிற்கு நிலத்தடி நீர் உதவியது. இந்த ஏரி, குளம் அணைகள் முதலிய அனைத்து நீர் சேமிப்பு கட்டுமானங்களும் முறையாக பராமரிக்கப்பட்டு வந்தன. இதுபோன்ற சீரான நடவடிக்கையின் மூலம்தான். வெப்ப பூமியான தமிழகத்தை பசுமை பூமியாக மாற்றியமைத்தனர்.

ஆனால் இந்த நீர்நிலைகளின் தற்போதைய நிலை என்ன? வறட்சி என்பது உண்மையில் இயற்கை நம்மை கைவிடுவதனால் நிகழும் நிகழ்வல்ல. இயற்கையின் தன்மையைப்பற்றி புரிந்துக்கொள்ளாமல் இருப்பதால் ஏற்படும் விளைவே வறட்சி.

நம் தமிழ் சரித்திர நூல்கள் எதிலாவது, பெரும் வறட்சியால் மக்கள் மடிந்தார்கள் என்ற செய்தியை படித்ததுண்டா? ஆங்கிலேயர்களின் ஆட்சியின்போது, இந்த ஏரிகள், வாய்க்கால் மதகுகளை கட்டுப்படுத்துதல், தூர்வாருதல், போன்ற செயல்கள் செய்யும் அதிகாரத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டார்கள். இப்படி செய்ததால் மழைக்காலத்தின் தன்மை பற்றியும் நீர் சேமிப்பு பற்றியும் நமக்கு இந்த அறிவும் குறையத் தொடங்கியது. ஆங்கிலேயரும் பல ஏரிகளை கவனிக்காமல் விட்டுவிட, அவை வறண்டு போனது. ஏரிகள் வாய்க்கால்கள் மூலமாக ஒரு சங்கிலித் தொடர்போல இருந்தது என முன்பே குறிப்பிட்டிருந்தோம் அல்லவா? அந்த சங்கிலி தொடர்கள் அறுபட்டு, வாய்க்கால்கள் மறையத்தொடங்கியது. வறண்ட ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டன. ஒன்றிரண்டு இடங்களில் ஏரிகள் தப்பினாலும், நீர் வினியோகத்திற்கும், விவசாயப்பாசனத்திற்கும்  நீர் அளவு போதாமல் திண்டாடவேண்டி வந்தது. இதனால்தான் முதன் முதலில் தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டது.

சுதந்திரத்திற்குப் பிறகாவது, இவற்றை சீர்செய்திருக்கலாம். ஆனால் அதைச்செய்யாமல், இன்னும் ஒரு படி மேலேபோய், ஆற்று மணலைக் கொள்ளையடிக்க ஆரம்பித்தனர். விளைவு நீர் வழியில் மாற்றம் ஏற்பட்டு, வெள்ளம் வரத்தொடங்கியது வெள்ளம் வடிந்தால், மீண்டும் வறட்சி தொற்றிக்கொண்டது. இதையெல்லாம் சிந்திக்காமல் நாம் இருப்பதால்தான் தமிழகம் இன்று வறட்சி மாநிலப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இனியாவது ஏரி குளங்களை பாதுகாப்போம் தமிழகத்தை வறட்சியில் இருந்து மீட்போம்.

 

உழவர்களின் உழவாரம்

ஏரி, குளம் போன்றவற்றை தூர்வாரி பராமரிப்பதற்கு, குடிமராமத்து என்று பெயர். வருடத்திற்கு ஒருமுறை கோடைக்காலத்தில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும். வீட்டுக்கு ஒருவர் என மக்கள் அனைவரும் சேர்ந்து ஏரியின் கரைகளை பலப்படுத்துதல், மண் அரிப்பை அடைத்தல், ஏரிகளின் கல் படுகைகளை பலப்படுத்துதல் ஆழத்தை அதிகப்படுத்துதல், ஏரியில் வளர்ந்துள்ள தேவையற்ற செடிகொடிகளைக் களைதல், நீர்நிலையிலிருந்து, வரும் கால்வாய்களை சீர்செய்தல் போன்ற பணிகளைச் செய்து முடிப்பர்.