தேசத்தின் நாடி பிடித்தறிய நடையே முறை!

ஒரு சமஸ்கிருத ஸ்லோகம். அதாவது ஒரு மனிதன் தன் அறிவின் கால் பகுதியை தன் குருவிடம் இருந்து பெறுகிறான். மற்றொரு கால் பகுதியை தன் சுய புத்தியினால்  பெறுகிறான். இன்னோரு கால் பகுதியை தன் உடன் பயிலும் சக மாணவர்களிடம் இருந்து பெறுகிறான். சரி முக்கால் ஞானம் வந்து விட்டது. கடைசி கால் பகுதி ஞானம்? அதைக் காலம்தான் அவனுக்குக் கற்றுக் கொடுக்கும். அதாவது நடைமுறை வாழ்வின் அனுபவம்தான் அவனுக்கு மீதம் உள்ள கால் பகுதியைத் தந்து அவனுடைய ஞானத்தை முழுமை அடையச் செய்யும். நடைமுறை அனுபவம்  இல்லாத ஞானம், என்னதான் கற்றாலும் முழுமை அடையாத முக்கால் ஞானமே!  அந்த நடைமுறை அனுபவம் எப்படி லபிக்கும்? சும்மா வீட்டுத் திண்ணையில் கால் ஆட்டியபடி உட்கார்ந்து கொண்டு, ஊரில் போகிறவர், வருகிறவரை  எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால் ஞானம் சித்திக்குமா ? வம்பு வேண்டுமானால் வரும் – ஞானம் வராது. எனவே நடைமுறை அனுபவம் என்பதையே நடை – முறை” ஆக்கி  நாடு சுற்றி நடந்து ஞானம் சேர்க்கும் கலையை நம் முன்னோர் வழக்கில் கொணர்ந்தனர்.

 

ஆதி சங்கரருக்கு இல்லாத ஞானமா? ஆர்யாம்பாளுக்கு மகனாக அவதரித்த போதே ஞானத்தையும் சுமந்து கொண்டல்லவா பிறந்த தெய்வீகக் குழந்தை அது? ஈன்ற தாய்க்கு மகனைத் துறவுக் கோலத்தில் பார்க்க பாசம் தடுத்தது! ஆனால் அந்த சிசுவோ வாலிபனாய் வளர்ந்து, இல்லற இன்பம் மறுத்து ஞானக் கடலில் நீந்தியது. காலடியிலேயே – ஊர் காலடி என்பது மட்டுமில்லை – தாயின் காலடியிலேயே அந்த ஞானசூரியன் தங்கி இருந்தாலும், அதன் தேஜஸ் பாரத தேசம் முழுதும் பொங்கிப் பரவித்தான் இருக்கும்! ஆனால் சங்கரர் பாரதத்தை நடந்தே பயணித்தார். குஜராத்தில் துவாரகா, கர்நாடகத்தில் சிருங்கேரி, உத்தராகண்டில் ஜோதிர்மடம், ஒரிசாவில் பூரி, தமிழகத்தில் காஞ்சி… என்று நடந்து பிரதேசங்கள் பல கடந்து, ஆங்காங்கு மாற்றுச் சித்தாந்தம் கொண்டோரை வாதப் போரில் வென்று, மக்களுடன் மக்களாக ஐக்கியமாகி ஹிந்து தர்மத்தை போதித்து, மடத்தை ஸ்தாபித்து… அடேயப்பா எப்பேர்ப்பட்ட கடினமான காரியம்?

 

என்ன வசதி இருந்தது அன்று? கரடு முரடான பாதைகள், காட்டு வழிகள், கொடிய விலங்குகள், கும்மிருட்டு, கை விளக்கு, கொட்டும் மழையில் ஒதுங்க எங்கோ ஒரு குடில். எத்தனை இடர்கள்? அத்தனையும் கடந்துதானே ஆதிசங்கரர் சாதித்தார்!

 

ஸ்ரீ ராமானுஜரின் பெயர் இன்று வட மாநிலங்கள் அனைத்திலும் பிரசித்தம். நானே நேரடியாக சண்டிகரில் உள்ள பாண்டுரங்கன் கோயிலில் பார்த்து இருக்கிறேன். ராமானுஜர் உருவச் சிலை ஒன்று வைத்து அதன் தலைக்கு மேல் சுவற்றில் ஸ்ரீ ராமானுஜ்” என்று எழுதி வைத்துள்ளனர். இந்த இருபெரும் ஞானியர் மட்டுமில்லை, அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர் போன்ற சைவ சான்றோர்களும், இன்னும் எண்ணற்ற சமயத் தொண்டு புரிந்த மேலோரும் நாடு முழுதும் சுற்றி வந்துள்ளனர். அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழில் ஒவ்வொரு பாடலும் வெவ்வேறான தாளக் கட்டில் – ஆனால் அந்தக் குறிப்பிட்ட தாளக் கட்டு அந்தக் குறிப்பிட்ட பாடல் முழுதும் – ஒன்றே போல் ஓசை நயம் மாறாமல் அமைந்துள்ளதன் ரகசியம் என்ன? காமக் கடலில் மூழ்கி நோயால் பீடிக்கப்பட்டு, பின் முருகன் அருளால் நோய்  நீங்கி, முத்தைத் தரு” என்ற முதல் அடியை இவருக்கு முருகனே எடுத்துத் தந்த பின், ஞானம் சித்திக்கப் பெற்ற பின்னும் – ஆம் ஞான வெளிச்சம் அவருக்கு பாய்ச்சப் பட்ட பின்னும்- அந்த ஞானம் முழுமை அடைய அவர் நாடு சுற்றி வந்தார்! பல முருகப் பெருமான் திருக்கோயில்கள் அவரால் பாடல் பெற்ற ஸ்தலங்கள் ஆகின! அவரோ துறவு வாழ்வை ஏற்றவர்! கோயில் கோயிலாகப் பயணம், அந்தப் பிரசாதமே உணவு. அப்போது அந்தந்த கோயில்களில் வெவ்வேறு பூஜா காலங்களில் ஒலிக்கப் பெறும் முழவு, மத்தளம், போன்ற கருவிகளின் வெவ்வேறு தாளங்களே அவரது பாடல்களின் தாளக் கட்டுகள் ஆகின.

