தேசிய சிந்தனை கொண்ட வழக்கறிஞர்களை ஒன்றிணைக்கும் அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கம்

நூறாண்டுகளாக சங்கப்பணி மட்டுமல்லாது, பல்வேறு வகையான சமுதாயப் பணிகளையும், ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து செய்து வருகிறது. சங்கத்தில் பயிற்சி பெற்ற கார்யகர்த்தர்கள் சமுதாயத்திற்கு பயன்படும் வகையிலான பல்வேறு அமைப்புகளை தொடங்கி, மக்கள் பயன்பெறும் வகையில் பணி செய்து வருகின்றனர். இந்த முறை தேசிய சிந்தனை கொண்ட வழக்கறிஞர்களை ஒன்றிணைக்கும் அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கம் பற்றி அறிவோம்…

அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கமானது, தேசிய அளவில் வழக்கறிஞர்களின் நலனுக்காவும், நீதித்துறை பரிபாலனத்தில் வழக்கறிஞர்களுக்கு ஒரு தூணாக இருந்து செயல்பட வேண்டும் என்ற எண்ணத்திலும், தேசிய சிந்தனை கொண்ட வழக்கறிஞர்களை ஒருங்கிணைப்பதற்காகவும், தேச நலனில் அக்கறை கொண்ட முதுபெரும் வலதுசாரி சிந்தனையாளரும் பாரதிய மஸ்தூர் சங்க நிறுவனருமான தத்தோபந்த் தெங்கடி அவர்களால் “அகில பாரத அதிவக்த பரிஷத்” என்ற வழக்கறிஞர்களின் நலனுக்கான அமைப்பினை 1992 செப்டம்பர் 7 தேதியன்று ஆரம்பிக்கப்பட்டது.
மேற்படி அமைப்பில் வழக்கறிஞர்களின் நலன்களுக்காக, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல், ஓய்வு பெற்ற நீதியரசர்கள் ரமா ஜாய்ஸ், பர்வத ராவ், வி.எ. கோக்ஜே, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் யு.ஆர். லலித் போன்ற சட்ட வல்லுநர்கள், தங்களது பங்களிப்பினை அளித்துள்ளனர். பெரும்பாலான பலன்கள் நீதிமன்றத்திற்கு வரும் வழக்காடிகளுக்கு மட்டுமல்லாது, அனைத்து பொதுமக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்ற வகையில், “நியாய கேந்திரா” என்ற பெயரில் பொது மக்களுக்காக கிராமங்களுக்கே சென்று சட்ட ஆலோசனை முகாம்களையும், “நியாய பிராவாஹ்” என்ற பெயரில், சட்ட நாளிதழ்களையும் தொடர்ந்து நடத்தி வருகிறது. அப்படிப்பட்ட தேசிய அமைப்பின் தமிழக கிளைதான் “அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கம்”.
இந்த சங்கமானது வழக்கறிஞர்களின் நலன்களையும், அவர்களின் அடிப்படை உரிமைகளையும், சரியான நீதி கிடைப்பதற்கு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதையும், இளம் வழக்கறிஞர்கள் மற்றும் கற்றறிந்த அனைத்து வழக்கறிஞர்களுக்கும் வழிகாட்டும் ஒரு அமைப்பாக, கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக அகில பாரத அளவிலும், கடந்த பத்து வருடங்களாக தமிழகத்திலும் செயல்பட்டு வருகிறது.
இந்த சங்கமானது, தமிழகத்தில் 2011 ஆம் வருடம் ஓய்வுபெற்ற நீதியரசர் பத்மநாபன் அவர்களை தலைவராகக் கொண்டு துவங்கப்பட்டது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கருத்தரங்குகள் நடத்தப்படுகிறது. அவற்றில் வழக்கறிஞர்களின் நலனுக்காக, பல்வேறு கருத்தரங்குகளில் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதியரசர்கள் சிறப்புரையாற்றி உள்ளனர். குறிப்பாக உச்சநீதிமன்ற நீதியரசர் ராம சுப்ரமணியம், நீதியரசர் பி. சதாசிவம் உள்ளிட்ட உயர்நீதிமன்ற நீதியரசர்கள் தலைமையிலும், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஒத்துழைப்புடனும், சென்னை, மதுரை, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, ஈரோடு, திருச்சி, புதுக்கோட்டை, செங்கல்பட்டு, தேனி, தஞ்சாவூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர், ராணிப்பேட்டை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு கருத்தரங்குகள், சட்டநாள் கொண்டாட்டம், பெண்கள் தின விழா மற்றும் மாதாந்திர Study Circle, கல்லூரி மாணவர்களுக்காக Legal Awareness programe (நியாய கேந்த்ரா) உள்ளிட்ட நிகழ்வுகளை அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கம் நடத்தி உள்ளது.
