அமெரிக்காவின் சிகாகோவில், 1886ம் ஆண்டு, மே 1 அன்று நடைபெற்ற போராட்டத்தினால் தான், தொழிலாளர்களின் வேலை நேரம் 8 மணி நேரமாக குறைக்கப்பட்டதாக கம்யூனிஸ்டுகள் பொய் சொல்கின்றனர். ஆனால், அதற்கு 19 ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது 1867-ஆம் ஆண்டு அமெரிக்க அரசு வேலை நேரத்தை 8 மணி நேரமாக குறைத்து சட்டத்தை நிறைவேற்றியது. அந்த சட்டத்தை பல்வேறு மாகாண அரசுகள் அமல்படுத்தின. அதன் பின்னர், 1884 ஆம் ஆண்டு, தொழிலாளர்களின் வேலை நேரம் 8 மணி நேரம் என்பதை கட்டாய சட்டமாக அமெரிக்க அரசு கொண்டு வந்தது.
8 மணிநேர வேலை சட்டத்தை அமல்படுத்தாத “மெக்கார்மிக் ரிப்பேர் பிளான்ட்” என்ற நிறுவனத்தில் செயல்படும் பல தொழிற்சங்கங்களில் ஒன்றான “ஒர்க்கிங் மென் பார்ட்டி” என்ற சங்கம், 1886ம் ஆண்டு மே 1 அன்று, 8 மணி நேர வேலை சட்டத்தை அந்த நிறுவனத்தில் அமல்படுத்த வேண்டும், வேலை நேரத்தை குறைத்து ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்ற கோஷத்துடன் ஒரு பேரணியை நடத்தியது. அந்தப் பேரணி அமைதியாக நடந்து முடிந்தது. அன்றைய தினத்தில் எவ்வித அசம்பாவிதமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதே நிறுவனத்தில் இருந்த மற்றொரு சங்கத்திற்கும், ஒர்க்கிங் மென் பார்ட்டி என்ற சங்கத்திற்கும் மே மாதம் 3 மற்றும் 4 தேதிகளில், பிரச்சினை ஏற்பட்டு கலவரம் நடைபெற்றது. கலவரத்தை தடுக்க வந்த 7 காவல்துறையினரும், 4 தொழிலாளர்களும் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், 4 தொழிலாளர்கள் தூக்கிலிடப்பட்டனர். இந்த அசம்பாவிதங்கள், இரு தொழிற்சங்கங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலேயன்றி, 8 மணிநேர வேலைக்கானது அல்ல என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
உண்மை இப்படி இருக்க, வேலை நேரம் 8 மணி நேரம் என சட்டம் இயற்றப்பட்டது, மே 1 அன்றைய போராட்டத்தினால் தான் என, கம்யூனிஸ்டுகள் பொய் சொல்லி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க மறுபுறம், அமெரிக்காவில் 8 மணி நேர சட்டம் வருவதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பாகவே நமது நாட்டில் 1862 ஆம் ஆண்டு மே மாதம், ஹவுரா ரயில்வேயின் 1,200 தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை நாளைக் கோரி, 3 நாட்கள் தொடர்ச்சியாக வேலைநிறுத்தம் செய்தனர் என்ற தொழிற்சங்கப் போராட்ட வரலாறுகள், தற்போதைய தலைமுறைக்கு சொல்லித் தரப்படவில்லை என்பது துரதிஷ்டம் ஆகும். மேலும், சிகாகோ மோதல் சம்பவத்தை முன்னிலைப்படுத்தும் கம்யூனிஸ்டுகள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஹவுரா வேலை நிறுத்தத்தை முன்னிலைப்படுத்த மறுப்பது ஏன்? என்ற கேள்வியையும், தொழிலாளர்கள் எழுப்பாமல் இல்லை.
