தேசபக்தன் மோடியை ஆதரிக்கிறான்

சில நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் சட்டமன்றத் தொகுதிகளுக்கும்  நவம்பர் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றன. தேர்தலில் ரூ. 500, 1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த பிரச்சினையை மையப்படுத்தியே பிரச்சாரம் அமைந்தது. பெரும்பான்மையான மக்கள் பாஜக அரசு மீது கோபத்தில் இருக்கிறார்கள் என்றெல்லாம் பேசப்பட்டது. பாஜக மத்தியப் பிரதேசத்தில் ஒரு நாடாளுமன்றத் தொகுதி, ஒரு சட்டமன்றத் தொகுதி, அஸ்ஸாமில் ஒரு  நாடாளுமன்றத் தொகுதி, ஒரு சட்டமன்றத் தொகுதி, அருணாசலப் பிரதேசத்தில் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகியவற்றில் வெற்றி பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தில் இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகள், ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகியவற்றில் பாஜகவுக்கு கடந்த தேர்தலைவிட 10 சதவீதம் வாக்கு வங்கி உயர்ந்துள்ளது. கம்யூனிஸ்ட் ஆட்சிபுரியும் திரிபுராவில் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக கணிசமாக வாக்குகளைப் பெற்றுள்ளது. தமிழகத்தில் தே.மு.தி.க, பா.ம.கவை விட அதிகமான வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திற்கு பாஜக வந்துள்ளது.

ரூபாய் நோட்டு விவகாரத்தில் பல சிரமங்களை பாமர மக்கள் அனுபவித்தாலும் மோடியின் நல்லெண்ணத்தை ஆதரிக்கவே செய்கிறார்கள். கோடி  கோடியாய் கொள்ளையடித்த பணத் திமிங்கிலங்கள் மட்டுமே மோடி அரசை எதிர்த்து வருகிறார்கள்.

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டம் துவங்கியது. ரூபாய் நோட்டு பிரச்சினையை விவாதிக்க பாஜக தயாராக இருந்தது. ஆனால் வெற்றுக் கூச்சல் போட்டு எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கின. பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். மோடியும் ராஜ்ய சபா கூட்டத்தில் கலந்து கொண்டார். அவர் சபைக்கு வந்த பிறகும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டார்கள். எதிர்க்கிறவர்கள் அனைவரும் ஊழல் பெருச்சாளிகளே.

இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்க பாகிஸ்தான் செய்த சதி மோடியின் ராஜதந்திரத்தால் முறியடிக்கப்பட்டது. மோடி தவிர வேறு யாராலும் இத்தகைய துணிச்சலான முடிவை எடுத்திருக்க முடியாது. ஒவ்வொரு தேசபக்தரும் மோடியின் கரத்தை பலப்படுத்துவது காலத்தின் தேவை.