வழக்கறிஞர்களின் நலனுக்காக, வருடத்திற்கு ஒருமுறை இரண்டு நாள் உள்ளுறை முகாம் (Residential Camp) நடத்தப்படுகிறது. அவற்றில் அதிகாலையிலிருந்தே யோகாசனப் பயிற்சி, உணவு கட்டுப்பாட்டு பயிற்சிகள், நேர மேலாண்மை வகுப்புகள், சட்டம் தொடர்பான விவாதங்கள் நடைபெறும். மேலும் எதிர்காலத்தில் சிறந்த வழக்கறிஞர்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சட்டம் பயிலும் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி வழக்கறிஞர் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்த போது, உடனடியாக ஒரு குழு அமைத்து, மத்திய சட்டத்துறை அமைச்சர் அவர்களின் ஒப்புதலோடு சட்ட இணை அமைச்சரை சந்தித்து, குறைகளை தெரிவித்து, அவற்றை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை, இதர தமிழ்நாடு சங்க உறுப்பினர்களுடன் சேர்ந்து வெற்றியும் கண்டது. மேலும், பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் தேசிய கருத்தரங்குகள் மூலம், எவ்வாறு தங்கள் திறமைகளை மேம்படுத்திக் கொள்வது என்பது பற்றியும், வழக்கறிஞர்களுக்கு உணர வைத்துள்ளது.
குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு, தெலுங்கானா, மும்பை, டெல்லி, இமாச்சலப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஹரியானா, கோவா, உத்தரகாண்ட், ராஜஸ்தான், ஜம்மு – காஷ்மீர் போன்ற பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற தேசிய கருத்தரங்குகளில், நமது சங்க வழக்கறிஞர்கள் பங்கு பெற்றுள்ளனர். அதுமட்டுமின்றி, மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட “குடியுரிமை சட்டத் திருத்த மசோதா” பாரதத்தில் பிறந்து வளர்ந்து குடிமகனாக உள்ள எவரையும் பாதிக்காது என்பதை தெரிவிக்கும் விதமாக, சி.ஏ.ஏ பற்றி துண்டுப்பிரசுரங்கள் வெளியிட்டும், புத்தகங்கள் வெளியிட்டும், வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
வழக்கறிஞர்களின் நலனுக்காக பல்வேறு விதமான கட்டுரைப் போட்டிகள் மற்றும் கருத்தரங்குகளைத் தொடர்ந்து அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கம் நடத்தி வருகிறது. இந்த சங்கத்தின் தலையாய நோக்கம், நீதி பரிபாலனத்தில் வழக்கறிஞர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்பதால், வழக்கறிஞர்கள் ஒவ்வொருவரும் சட்டத்தைப் பற்றி முழுமையான அறிவு பெற்று, நீதிமன்றத்தில் வாதாடினால்தான், மக்களுக்கான வெற்றி நாயகனாக வழக்கறிஞர்கள் திகழ முடியும் என்பதில் உறுதியாக உள்ளது.
அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக ஒவ்வொரு வருடமும் 7க்கும் மேற்பட்ட சங்கம் தொடர்பான விழாக்கள் நீதிமன்ற வளாகங்களில் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக சுவாமி விவேகனந்தர் பிறந்தநாளை முன்னிட்டு, ஜனவரி 12ல் தேசிய இளைஞர் தினமும், ஏப்ரல் 14ம் தேதியன்று அம்பேத்கர் ஜெயந்தி தினமும், செப்டம்பர் 7 அன்று சங்கம் நிறுவன நாள், நவம்பர் 26-ம் தேதியன்று சட்ட அரசமைப்பு தினமும், குரு பூர்ணிமா அன்று சீனியர் வழக்கறிஞர்கள் தினமும் கொண்டாடப்படுகிறது.
அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயல்பாடுகளை மேலும் விரிவாக்கும் திட்டத்தோடு, அமைப்பினை இரண்டாக பிரிக்க தீர்மானித்து, தென் தமிழகம், வட தமிழகம் என உயர் நீதிமன்றங்களின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
ஆகச்சிறந்த வழக்கறிஞர்கள் மட்டுமின்றி, தேசிய உணர்வுள்ள தேசத்தின் மீது நம்பிக்கை உள்ள வழக்கறிஞர்களை உருவாக்க வேண்டும் என்பதில் இந்த சங்கம் உறுதி பூண்டுள்ளது.
அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கத்தின் நோக்கங்கள்:
கற்றறிந்த வழக்கறிஞர்கள் மூலம் திறமையான வழக்கறிஞர்களை உருவாக்குதல்,
இளம் வழக்கறிஞர்களுக்கும், சட்ட ஞானம் கிடைக்கும் வகையில் சட்ட பயிற்சி வகுப்புகள் நடத்துதல்,
வழக்கறிஞர்களுக்கு உள்ள பிரச்சினையை கண்டறிந்து, அவற்றை மத்திய மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்க்க முயற்சித்தல்,
நீதிபதி தேர்வு உள்ளிட்ட போட்டி தேர்வுகள் எழுதும் வழக்கறிஞர்களுக்கு சட்ட பயிற்சி வகுப்புகள் நடத்துதல்,
மத்திய, மாநில அரசுகள் கொண்டு வரும் புதிய சட்டங்களை அடிதட்டு மக்களையும் சென்றடையவும், அவ்வாறான சட்டங்களில் ஏதேனும் குறைகள் இருந்தால், சம்பந்தப்பட்ட அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுதல்,
பொதுமக்கள் முக்கியமான சட்டங்களை தெரிந்து கொள்ள நடவடிக்கை எடுத்தல்,
பாரத தேசத்தின் மத அடையாளங்களையும், அதன் பாரம்பரியத்தையும் காப்பாற்ற தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் முன் வைத்தல்.
கட்டுரையாளர்: மாநிலத் தலைவர்,
வட தமிழகம்