ஆசிரியருக்கு மரியாதை

மகாராஷ்டிரா, சோலாப்பூரை சேர்ந்த ரஞ்சித்சிங் திசாலே எனும் ஆசிரியர் உலக அளவில் விரும்பத்தக்க ஆசிரியராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மென்பொருள் பொறியாளராக ஆசைப்பட்ட இவர் அந்த முயற்சி கைகூடாதால் தந்தையின் சொல்படி ஆசிரியர் பயிற்சிக்கு சேர்ந்தார். பின் ‘ஆசிரியர்கள்தான்’ உலகில் உண்மையான மாற்றத்தை உருவாக்குபவர்கள் என உணர்ந்தார். அவர் பணிபுரிந்த தொடக்கப்பள்ளியில் பெண்களுக்கு கல்வி குறித்த விழிப்புணர்வு அதிகம் இல்லை. சிறுவயது திருமணங்களும் அங்கு அதிகம். அவர்களுக்கான தாய்மொழியான கன்னடத்தில் பாடபுத்தகங்கள் கிடையாது போன்ற சவால்களை எதிர்கொண்டார். இதை சரிசெய்ய அவர்களின் தாய்மொழியை கற்றார். புத்தகங்களை மாணவர்கள் படிக்கும் வகையில் மாற்றியமைத்தார். கியூ.ஆர் கோடிங் முறையில் வீடியோ விரிவுரைகள், ஆடியோ கதைகள் என கல்விமுறையை எளிதாக்கினார். இதனால் மாணவர்களின் கல்வியறிவு, சிக்கல்களை தீர்க்கும் திறன், பேச்சு திறன், படைப்பாற்றல்கள் பெருகின. விளைவாக 100 % மாணவர்கள் வருகை, இடைநிற்றல் இல்லை, குழந்தை திருமணங்கள் அடியோடு நிறுத்தம் போன்ற வியத்தகு மாற்றங்கள் அந்த கிராமத்தில் நடந்தன. அவரது இந்த முன்முயற்சியை மகாராஷ்டிர அரசு, மத்திய மனிதவள அமைச்சகம் ஏற்றது.
மைக்ரோசாப்ட் நிர்வாகி சத்ய நாதெள்ளா தனது ‘ஹிட் ரெப்ரெஷர்’ புத்தகத்தில் இவரை பாராட்டியுள்ளார். 2016-ல் மத்திய அரசின் ‘புதுமை ஆய்வாளர்’ விருது, 2018-ல் தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளையின் ‘கண்டுபிடிப்பாளர்’ விருது போன்றவற்றை பெற்றுள்ளார் 32 வயதேயான இந்த ஆசிரியர். அமெரிக்கா, வடகொரியா, பாகிஸ்தான், இஸ்ரேல், பாலஸ்தீனம், ஈராக், ஈரான் நாடுகளை சேர்ந்த கல்வி குறித்த ‘எல்லைகளை கடப்போம்’ எனும் திட்டத்திலும் இணைந்து பணிபுரிகிறார் இவர்.