தேசத்தின் கடைக்கோடி மனிதர் மேம்பாடுதான் தேசத்திற்கு மங்கலம்

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்க (ஆர்.எஸ்.எஸ்)த்தின் அகில பாரதத் தலைவர் (சர்சங்கசாலக்), சங்கம் நிறுவப்பட்ட நாளான விஜயதசமி அன்று சங்கத்தின் தலைமையகம் அமைந்துள்ள நாகபுரியில் நிகழ்த்தும் விஜயதசமிப் பேருரை வரலாற்று முக்கியத்துவம் கொண்டது. ஸ்வயம்சேவகர்கள் அந்தப் பேருரையை சங்கப்பணிக்கான வழிகாட்டலாக கருதி உன்னிப்பாக கேட்பார்கள். இன்று பாரத தேசமே ஸ்வயம்சேவகர்களுடன் சேர்ந்துகொண்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்சங்கசாலக் நிகழ்த்தும் விஜயதசமிப் பேருரை பாரத அரசின் தொலைக்காட்சி வாயிலாக தேச மக்களை நேரடியாக சென்றடைவதுதான் காரணம். இந்த ஆண்டு விஜயதசமி (அக்டோபர் 22) அன்று சர்சங்கசாலக் டாக்டர் மோகன் பாகவத் நிகழ்த்திய பேருரையின் பெரும்பகுதி பின்வருமாறு:

விஜயதசமி திருநாளில்தான் சங்கப் பணி 90 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டும் இதைக் கொண்டாடுவதற்காக வழக்கம்போல இங்கே கூடியிருக்கிறோம்.

இது பாரத ரத்னா டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கரின் 125வது பிறந்தநாள் ஆண்டு. சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்படுத்தும் அக்கிரமத்தை எதிர்த்து அவர் வாழ்நாள் முழுவதும் போராடினார். சுதந்திர பாரதத்தில் அவர் பொருளியல், அரசியல் அரங்குகளில் இருந்த பாரபட்சத்தை முற்றிலுமாக ஒழிக்க அரசியல் சாஸனத்தில் விதிமுறைகளைச் சேர்த்தார்.

ஆதிசங்கரரின் கூர்மையான அறிவையும் கௌதம புத்தரின் எல்லையற்ற கருணையையும் ஒருங்கே கொண்டவராக டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் விளங்கினார் என்று சங்கத்தின் இரண்டாவது சர்சங்கசாலக் ஸ்ரீ குருஜி கூறுவார்.

கடந்த ஆண்டு ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் பரமபூஜனீய டாக்டர் ஹெட்கேவாரின் 125வது ஆண்டு. ஹிந்து சமுதாயத்தில் சமத்துவம் நிறைந்திட சுரண்டல் ஒழிந்துபோக கூட்டு முயற்சி செய்து பாரதத்தை முன்னுதாரணமாகக் கொண்டு உலகம் பின்பற்றும் விதத்தில் தேசத்தை மகோன்னத நிலை அடையச் செய்ய வேண்டும் என்பது அவர் கனவு. இதற்காக இடைவிடாமல் முழு மனத்துடன் இயங்கும் தன்னலமற்ற நேர்மையான ஊழியர்களை உருவாக்கும் நுட்பம் தந்து சென்றவர் அவர். மூன்றாவது சர்சங்கசாலக், மறைந்த ஸ்ரீ பாளாசாகப் தேவரஸ் இந்த வழிமுறையில் வித்தகம் பெற்றவர். அவரது நூற்றாண்டு இந்த வருடம் தொடங்குகிறது. அமரர் பண்டிட் தீனதயாள்ஜி உபாத்யாய சங்க வழிமுறையில் வளர்ந்து உயர்ந்தவர். அவர் பரிந்துரைத்த ஒருங்கிணைந்த அணுகுமுறை ‘ஏகாத்மமானவ தர்சன்’ என்று அழைக்கப்படுகிறது. பாரதத் தத்துவம் காட்டும் சாசுவதமான பண்புகளின் அடிப்படையில் நவீன காலத்துக்கு ஏற்ப வழிகாட்டிய தீனதயாள்ஜியின் நூற்றாண்டும் தொடங்கியுள்ளது.

இன்னொரு மகிழ்ச்சிகரமான சந்தர்ப்பமும் சேர்ந்து கொள்கிறது. மாமன்னர் ராஜேந்திர சோழன் முடிசூடியதன் ஆயிரமாவது ஆண்டாகவும் இவ்வருடம் அமைந்துள்ளது. அவர் பாரதத்தில் முன்மாதிரியான நல்லாட்சியை நடத்திக் காட்டினார். பாரதிய கலாச்சாரத்தின் மங்கல மயமான சூழலை தென் கிழக்கு ஆசியா முழுவதும் பரப்பினார்.

ஸ்ரீராமானுஜர், ஜாதி, இன ரீதியான எல்லா பேதங்களையும் நிராகரித்தவர். மூடப் பழக்க வழக்கங்களை தகர்த்தெறிந்தவர். அனைவருக்கும் பொதுவான பாதை பக்திதான் என்பதை நிலைநாட்டினவர். இவ்வாறு சமூக நல்லிணக்கத்துக்கு வலுவான அடித்தளம் அமைத்தார். அவரது ஆயிரமாவது ஜெயந்தியை வரும் ஆண்டு கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த தலைசிறந்த சைவ தத்துவ ஞானி ஆச்சார்ய அபிநவ குப்தரின் ஆயிரமாவது பிறந்தநாள் ஆண்டும் இதுதான். பகவத் கீதையின் 5151ம் வருட கொண்டாட்டம் கீதா ஜெயந்தி வரை நடைபெறும். பலனை எதிர்பாராமல் பணியாற்று என்பதுதான் கீதையின் சாராம்சம். திறனுடன் பணி, சமத்துவம் ஆகியவை கீதையின் முக்கிய போதனைகள்.