2007 மார்ச் 14 அன்று, மேற்கு வங்கத்தை ஆண்ட புத்ததேவ் பட்டாச்சார்யா தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு, நந்திகிராம் என்ற பகுதியில் “சிறப்பு பொருளாதார மண்டலம்” அமைப்பதற்கு விவசாய நிலங்களை, விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக பலவந்தமாக அபகரித்து, டாடா மற்றும் இந்தோனேஷிய சலீம் நிறுவனங்களுக்கு கொடுத்தது. தங்களது வாழ்வாதாரமான நிலத்தை விட்டுக்கொடுக்க மறுத்த விவசாயிகளை கம்யூனிஸ்ட் குண்டர்களும், மாநில காவல்துறையினரும், சுமார் 14-க்கும் மேற்பட்ட விவசாயிகளை சுட்டு வீழ்த்தினர். பெண்களை மானபங்கப்படுத்தினர். சிகாகோ சம்பவத்தைவிட, மோசமானதாக நந்திகிராம் நிகழ்வுகள் இருப்பதனால், நந்திகிராமில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட மார்ச் 14 தினத்தை, ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் தினமாக கம்யூனிஸ்கள் கடைப்பிடிப்பார்களா? என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.
கம்யூனிஸ்டுகள் தங்களது அரசியல் அதிகார பலத்தை பயன்படுத்தி, பல நாடுகளில் மே 1 தொழிலாளர் தினம் என பலவந்தமாக திணித்தனர். பாரத நாட்டிலும், மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்கு கம்யூனிஸ்டுகளின் தயவு தேவைப்பட்ட ஒரு சில மாநிலங்களில், மே 1 மாநில அரசின் விடுமுறை நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மத்திய அரசும், பெரும்பாலான மாநில அரசுகளும், கம்யூனிஸ்டுகள் சொல்லக்கூடிய மே தினத்தை அங்கீகரித்து விடுமுறை அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு நாடும், தனது பண்பாடு, கலாச்சாரம், வரலாற்று பின்னணி உள்ளிட்டவற்றை மையமாகக் கொண்டு, தொழிலாளர் தினத்தை வெவ்வேறு தினங்களில் கொண்டாடி வருகின்றன. அவ்வாறு நமது தேசத்தின் தொழிலாளர்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, விஸ்வகர்மா பிறந்த தினத்தை தொழிலாளர் தினமாக கொண்டாடி வருகின்றனர். உலகின் எல்லாவிதமான தொழிலுக்கும், தொழில் வளர்ச்சிக்கும் சூத்திரம் வகுத்துக் கொடுத்தவர் “விஸ்வகர்மா” ஆவார். அசுரனாக மாறிய தனது மகனான விருத்ராசூரனை அழிக்க, தனது முழு திறமையையும் பயன்படுத்தி, வஜ்ராயுதம் செய்து கொடுத்து, தேசத்து மக்களை பாதுகாத்த விஸ்வகர்மாவின் வாழ்க்கையை உதாரணமாகக் கொண்டு, தொழிலாளர்கள் அனைவரும் தியாகம் மற்றும் அர்ப்பணிப்பு மனோபாவத்துடன் தனது திறமைகள் அனைத்தையும் தேசத்திற்காக அர்ப்பணிக்க வேண்டும் என்கின்ற உயரிய சிந்தனையை உருவாக்கும் பொருட்டு, பாரதிய மஸ்தூர் சங்கம் விஸ்வகர்மா பிறந்த தினமான செப்டம்பர் 17 ஆம் நாளை, ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர் தினமாக கொண்டாடி வருகிறது.
கம்யூனிஸ்டுகளால் போலியாக திணிக்கப்பட்ட மே தினத்தை புறக்கணிப்போம்!
தியாகம் மற்றும் அர்ப்பணிப்பு உணர்விற்கு உதாரணமான, விஸ்வகர்மா ஜெயந்தியை செப்டம்பர் 17 அன்று, தொழிலாளர் தினமாக கொண்டாடுவோம்!
கட்டுரையாளர்: மாநில பொதுச்செயலாளர், பாரதிய மஸ்தூர் சங்கம்