 

இந்த பாரத தேசத்தின் பரந்து விரிந்த தொன்மையை, காஞ்சியில் விளங்கிய பல்கலைக் கழகத்தை, நாலந்தாவில் நற்கல்வி போதித்த சர்வ கலாசாலையை, பாரத உழவனின் விவசாய வாழ்வை, பாரதத்தின் பல்வேறு கலாசார வகைகளை, சமூக நடைமுறைகளை பதிவு செய்த சீன யாத்ரீகன் யுவான் சுவாங்கும், இந்த பாரத தேசத்தைப் பரவிக் கடந்தான்!

 

நடப்பது நம்மில் பலருக்கு, அதுவும் நூற்றுக் கணக்கான மைல்கள் – சாத்தியம் இருக்கலாம். உடல் ஆரோக்கியம் உட்பட பல உட்காரணங்கள் இருக்கலாம். ஆனால் நடந்து கடந்தால்தான் இந்த மண்ணை அறிய முடியும்.

 

நடை பயணம் ஞானியருக்கு மட்டுமில்லை – நம் போன்ற சாமானியருக்கும் பயணமே பல உள்கண்களைத் திறக்கும்! அக வெளிச்சம் பாய்ச்சும்! பல வருடங்கள்  முன்பு ஓடும் ரயிலில் அன்னாசிப் பழம்” – அன்னாசி” – அன்னாசி” என்று கூவி விற்ற கிராமத்துப் பெண்கள் இன்று பைன் ஆப்பிள் – பைன் ஆப்பிள் – மூணு பீஸ் பத்து ரூபா” என்று கூவி விற்பதைப் பார்க்கும் போது என் தாய்மொழி எப்படிப் பின்னுக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது சேர்த்தே பார்க்கிறேன்.  “ஏஐ‡ஈஐ ‡உஙஉகீ: உ‡எஃஐகுஏ உஙஉகீ” என்று முழங்கியவர்களின் ஆட்சியில் தமிழ் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு மழலையர் பள்ளி முதல் முது நிலைக் கல்வி வரை பரவியுள்ள ஆங்கில மோகத்தை” அந்த அன்னாசிப் பழக்காரியின் பைன் ஆப்பிள்” குரல் உணர்த்துகிறதே!

 

ஊர்ப்பக்கம் காது கொடுத்தோமானால்… பசு மாட்டை சினை பண்ண தரமான நாட்டுக் காளைகளே குறைஞ்சு போச்சு”- மாட்டுத் தீவனத்துக்கு வைக்கோலே கிடைப்பதில்லை”- வெள்ளம் இல்லாட்டி வறட்சி பயிர் பச்சை எல்லாம் வீண் ஆவுது”- ஆற்று  மணலை அள்ளி அள்ளி இப்ப எங்க கிராம கிளை வாய்க்காலில் தண்ணியே குறைஞ்சு போய் இந்த வருஷம் விதைக்கவே இல்லை நாங்க”- பேசாம நிலத்தை ‘ரியல் எஸ்டேட்’ காரனுக்கு வித்துட்டு ரொக்கத்தை பாங்குல போட்டு வட்டி வாங்கி சாப்பிடலாம்”- உரம், விதை, மத்த இடுபொருள் விக்கற விலைக்கு விவசாயம் கட்டுப்படி ஆவலை..”- இந்தக் குரல்கள் பாரத தேசத்தின் ஆன்மாவின் குரல்கள். கொஞ்சம் கொஞ்சமாக நசுங்கி செத்துக் கொண்டிருக்கும் ஜீவனத்தின் துடிப்பு மிக்க குரல்கள்.

இந்தக் குரல்களின் தாக்கத்தை அறிய எந்த ஹார்வர்ட் பல்கலை” பொருளாதார டாக்டர் பட்டமும் பயன்படாது! சீதாராம் கேதிலாய போன்ற அர்ப்பணிப்புள்ள தொண்டர்களின் பரந்து விரிந்த பயணங்களே இந்தக் குரல்களின் ஜீவனை உள்வாங்கி பரிகாரம் தேட உதவும்!

 

 

 

நடப்பது நம் முறை!

 

வெளிநாட்டுப் பெண்மணி மார்கரெட் நோபிலுக்கு (நிவேதிதை) விவேகானந்தர் பாரதத்தை அறிமுகம் செய்து வைத்தது, பல தலங்களின் சிறப்பை நேரில் அழைத்துச் சென்று விவரித்ததன் வாயிலாகத்தான். தொன்மைக் காலத்தில் விஸ்வாமித்திரர் ராமபிரானை பல தலங்களுக்கு அழைத்துச் சென்று அங்கெல்லாம் தவம் செய்த மாமுனிவோர் பற்றி எடுத்துக் கூறினார். சீதாராம் கேதிலாய அவர்கள் தேசத்தின் அருமை பெருமைகளை, தேசத்தின் பிரச்சினைகளை ஊர் ஊராக சென்று ஊர் மக்கள் கவனத்திற்கு கொணர்கிறார்.