இந்த ஆண்டு இரண்டு பெரியோர் நம்மிடமிருந்து பிரிந்தார்கள். முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் இளம் தலைமுறையினரிடையே நம்பிக்கையையும் தேசிய பெருமித்தையும் ஊட்ட தனது வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்தவர். எல்லாத் துறைகளிலும் மிகச் சிறந்ததை சாதிக்க அவர் இளைஞர்களுக்கு ஊக்கமளித்தவறே வாழ்ந்தார்.

சுவாமி தயானந்த சரஸ்வதி தலைசிறந்த வேத ஆசான். நம் சமுதாயத்திலும் உலக மக்களிடையேயும் சாசுவதமான நம் கலாச்சாரம் சார்ந்த பெருமிதத்தை நவீன கண்ணோட்டத்தில் அவர் எடுத்துரைத்தார். நற்பணிகளுக்காக தங்களை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும் என்ற உந்துதலை மக்களிடையே உருவாக்கினார். இருவருமே தங்களது பணியின் வாயிலாக பாரதத்தின் சிறப்பு, சமுதாய ஒற்றுமை ஆகியவற்றை நிலைநாட்டிச் சென்றவர்கள்.

இவ்வாறு வந்தமைந்துள்ள நல்ல சந்தர்ப்பங்களை நினைத்துப் பார்ப்பதன் நோக்கம் இதுதான்: திறமை நிறைந்த, ஏற்றத்தாழ்வற்ற, வளமான பாரதத்தை உருவாக்குவதும் நமது குடும்பங்கள் தொடங்கி உலகம் முழுவதும் சுபிட்சம், மேன்மை ஆகியவை ஏற்படுத்துவதும் நமது தலையாய கடமை என்பதை உணர்ந்து முழு சமுதாயத்தையும் ஒருங்கிணைப்பதால் ஏற்படும் சக்தியின் ஆதாரம் கொண்டு வெற்றியடையும் வழிகாண்பதே இன்றைய சிந்தனை.

தற்சார்பு கொண்ட, வலிமையான, வளமான பாதுகாப்பான பாரதத்தை உருவாக்க வேண்டும். அது எப்போது சாத்தியமாகும்? ஏற்றத்தாழ்வற்ற ஒருங்கிணைக்கப்பட்ட அறிவுச் செழுமைச் சார்ந்த தேசப் பெருமிதம் சார்ந்த சமுதாயம் அயராது உழைத்தால்தான் முடியும். இத்தகைய சமுதாயம் தான் ஜனநாயக வழி நடக்கும் அரசியல் சாசன நிர்வாகிகளுக்கு பாதைகாட்ட முடியும்.

இதில் தன்னலமில்லா, பேதமில்லா சமுதாயம் முக்கியம். தெளிவான பழுதற்ற சட்டத்திட்டங்களும் முக்கியம். தேசத்தின் தலை விதியை மாற்ற, இன்றியமையாத இவை இரண்டும் ஒன்றுக்கொன்று நிறைவுசெய்தபடி இயங்குவது அவசியம்.

இதை வைத்து தேசத்தின் நடப்பு நிலவரத்தை சற்று எண்ணிப் பார்ப்போம். ஆறுதல் தரக்கூடிய, நம்பிக்கையூட்டும் காட்சி தெரிகிறது. இரண்டு ஆண்டுகளுக்குமுன் காணப்பட்ட அவநம்பிக்கை அடியோடு மறைந்து இப்போது எதிர்ப்பார்ப்பும் அது நிறைவேறும் நம்பிக்கையும் அதிகமாகியுள்ளது. இந்த சூழ்நிலையை கடைக்கோடியில் உள்ளவரும் உணர்ந்திடுவதும் தேசத்தின் தலைவிதியை மாற்ற முடியும் என்ற சமுதாயத்தின் நம்பிக்கை வளர்ந்துகொண்டே போவதும் அவசியம் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் பாரதத்துக்கு உலகம் முழுவதிலும் நிரம்ப நல்ல பெயர் ஏற்பட்டு வருகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அண்டை நாடுகளுடனான உறவை, நமது நாட்டின் நலனை மனதில் கொண்டு மேம்படுத்த பல மகத்துவம் வாய்ந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றுக்கு வெற்றியும் கிடைத்து வருகிறது. உலகமே பாரதத்தை புதியதொரு விதத்தில் அடையாளம் கண்டுகொள்கிறது என்று தோன்றுகிறது. தன்னில் பெருமிதமும் தன்னம்பிக்கையும் வாய்ந்த தேசமாக உலக நாடுகள் அனைத்திடமும் பாரதம் தனது பாரம்பரியமான, நல்லெண்ணம் வய்ந்த கண்ணோட்டத்துடன் தேச நலனை திடமாக பற்றியபடி சர்வதேச அரங்கில் தனது எண்ணத்தை திட்டவட்டமாக வெளிப்படுத்தி வருகிறது. அதுமட்டுமல்ல, உலகின் எந்த ஒரு நாட்டிலும் நெருக்கடி ஏற்படும்போது பாரதம் தனது நட்புக்கரம் நீட்டுகிறது; இதையெல்லாம் கண்டு உலகம் பிரமிக்கிறது, புதிய நம்பிக்கை கொள்கிறது. பாரதம் தரும் பகவத் கீதை, பாரதம் தரும் யோகா, பாரதம் தரும் பௌத்தம் எல்லாமே உலகத்தாரால் தலைவணங்கி ஏற்கப்பட்டு வருகின்றன. பாரதியம் என்னும் உணர்வு, அந்தப் பாரம்பரியம் இவற்றில் ஈடுபாடு அதிகரிப்பதால் அவற்றை போற்றிப் பாதுகாக்க, அவற்றின் மதிப்பை உயர்த்த கொள்கை ரீதியான முன் முயற்சிகளும் தொடங்கியுள்ளன. வல்லரசுகள் எனப்படுகின்றனவற்றின் பிடியிலிருந்து உதறி விடுவித்துக்கொள்ள முயன்று வரும் வளரும் நாடுகள் தங்கள் தலைவனாக பாரதத்தை பார்க்கின்றன. உயர்ந்த போதும், தாழ்ந்த போதும் பாரதம் உலகையே ஒரு குடும்பமாக கருதி, வல்லமையின் அடிப்படையில் தேச நலனையும் உலக நலனையும் நேர்மையுடன் நிலைநாட்டி, பாரம்பரியத்தை சிரமேற்கொண்டு வந்துள்ளது. தேச தேச உறவுகளில் இந்த பாணியை சற்று அனைவரும் அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர்.

