தேச பக்த மாணவ சக்தி வென்றது.

பாரத  புண்ணிய  பூமியில் பல்கலைக்கழகம் ஒன்றின் வளாகத்தில் சுவாமி விவேகானந்தர் திரு உருவச் சிலையை நிறுவுவதற்கு யாராவது எதிர்ப்புத் தெரிவிப்பார்களா? தெரிவித்தார்களே! நக்சலைட், ஜிகாதி கும்பலை சேர்ந்தவர்கள் தான் அவர்கள்.  இதோ விவரம்:

பாரதத் தலைநகர் டெல்லி மாநகரில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒருவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு சுவாமி விவேகானந்தர் திருவுருவ சிலை ஒன்றை தான் படித்த பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவிட  விரும்பினார். அதற்கு ஆகும் செலவை  அவர் ஏற்றுக் கொண்டார். சிலையும் தயாரானது.  ஆனால் திறப்பு விழா நடைபெற  விடாமல் வளாகத்துக்குள் சுற்றித் திரியும் தேசத்துரோக வன்முறை கும்பலை சேர்ந்தவர்கள் முயற்சி செய்தார்கள். சிலையடியில் ஹிந்துக்களைப் புண்படுத்தும் இந்திய விரோத வாசகங்களைக் கிறுக்கினார்கள். பல்கலைக் கழக வளாகம் தங்கள் கோட்டை என்று மனக்கோட்டை கட்டிய அவர்களின் பகல் கனவை ஜே.என்.யூ வித்யார்த்தி பரிஷத் (ABVP) இளைஞர்கள் தகர்த்தார்கள். சவாலை ஏற்று போராட்டத்தில் இறங்கினார்கள்.

செவ்வாய் தோறும் (திறக்கப்படாத) சிலை அருகே கூடி ஹனுமான் சாலீஸா ஓதுவது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தியும் விசேஷ நாட்களில் கூட்டுப்பிரார்த்தனை பஜன் போன்ற கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தியும் சிலை பகுதி குறித்து வளாகத்தில் தேசபக்த மாணவர்கள் விழிப்புணர்வு ஊட்டினார்கள். 3 ஆண்டுக்காலப் போராட்டத்திற்கு பிறகு, அந்த தேச பக்தியுள்ள மாணவர்கள் நவம்பர் 12 அன்று  வெற்றி வாகை சூடினார்கள். தேசியம் வென்றது, தேசத்துரோகம் தோற்று ஓடியது.

அன்றைய தினம் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜே.என்.யூ வளாகத்திற்குள் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் திருவுருவச் சிலையை காணொளி மூலம் திறந்து வைத்தார். அப்போது அவர், “ஒவ்வொருவருக்கும் தனி கருத்து  இருக்கலாம். ஆனால் தேசத்தின் வளர்ச்சிக்கு உதவும்  விதத்திலேயே அவரவர் கருத்தை  வெளியிட வேண்டும்” என்று அறை கூவல் விடுத்தார்.

இனி சுவாமிஜி சிலைப் பகுதி, தேசிய, கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு மையமாகிவிடும். ஜே.என்.யூ என்றாலே சுவாமிஜி என்று அடையாளம் கிடைத்துவிடும் அப்படி ஒரு மாற்றம் கொணர்வதற்காக தேசபக்த ஜே.என்.யூ வித்யார்த்தி பரிஷத் மாணவர்கள் சந்தடியின்றி செயல்பட உறுதி பூண்டிருக்கிறார்கள்.

வித்யார்த்தி பரிஷத்தின் ஜே.என்.யூ கிளை தலைவர் சிவம் சௌரசியாவும்  செயலர் கோவிந்த் டாங்கேயும் வளாகத்தில் உள்ள விவேகானந்தர் சாலை பெயர்பலகையையும் முன்னதாக விவேகானந்தர் சிலையையும்  சேதப்படுத்திய சமூக விரோதிகளை கண்டறிந்து ஜே.என்.யூ நிர்வாகம் தண்டிக்க வேண்டும் என்று கோரினார்கள்.

பி.ஏ.சபரிஸ்

கட்டுரையாளர்

ஜே.என்.யூ ஆராய்ச்சி (பிஹெச்.டி) மாணவர்;

ஜே.என்.யூ வித்யார்த்தி பரிஷத் மீடியா ஒருங்கிணைப்பாளர்