ஆர்.எஸ்.எஸ் சாமான்யர்களையும் அசாதாரமானவர்களாக மாற்றுகிறது. அந்தவகையில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து, சமூகப் பணியும் செய்து, தனது குடும்பத்தையும் திறம்பட நடத்தி, சங்க கார்யகர்த்தர்களுக்கு
முன்னுதாரணமாக செயல்பட்ட, முத்துஸ்வாமி ஜியைப் பற்றி இந்த இதழில் அறிவோம்…
கோயம்புத்தூரில், 1959 மார்ச் மாதம் கிருஷ்ணன் – பழனியம்மாளிற்கும் மகனாகப் பிறந்தார், முத்துஸ்வாமி ஜி. இவருடன் பிறந்தவர்கள் ஒரு தம்பி மற்றும் ஒரு தங்கை. கோவை சாய்பாபா காலனி டி.ஏ. இராமலிங்கம் செட்டியார் பள்ளியில் ஆரம்பக் கல்வியையும், உயர்நிலைக் கல்வியையும் படித்தார். பிறகு கவுண்டம்பாளையம் அடுத்துள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் (ITI) பயிற்சி முடித்து, 1979ல் திருச்சியில் உள்ள பாய்லர் தொழிற்சாலையில் (BHEL) பயிற்சியாளராக சேர்ந்து, 1982ம் ஆண்டில் நிரந்தரத் தொழிலாளியானார்.
1984ல், பாய்லர் தொழிற்சாலையில் நடைபெற்ற தொழிற்சங்கப் போராட்டத்தால், பதட்டமான சூழ்நிலை நிலவியது. நண்பர் மூலமாக பாரதிய மஸ்தூர் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தார். 1984 முதல், சங்க ஷாகாவில் முக்கிய சிக்ஷக் பொறுப்பு வகித்தார். 1986 ஜனவரியில் செயற்குழு உறுப்பினர் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, தொழிற்சங்கப் பணியை செய்தார்.
1986ம் ஆண்டு, திருவெறும்பூரில் ஒரு பயிற்சி வகுப்பு இருக்கிறது, வாருங்கள் என்ற முருகன் ஜியின் அழைப்பின் பேரில் சென்றார். அந்த நிகழ்ச்சி தான், முத்துஸ்வாமி ஜியின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அந்த பயிற்சி வகுப்பில், இராம கோபாலன் ஜி பேசிய விஷயங்கள் புதியதாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. சமுதாய நிலையை புரிந்து கொண்டு, இயக்கப் பணிக்கு அதிக நேரம் தர வேண்டும் என தீர்மானித்தார்.
1986ல், வடலூரில் முதலாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமை முடித்த பிறகு, 1987ல் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள தெனாலியில் இரண்டாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமை முடித்தார். 1992ல், நாக்பூரில் மூன்றாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாம்களை முடித்துள்ளார்.
1991ம் ஆண்டு திருச்சி ஜில்லா பௌத்திக் பிரமுக், 1995ம் ஆண்டு முதல் பத்தாண்டுகள் கரூரும் இணைந்த திருச்சி ஜில்லாவின் கார்யவாஹ் (செயலாளர்), 2005ல் திருச்சி விபாஹ் (கோட்டம்) பௌதிக் பிரமுக், 2006 முதல் மூன்றாண்டுகள் திருச்சி விபாஹ் கார்யவாஹ், 2008 முதல் 13 ஆண்டுகள் தென் தமிழக பிராந்த பிரச்சார் பிரமுக், 2021 முதல் மூன்றாண்டுகள் திருச்சி விபாஹ் சங்கசாலக் (தலைவர்) என பல்வேறு பொறுப்புகள் வகித்த பின்னர், தற்போது தென்தமிழகத்தின் குடும்ப ப்ரபோதன் பொறுப்பில் சங்கப்பணி செய்து வருகிறார். அதோடு கூட, சங்கத்தின் சார்பாக “புண்யபூமி” என்ற பெயரில் விழிப்புணர்வு பத்திரிகை வெளியிடப்பட்டு வருகிறது. கடந்த ஐந்தாண்டுகளாக அதன் ஆசிரியராகவும் இருந்து வருகிறார்.
1984ல், மனோன்மணி அம்மாளை திருமணம் செய்த முத்துஸ்வாமி ஜிக்கு நந்தினி, இந்திராணி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் முடிந்தது. பெரிய மகள் திருச்சியிலும், இளைய மகள் அமெரிக்காவிலும் வாழ்ந்து வருகின்றனர். முத்துஸ்வாமி ஜியின் மனைவி மனோன்மணி அம்மாளும், சங்க நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். தான் குடியிருந்தப் பகுதியில் இருக்கும் பெண்களை ஒருங்கிணைத்து “சேவா பாரதி” சார்பாக மகளிர் சுய உதவிக் குழுவிற்கு தலைமை ஏற்று வழிநடத்தி வந்தார்.
இவர்களது மூத்த மகள் நந்தினி சென்னையில் குடியிருந்த விருகம்பாக்கம் பகுதியில் சேவா பாரதி சார்பாக பண்பாட்டு வகுப்பு நடத்தி வந்தார். கொரோனா ஊரடங்கு காலத்தில் இணையதளம் மூலமாக நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு பண்பாட்டு வகுப்பு நடத்தி வந்தார். இளைய மகள் இந்திராணி, அமெரிக்காவில் ஹிந்து தர்மத்தின் விஷேச நாட்களில், அருகாமையில் உள்ள ஹிந்துக் குடும்பங்களை ஒருங்கிணைத்து, நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். சமீபத்தில் சித்திரை புத்தாண்டு தினத்தில் பத்து ஹிந்து குடும்பங்கள் இணைந்து புத்தாண்டு கொண்டாடி உள்ளனர்.
1997ல் திருச்சியில் நடைபெற்ற முத்துஸ்வாமி ஜியின் இல்ல கிரஹப் பிரவேசத்தில், சங்கத்தின் மூத்த பிரச்சாரக் சூர்யநாராயணராவ் ஜி, கிருஷ்ணப்பா ஜி மற்றும் ஜெயதேவ் ஜி ஆகியோருடன் அன்றைய அனைத்து மாநில மற்றும் கோட்ட பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு ஆசீர்வாதம் செய்தது, தனக்கு கிடைத்த பெரும் பாக்கியம் என்று உள்ளம் பூரிப்படைகிறார். தனது அறுபது வயது பூர்த்தி ஆனதும் பணி நிறைவு பெற்று, 2022 முதல் கோவை சிங்காநல்லூர் பகுதியில் வசித்து வருகிறார்.
அகில பாரத சர்கார்யவாஹ் பொறுப்பில் இருந்த பையாஜி ஜோஷி, மூத்த பிரச்சாரக் இராம கோபாலன் ஜி, அகில பாரத பிரச்சார் பிரமுக் பொறுப்பில் இருந்த மன்மோகன் ஜி வைத்யா, அகில பாரத குடும்ப ப்ரபோதன் சம்யோஜக் ரவீந்தர ஜோஷி ஆகியோர் முத்துஸ்வாமி ஜியின் இல்லத்திற்கு வருகை புரிந்துள்ளனர்.
தனது நண்பர் மூலமாக சங்கத்திற்கு அறிமுகமாகி, சங்கப் பணியை உணர்ந்து சங்க வேலை செய்து, பல்வேறு பொறுப்புகள் வகித்து, தற்போதும் சங்கப் பணி செய்து வரும் முத்துஸ்வாமி ஜி, நம் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமான ஸ்வயம்சேவக்காக திகழ்கிறார்.