பாரதத்தின் இந்த ஒளிமயமான வடிவத்தை பரிபூரணமாக தேசத்தார் அனைவருக்கும் சரி, உலகத்தார் அனைவருக்கும் சரி மனதில் பதியச் செய்வது அவசியம். அதற்காக நாம் புதிய சிந்தனை பரப்புவோம், புதிய சாதனைகள் படைப்போம். யுகயுகமாக இடையறமால் உயிர்ப்புடன் விளங்கிவரும் நமது தேசிய வாழ்வின் வேர் கண்டறிந்து அனைவருக்கும் நலன் செய்யும் அந்த தத்துவத்தின் ஆதாரத்தில் இன்றைய காலகட்டத்துக்கு பொருத்தமான சட்ட திட்டங்களும் அவற்றை திறம்பட ஏற்றெடுக்கும் சமுதாயமும் உருவாக்கப்பட வேண்டும்.

‘சாஹப் வாக்கியம் பிரமாணம்’ (ஐயா சொன்னா சரி) என்ற மனப்பான்மையை மனதிலிருந்து அடியோடு அப்புறப்படுத்த வேண்டும். பாரதிய அறிவாற்றலின் அடிப்படையில் உலகம் முழுவதிலுமிருந்து கிடைக்கின்ற நல்ல விஷயங்களை நமது தேசத்துக்கு பயன்படும் வகையில் ஏற்றெடுத்து நிகழ்காலத்திற்குப் பொருத்தமான பாதையை வகுத்துக்கொள்ளும் சுதந்திரமான சிந்தனை தேவை; அறிஞர்களும் சிந்தனையாளர்களும் ஆட்சியாளர்களும், ஆட்சிகளும் அவற்றின் சட்டத் திட்டங்களும் பழைய சிந்தனை, நடைமுறை, இவற்றை அதற்கேற்ப மாற்றாவிட்டால் உலகத்திற்கே முன்னுதாரணம் என்ற வடிவில் சுய சார்புள்ள சமத்துவம் வாய்ந்த, சுரண்டல் அற்ற, ஆற்றல் மிக்க சுபிட்சமான பாரதம் அமைவது சாத்தியம் இல்லை.

பார்வையில் பழுது நீங்குகிறது

எத்தனையோ நூற்றாண்டுகளாக உலகம் பார்க்கிற பார்வையில் உள்ள அரைகுறைத் தன்மை இன்று அறிவியல் என்னும் உரைகல்லில் நிரூபணமாகி வருகிறது; அந்த அரைகுறை சிந்தனையின் விளைவுகளால் அந்த பார்வையிலும் அந்த சிந்தனையிலும் மறு ஆய்வு தேவை என்பது உணரப்பட்டு வருகிறது. இந்த விழிப்புணர்வின் காரணமாக இப்போதெல்லாம் வளர்ச்சி பற்றி பேச்சு அடிபடும்போது பரிபூரண (ஹோலிஸ்டிக்), நிரந்தரத் தன்மையுள்ள (சஸ்டைனபில்) போன்ற வார்த்தை பிரயோகங்கள் சகஜமாகிவருகின்றன. சுற்றுச்சூழல் பற்றியும் சற்றே சிந்தனை செலுத்தப்படுகிறது. எனவே ‘பரிசோதித்து அனுபவித்து மாற்றம் காணும்’ சுழற்சிக்கு நடுவே இதுபோன்று அரைகுறைப் பார்வைகளை கொள்ளும் மாயையிலிருந்து விடுபட்டு காலத்தை வென்ற நமது கண்ணோட்டத்தின் ஆதாரத்தில் செயல்படுவது பொருத்தமாக இருக்கும். நமது இந்த பார்வை ஒருங்கிணைப்பையும் ஒத்துழைப்பையும் ஆதாரமாகக் கொண்டது. வாழ்க்கையில் பொருளும் இன்பமும் தான் முக்கியம் என்று இல்லாமல் தர்மமும் பண்புப் பதிவும் முக்கியம் என்பது நமது பார்வை. நிரந்தரமான வளர்ச்சிக்கு குறைந்தபட்ச எரிசக்தி செலவிடுதல்; அதிகப்பட்ச வேலைவாய்ப்பு; சுற்றுச்சூழல்; நெறிமுறை சார்ந்த வாழ்வு; விவசாயம் குறித்து கவனம்; சுயசார்பு; பரவலாக்கப்பட்ட பொருளாதாரம் இவற்றை நாம் ஏற்கிறோம். இதில் திறன் வளர்ச்சியும் உற்பத்தி பெருக்கமும் அடக்கம். தேசத்தின் கடைக்கோடி மனிதர் பற்றாக்குறை, படிப்பறிவின்மை, அவமதிப்பு இவற்றிலிருந்து விடுபட, இந்த அணுகுமுறை மிகவும் ஏற்றது. இதன் பொருட்டு விவசாயி, விவசாயம்; சிறு, குறு, நடுத்தர குடிசைத் தொழில்; சிறு விவசாயி, கை வினைஞர்கள்; உள்ளிட்டோர் குறித்து அதிக கவனம் செலுத்தப்படவேண்டும். பொருளாதார, சமுதாய துறைகளில் இயங்கும் எல்லா அமைப்புகளுன் சிந்தனையாளர்களும், ஊழியர்களும் சட்டம் இயற்றுவோரும் அரசும் அதிகார வர்க்கமும் என அனைவரும் இந்த விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.

