தேவை: வெற்றியை கொண்டாடும் மனப்பான்மை

இந்த தலையங்கம் எழுதப்படும் தேதி டிசம்பர் 16. நாற்பத்தாறு ஆண்டுகளுக்கு முன் இதே தேதியில் பாரதம், அதாவது பாரத ராணுவம், கிழக்கு பாகிஸ்தானை தோற்கடித்து மண்டிபோடச் செய்தது. அது 1971. அந்த ஆண்டு துவக்கத்தில் ஆயிரக்கணக்கில் கிழக்கு பாகிஸ்தானில் இருந்து கூட்டம் கூட்டமாக படுகொலை செய்யப்படுவதற்கு பயந்து ஹிந்துக்கள் கிழக்கு பாகிஸ்தானிலிருந்து பாரதத்திற்குள் தஞ்சம் புகுந்தார்கள்.

பதினான்கே நாள் நடந்த யுத்தத்தில் கிழக்கு பாகிஸ்தானின் ராணுவத்தில் இருந்த ஓநாய்கள் (மேற்கு பாகிஸ்தான் வாசிகள்) 99,000 பேர் போர்க் கைதிகளாக பாரதத்திடம் பிடிபட்டார்கள். இவர்கள் கிழக்கு பாகிஸ்தானின் பாமர மக்களை சொல்லொணா கொடுமைகளுக்கு ஆளாக்கியவர்கள். அந்த அக்கிரமத்திற்காகவே அவர்களை ஏதோ ஒரு தீவில் கொண்டுபோய் ஆயுளுக்கும் சிறைவைத்திருக்க வேண்டும். ஆனால் அப்போது நடந்தது காங்கிரஸ் அரசு. அந்த பாதகர்களுக்கு ‘மாப்பிள்ளை உபச்சாரம்’ செய்து, பிறநாடுகளின் பேச்சைக்கேட்டு, பத்திரமாக ரயிலேற்றி மேற்கு பாகிஸ்தானுக்கு  அனுப்பியது அந்த காங்கிரஸ் அரசு. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போன அவலம் அன்றைய காங்கிரஸின் சாதனை.

கடவுள் அருளால் பாரத அரசு ‘காங்கிஸ் முக்த’ (காங்கிரஸ் இல்லாத) அரசு ஆகிவிட்டது. பிரதமர் நரேந்திர மோடி தேச துரோகத்திற்கு எதிராக கையில் சவுக்கு எடுத்துவிட்டார். 1971ல் பாரத அரசுக்கு கிடைத்த அந்த ‘பிடி’ போல இப்போதுள்ள பாரத அரசிற்கு கிடைத்தால் தேசத்திற்கு என்னென்ன ராணுவ ரீதியான ஆதாயங்கள் எல்லாம் கிடைத்திருக்கும் என்று கற்பனை செய்துபார்க்க தோன்றுகிறது அல்லவா?

உலகமே வியந்த பாரத ராணுவத்தின் அந்த மகத்தான வெற்றியை தேசம் எங்கே கொண்டாடுகிறது தெரியுமா? ராணுவ பாசறைகளில் மட்டும். ராணுவ வீரர்கள் மட்டும் கொண்டாடுகிறார்கள். 125 கோடி மக்கள் அத்தனைபேருமா தேசிய சொரணையற்றவர்கள்? சிந்திப்போம்.