நீதி ஆயோக் (பழைய திட்டக் கமிஷன்) வெளியிட்டுள்ள பிரகடனத்தில் இவை குறித்து தெளிவான அறிகுறிகள் கிடைக்கின்றன என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். இந்த மாற்றமெல்லாம் ஒரே நாளில் வந்துவிடாது. நமது கைக்கு வந்து சேர்ந்துள்ள பொருளாதார நிலவரத்தை உயர்த்தி பல்வேறு அரசியல் சமன்பாடுகள், நிர்வாக இவற்றை சமன்செய்யும் சித்துவிளையாட்டுகள் நடத்தி தேசத்தின் சாமான்யர் வரை வளர்ச்சி எட்டும்படி செய்வது, அந்த மக்களை வளர்ச்சிப் பாதையில் உடன் அழைத்துச் செல்வது ஆகியவை மிக முக்கியம். மக்களின் நம்பிக்கை நிலையாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். விளைவுகள் ஏற்பட பொறுமை காக்க வேண்டும். இது அனைவரும் கடைபிடிக்கவேண்டிய ஒன்று. முத்ரா பேங்க், ஜனதன் யோஜனா, எரிவாயு மானியம் கைவிட வேண்டுகோள், ஸ்வச்ச பாரத் இயக்கம், திறன் வளர்ப்பு போன்றவற்றை இந்த கண்ணோட்டத்தில் துவக்கி இருக்கிறார்கள். வளர்ச்சி என்னும் கொள்கைக்கு எந்த அளவு பலன் கிடைத்திருக்கிறது என்பதை நேர்மையாக அனைவருக்கும் தெரிவித்து அனைவரையும் வளர்ச்சிப் பாதையில் உடன் அழைத்துச் செல்ல வேண்டும்.

ஓட்டு வங்கி அரசியல் தவிர்ப்போம்

தேசத்தின் தலைவிதியை மாற்றவேண்டுமானால், எல்லா கொள்கைகளும் வெற்றிபெறுவது, சமுதாயம் முழுவதுமே உழைத்து, ஒத்துழைத்து திறன் வளர்த்து இயங்குவதில்தான் இருக்கிறது. இன்று வளர்ச்சி பற்றி பேசுகையில் தேசத்தின் மக்கள் தொகையும் சிந்தனைக்குரிய விஷயமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. நமது தேசத்தின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் கொள்கையை நன்கு யோசித்து உருவாக்க வேண்டும். மக்கள் தொகை பாரமா? சாதகமா? என இரு தரப்பிலும் கேள்வி எழுப்பி சிந்திக்க வேண்டும்.

இனி வரும் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நமது தேசத்தின் வள வாய்ப்புகளும் ஏற்பாடுகளும் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பும், அத்தியாவசிய பொருள்களும் கிடைக்கும் என்று யோசிப்போம். 50 ஆண்டுகளுக்குப் பிறகு நமது தேசத்தை நல்லபடியாக நடத்திச் செல்ல எத்தனை கரங்கள் தேவைப்படும் என்பதையும் யோசிப்போம். குழந்தை பெறுவதும் நல்லவர்களாக வளர்ப்பதும் தாய்மார்களுடைய பணியாக உள்ளது. எனவே பெண்களின் ஆரோக்கியம் காத்து, அவர்களின் மானத்தை காத்து, அவர்களுக்கு அதிகாரம் அளித்து, விழிப்புணர்வு ஊட்டி, வாய்ப்பளித்து, வாய்ப்பை பயன்படுத்திகொள்ளும் சுதந்திரம் அளித்து… என்று இவை அனைத்தையும் எவ்வாறு திட்டமிட்டு நிறைவேற்றுவது? 50 ஆண்டுகளுக்குப் பிறகு நமது நாட்டின் சுற்றுச்சூழல் எந்த நிலையில் இருக்க வேண்டும் என்று சிந்திப்போம்.

கடந்த இரு முறை நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு வெளியானதை அடுத்து மக்கள் தொகையின் வடிவமும் அதில் ஏற்பட்ட சமண்பாடு இன்மையும் பலத்த விவாதத்துக்கு உள்ளாகின. தேசத்தின் நடப்பு சூழ்நிலையிலும் எதிர்காலத்திலும் இதன் பாதிப்பு இருக்கும். இப்போதே பாதிப்பு தெரிகிறது. ஓட்டு வங்கி அரசியலிலிருந்து மேல் எழுந்து தேச மக்கள் அனைவருக்காகவும் பொதுவான மக்கள் தொகை கொள்கை வகுத்தாக வேண்டும். அந்த கொள்கையை ஆட்சியும் சட்டமுமே நடைமுறைப்படுத்திவிட முடியாது. அதை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் சமுதாயத்தின் மனதை பக்குவப்படுத்த முயற்சி நடக்க வேண்டும். இப்படி ஒருதேவை உள்ளது என்பதை கொள்கை வகுக்கும்போதே சிந்திப்பது அவசியம்.

மனிதர்களின் சகஜமான இயல்புகள் சம்பிரதாய சடங்குகள், மரபுகள் சமுதாயத்தில் நிலைபெற்றுள்ள கலாச்சார பாரம்பரியங்கள், இவற்றை இடத்துக்கும் காலத்துக்கும் சூழ்நிலைக்கும் ஏற்றபடி மாற்றவேண்டும் என்றால் சட்டம் போட்டு அல்லது அரசாங்கம் தரும் தண்டனையை காட்டி சாதிக்க முடிந்ததில்லை, சாதிக்க முடியப்போவதில்லை.

இத்தைகய மாற்றங்கள் ஏற்படுவதற்கு முன்பும் பின்பும் கூட விஷயங்களை எடுத்துச் சொல்வதன் மூலம் மக்கள் மனதில் மாற்றம் கொண்டுவர சுமுகமான விதத்தில் முயற்சி நடைபெற வேண்டும். இதில் அரசு, அதிகார வர்க்கம், ஊடகம், சமுதாயத்தின் பிரமுகர்கள் என அனைவருக்கும் பொறுப்பு உண்டு. மலிவான ஜனரஞ்சகம் அல்லது அரசியல் ஆதாயம் இவற்றிலிருந்து விலகி நின்று உள்ளது உள்ளபடியே சமுதாயத்தின் அனைத்து பிரிவினரிடமும் பரிவுடன் எடுத்துச் சொல்வதால் சமுதாயம் அதை ஏற்கிறது. அண்மையில் வெளியான சில தீர்ப்புகளை அடுத்து சில பிரிவினர் வேதனை வெளியிட்டார்கள் இப்படிப்பட்ட சூழ்நிலையை தவிர்க்கமுடியும். ஜைன மக்கள் மத்தியில் உபவாசம் இருந்து உயிர் நீத்தல், உடை இன்றி வலம் வரும் முனிவர்களின் வித்தியாசமான வாழ்க்கை முறை, சிறார்களுக்கு துறவறம் முதலிய பழக்கங்கள் தொன்று தொட்டு நிலவி வருகின்றன. இவை குறித்து அந்தந்த பிரிவினரின் ஆன்றோர்களிடம் விவாதித்து அவற்றை சரிவர புரிந்துகொள்ளாமல் அவற்றை புரட்டிப்போடும் முயற்சியில் ஈடுபட்டால் சமுதாயத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படும். அது தேசத்துக்கு பாதகமாகும். பழைய பழக்கங்களில் காலத்துக்கேற்ற மாற்றங்களைச் செய்து வருவது என்பதும் நமது தேசத்தின் பாரம்பரியமாகும். அதற்கேற்ப மரபுகள் குறித்து மறு ஆய்வு, மாற்றம் செய்வது நல்லது. இதெல்லாம் அந்தந்த சமூகத்தாரின் தரப்பிலிருந்துதான் தொடங்க வேண்டும். வெளியிலிருந்து திணிப்பது வீண் விவாத்திற்கே வழிவகுக்கும். எந்தவொரு மாற்றமானாலும் அதை மக்கள் ஏற்கச் செய்து மாற்றுவது வெற்றி தரும்.

சமுதாயம் சார்ந்ததாக கல்வி

மாற்றத்திற்கு மற்றுமொரு முக்கியமான கருவி கல்வி. கடந்த சில ஆண்டுகளாக கல்வி வணிகமயமாகி வருகிறது. படிப்புச் செலவு அதிகரித்துவிட்டதால் அது சாமானியருக்கு எட்டாக்கனி ஆகிவிடுகிறது. இதனால் கல்வியின் பலன் சமுதாயத்தில் தென்படுகிறதா என்றால் இல்லை. விவேகம், சுய பெருமிதம், கருணை உள்ளம், திறன், நற்பண்புகள் ஆகியவை வாய்ந்த மனிதனை உருவாக்குவதாக கல்வி இருக்க வேண்டும். இந்த நோக்கில் கல்வித்துறையில் பல்வேறு முயற்சிகள் பல நாடுகளிலும், நமது நாட்டிலும் கூட நடைபெற்று வருகின்றன. இந்த முயற்சிகளின் பலன் என்ன என்பது குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டும். பல அறிஞர்களும் அமைப்புகளும் ஆணையங்களும் கல்வி பற்றி பொருத்தமாக பல யோசனைகள் தெரிவித்துள்ளன. அவற்றைப் பரிசீலித்து பாடத் திட்டம் தொடங்கி கட்டண ஏற்பாடு, கல்வி நிலையம் நடத்துதல் வரை கல்வி முறையின் எல்லா அம்சங்களிலும் அடிப்படையான மாற்றம் கொணர்வது குறித்து யோசிக்க வேண்டும். கல்வி என்பது சமுதாயத்தின் ஆதாரத்தில் அமைய வேண்டும். கல்வியின் லட்சியம், இன்றைய காலகட்டத்தின் தேவை இரண்டையும் நிறைவேற்றுவதாக கல்விப் பயணம் அமைய வேண்டும். கல்விக்கு சுதந்திரம் அளிப்பதும் அவசியம். கல்வி வணிகமயமாவதைத் தடுக்க அரசே பல்வேறு நிலைகளில் கல்வி நிலையங்களை நல்லபடியாக நடத்த வேண்டும். எல்லா நடவடிக்கைகளுமே ஆசிரியரின் தரம் என்பதிலிருந்துதான் தொடங்குகிறது. ஆசிரியர்களுக்கு பொறுப்புனர்வு, நல்லவிதமாக அவர்களுக்கு பயிற்சி, தர மேம்பாடு ஆகியவை அவசியம்.

ஊர் மக்களாகிய நாம் கல்வியைப் பொறுத்த வரை, நுகர்வோர். நமக்கும் இந்த நடவடிக்கைகளில் மிக முக்கிய பங்குண்டு. வாழ்க்கையில் வெற்றி பெறுவது என்பதுடன் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குவது அவசியம் என்பதை நம்மால் நம் வீட்டு சிறார்களுக்கு எடுத்து சொல்லி, நாமே முன்னுதாரணமாக நடந்துகொண்டு அவர்கள் ஏற்கச் செய்ய முடிகிறதா? புதிய தலைமுறைக்கு நம்முடைய நடத்தை மூலம் சத்தியம், ஞாயம் கருணை, தியாகம் புலனடக்கம், நன்னெறி போன்றவற்றின் முக்கியத்துவத்தை மனதில் பதியச் செய்ய முடிகிறதா? ஊரிலும் உத்தியோகத்திலும் நமது தலைமுறை இவ்வாறு நடந்துகொண்டு, சிறுசிறு லாப நஷ்டங்களை கணக்குப் பார்க்காமல் உறுதியோடு விழிப்புணர்வோடு ஈடுபடுகிறதா? நமது பேச்சால், நமது எழுத்தால், நமது செயலால், சமுதாயம், குறிப்பாக புதிய தலைமுறை, ஒருமைப்பாடு, நல்லிணக்கம், அறநெறி இவற்றை நோக்கி முன்னேறுகிறதா இல்லையா? இதை சமுதாயத்திற்கு எடுத்துச் சொல்லி புரியவைக்கும் பொறுப்பு தங்களுக்கு உண்டு என தலைமையும் ஊடகமும் உணர்கிறதா இல்லையா?

உள், வெளி பாதுகாப்பு தீவிரம் அடைய

அரசு, பொருளாதாரம் போன்றவை மக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் ஏற்பாடுகள்; மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பதும் ஓரளவு உண்மை. எனவே கொள்கை வகுப்பதில் சமுதாயத்தை இணைக்கும் நோக்கம் இருக்க வேண்டும். மிக பலவீனமானவரையும் உள்ளடக்கி அனைத்து மக்களின் மேம்பாடு குறித்து கருத்து செலுத்துவதாக கொள்கைகள் அமைய வேண்டும். நமது தேசத்தின் தேர்தல் முறை, நிர்வாகம், வரி விதிப்பு, தொழில் கொள்கை, கல்விக் கொள்கை, விவசாயக் கொள்கை, சுகாதார வசதிகள் முதலியவற்றில் அடிப்படையான திருத்தங்கள் செய்து அவற்றை நல் அமைப்புடன் மக்களுக்கு பயன்படும் விதத்தில் உருவாக்குவது அவசியம்.

பாகிஸ்தானின் பகைமை எண்ணம்; சீனாவின் நாடு பிடிக்கும் நோக்கம்; உலகில் அதிகமாகி வரும் கெடுபிடி போக்குகள், ஆணவம், சர்வதேச அரசியல் சதுரங்கத்தில் காணப்படும் செப்பிடு வித்தைகள் இவற்றால் ஏற்பட்டுள்ள ஐஎஸ்ஐஎஸ் குழுவின் விபரீதம்; இவை அனைத்தின் விளைவாக நமது தேசத்தின் எல்லைப் பாதுகாப்பு உள்நாட்டுப் பாதுகாப்பு ஆகியவை மேலும் மேலும் சிக்கலாகி வருகின்றன. வெளிநாட்டு சக்திகளின் துணையுடன் அல்லது வெளிநாட்டு சிந்தனையால் உந்தப்பட்டு வருகின்ற பயங்கரவாதத்தில் மயங்கி அதன் பின்னால் ஓடுகிற ஒரு சிலர் நமது நாட்டிலும் உள்ளனர். இந்த பிரச்சினைகள் அனைத்தையும் முழுமையாக தீர்க்க பரிபூரணமான ஒரு கொள்கை வகுத்து, உறுதியாக அதை நடைமுறைப்படுத்துவது அரசின் கடமை என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள்.

சமுதாய கலாச்சார சூழல்களில் நற்பண்புகள் ஊட்டம் பெற வேண்டும்; அறநெறி மங்குவது தடுக்கப்பட வேண்டும். எனவே கல்வியில் உரிய மாற்றம் கொணர்வது அவசியம்; அத்துடன் செய்தி ஊடகங்கள் மூலமாக தெரிந்தோ தெரியாமலோ எந்த ஒரு தீய விளைவும் தலையெடுக்காமல் செய்ய வேண்டும். ஊடகங்களின் சுதந்திரத்தை கருத்தில் கொண்டு அவற்றை கட்டுப்படுத்த அரசு ஆவன செய்யவேண்டும் என்றும் பலர் விரும்புகிறார்கள். இவ்வாறு உருவாகியுள்ள எதிர்பார்ப்புக்கு ஏற்ப காரியங்கள் நடைபெற வேண்டும். நடைபெறும் இடத்தில் வேகம் அதிகரிக்க வேண்டும் என்று சிந்திப்பதும் சரிதான். இதற்கு மற்றொரு பக்கமும் உண்டு. உலகத்திலும் சரி, நமது நாட்டிலும் சரி, சமுதாயத்தின் விருப்பம், அதன் தரம், அதன் ஒருங்கிணைந்த சக்தி, இவற்றால் ஆட்சி அதிகாரம் கட்டுப்படுத்தப்படுவதும் உண்டு. நமது ‘சுயம்’ என்ன என்பதை உணர்ந்துகொண்டு நமது சுய கௌரவத்தின் அடிப்படையில் சுயநலத்தையும், பேதங்களையும் மனதிலிருந்து அப்புறப்படுத்திவிட்டு தேசத்தின் தலைவிதியை மாற்ற எண்ணம் கொண்டு சமுதாயம் தலைநிமிரும்போது ஆட்சி அதிகாரம் எல்லாம் சமுதாயத்திற்கு அனுகூலமாக மாறுகின்றன; சமுதாயத்திற்கு உறுதுணை புரிகின்றன, மாற்றத்திற்கு முன்னோடிகளாக விளங்குகின்றன. ஆட்சி, நிர்வாகம், குடிமக்கள் மூன்றின் மனதிலும் நமது தேசத்தின் வடிவம் குறித்து முழுமையான தெளிவு ஏற்பட வேண்டும்; ஒருங்கிணைந்த நிலையில் சரியான திசையில் சிந்தனை செய்ய வேண்டும். அப்போதுதான் எந்த ஒரு தேசமும் பாதுகாப்புடன் நன்மதிப்புடன் சுபிட்சமாக நலமாக வாழ முடியும்.

நமது சமுதாயத்தில் நிறைய வேற்றுமைகள் உள்ளன. இந்த நிலையில் சமுதாயத்தை ஒருங்கிணைக்க மூன்று சூத்திரங்கள் உண்டு:

(1) எல்லா வேற்றுமைகளையும் ஏற்று மதிக்கிற நமது சனாதனமான கலாச்சாரம் – ஹிந்து கலாச்சாரம். அதுதான் எல்லா பாரதியர்களின் சுபாவம், பாரதியர்களின் பண்பாட்டு பாரம்பரியம்.

(2) அப்படிப்பட்ட கலாச்சாரத்தை வாழ்ந்து காட்டுவதையே தங்கள் வாழ்க்கையாகக் கொண்ட நமது முன்னோர்களான மகான்கள், தங்களையே அந்த முயற்சியில் பலிதானமாக்கினார்களே, அவர்கள் குறித்த பெருமிதம் நமக்கு இன்றும் ஊக்கம் அளிக்கும். (3) நளிர்மணி நீரும் நயம்படு கனிகளும் வாய்ந்த உயிர்ப்புள்ள நமது தாய்நாடு அந்த கலாச்சாரத்தின் அடிப்படையான சத்தியத்தையும் தர்மத்தையும் உருவகப்படுத்துகிறது. அதன் தெய்வீக ஆற்றலும் ஊட்டமும் நம்மை விசால மனப்பான்மை உள்ளவர்களாக்கி, சத்திய நாட்டம் கொண்டவர்களாக்கி, தாயகத்திடம் தளரா அன்பு கொண்டவர்களாக்கியுள்ளது. அந்த நமது முன்னோர்களால் நமக்கு பாரம்பரிய சொத்தாக இது வழங்கப்பட்டுள்ளது. இன்றும் தேசத்தின் ஒவ்வொரு நபர் மனதிலும் ஆற்றலை எழுப்புகிற சக்தி அதற்கு உண்டு.

இந்த மூன்று சூத்திரங்கள் வாயிலாக மொழி, மாநிலம், வழிபடு முறை, கட்சி முதலிய வேற்றுமைகளை பழுதில்லாமல் வைத்தபடியே ஒவ்வொருவரும் மனப்பூர்வமாக சமுதாயத்துடன் ஒன்றுபடுகிறார். தனது சிறிய அடையாளத்தை பத்திரமாக வைத்தபடியே சமுதாயத்தின் விசாலமான அடையாளத்தை சொந்தமாக்கிக் கொள்கிறார்.

இந்த மூன்று சுதந்திரங்களின் அடிப்படையிலான மனிதாபிமானம் உள்ள பராக்கிரமம், கண்ணோட்டம், சிந்தனை, அதற்கேற்ற உறுதி, தடையற்ற முன்னேற்றம் ஆகியவற்றைத்தான் நாம் ‘ஹிந்துத்துவம்’ என்கிறோம்.

தேசத்தின் தலைவிதியை நிர்ணயிப்பது ஹிந்து சமுதாயமே

ஹிந்து சமுதாயம் – ஹிந்து என்ற சொல் உருவாவதற்கு முன்பிருந்தே கூட – இந்த மூன்று சூத்திரங்களின் ஆதாரத்தில் காலத்திற்கு ஏற்ற வடிவங்களில் வாழ்ந்து வருகிறது. இந்த தேசத்தின் நல்லதும் கெட்டதும் ஹிந்து சமுதாயத்தின் பொறுப்பு, ஹிந்து சமுதாயத்தின் பொறுப்பு மட்டுமே. நமது இந்த ஹிந்துஸ்தானம் எனும் தேசத்தின் தலைவிதியும் எதிர்காலமும் ஹிந்து சமுதாயத்தோடு இரண்டற பின்னிப் பிணைந்திருக்கிறது.

தேசத்தின் தலைவிதியை நிர்ணயிக்கிற ஹிந்து சமுதாயத்தை தேசத்துக்காக பாடுபடுகிற தகுதி வாய்ந்ததாக்க கடந்த 90 ஆண்டுகளாக ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் இடையறாமல் முயற்சி செய்து வருகிறது. தேச நலனையும் தேசியத்தின் நலனையும் சமுதாய நலனையும் பார்த்துக்கொள்ளும் பணியை யாரிடமும் குத்தகைக்கு விட முடியாது என்பதை சங்கத்தை நிறுவிய டாக்டர் ஹெட்கேவார் மிக நன்றாகப் புரிந்துகொண்டிருந்தார். சமுதாயம், ஒருங்கிணைந்து உரிய தகுதி வாய்ந்ததாகி நீண்டகாலம் பாடுபட்டால்தான் தேசம் மேன்மைகளெல்லாம் வாய்ந்ததாகும். சமுதாயத்தை அதற்கு தயார்படுத்த கார்யகர்த்தாக்களை உருவாக்கும் பணிதான் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம். சங்கத்தின் எளிமையான செயல்முறை வழியாக உருவாகியுள்ள ஸ்வயம்சேவகர்களின் அருமையை இன்று அனைவரும் உணர்ந்திருக்கிறார்கள். ஊர் மக்களின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் இன்று உரியவர்களாகி இருக்கிறார்கள் ஸ்வயம்சேவகர்கள். உலகமெங்கும் கூட பாரதத்துக்கு நன் மதிப்பு பெற்றுத் தருகிறார்கள் நமது ஸ்வயம்சேவகர்கள்.

வாருங்கள், நாம் அனைவரும் இந்த பவித்திரமான நற்பணியில் தோள் கொடுப்போம். ஸ்வயம்சேவகர்கள் ஆவோம், கார்யகர்த்தாக்கள் ஆவோம். ஏனென்றால் உலகம், தனக்குத் தேவை என்று கருதுகிற புதிய பாதையை வகுத்துத் தரக்கூடிய பாரதத்தை உருவாக்க இது ஒன்றுதான் வழி. தனது சனாதனமான அடையாளத்தின் ஆதாரத்தில் பாரதிய சமுதாயம் குற்றங் குறைகள் நீங்கியதாக, ஒருங்கிணைந்ததாக உருவாகியே தீரவேண்டும். அஞ்சாமல், பேதங்களையும் அப்புறப்படுத்திவிட்டு நிஜமான சுதந்திரம் தந்து அவருக்குள் மனிதப் பண்பு, சகோதர உணர்வு நிரம்பச் செய்து, அறநெறிப் பண்புகள் எனும் அமுமத்தில் தோய்ந்த நமது தனிப்பட்ட, சமுதாய செயல்பாடுகளால் மனித குலத்துக்கு சுகமும் சாந்தியும் முக்தியும் நாம் அளித்தே ஆகவேண்டும். இதுதான் வழி, இதுதான் நம் பணி.

பாரத் மாதா கீ ஜெய்!

Mohan_Bhagwat

அவசியம் மக்களுக்கு அதிகாரம்”

நாகபுரி விஜயதசமி விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றவர் டாக்டர் வீரேந்திர குமார் சாரஸ்வத். இவர்பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.)’ முன்னாள் பொது மேலாளர். நீதி அயோக் உறுப்பினர். அவர் தமது சிறப்புரையில், பாரதத்தை மீண்டும் உலகின் முன்னணி நாடுகளின் வரிசையில் இடம்பெறச் செய்ய வழிமுறைகள் என்னென்ன என்பது பற்றி எடுத்துரைத்தார். இங்கே சில பகுதிகள்:

கல்வி, சுகாதாரம், கிராம வளர்ச்சி, விவசாயம் இவற்றை தகுந்தபடி மாற்றி சாமானியரை மையமிட்டதாக அமைக்க வேண்டும். அப்போதுதான் பாரதம் உலகின் முன்னணி நாடு என்ற பெயர் பெற முடியும். சாந்தி, சத்தியம், தர்மம், அகிம்சை, அன்பு இவற்றின் வழியில் சென்று, பாரதம் மீண்டும் உலகத்தின் குரு ஆகிட முடியும்.

மக்களுக்கே சக்தி

வறுமையை ஒழிப்பதில் முனைவதற்கு பதிலாக மக்களுக்கு அதிகாரம் வழங்குவதில் முனைய வேண்டும். 50கள், 60களில் முதல் பசுமை புரட்சி நடந்தபோது நாம் இவ்வாறு செய்தோம். ஆனால் இரண்டாவது பசுமை புரட்சியின்போது அதுபோலவே செய்யவேண்டும் என்று அவசியமில்லை. விவசாய உற்பத்தியை அதிகரிப்பதற்காக நவீன தொழில் நுட்பங்களை ஏற்பதோடு கூடவே பாரம்பரிய தொழில்நுட்பங்களை சரிவர பயன்படுத்துவது அவசியம். இது நிறைவேற, கிராமவாசிளான நமது சகோதரர்களின் வருமானத்தை 6 மடங்கு அதிகரிக்கச் செய்யவேண்டும். விவசாய உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு இடைத்தரகர்களை நீக்கிவிட வேண்டும். விவசாயத்துக்கு என்றே தேசத்தில் ஐஐடிக்கள் தொடங்க வேண்டும். ஏனென்றால் இன்றுகூட பாரதத்தின் பொருளாதாரம் விவசாயத்தைச் சார்ந்தே உள்ளது.

அனைவருக்கும் சுகாதாரம்

கட்டுப்படியாகிற விதத்தில் அனைவருக்கும் சுகாதார வசதி கிடைக்கச் செய்ய வேண்டும். இதன் பொருட்டு கார்ப்பரேட் ஆஸ்பத்திரிகளின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்தும் அமைப்பு தேவை. இணையவழி மருத்துவ முறையை வளர்த்தெடுத்து தொலைதூர பகுதி வாழ் மக்களுக்கும் கிராமப்புற மக்களுக்கும் மருத்துவ வசதி கிடைக்கச் செய்ய வேண்டும். பிணி தீர்க்கும் பணி செய்யும் டாக்டர் தொழில் தொடங்கும் போது எடுத்துக்கொண்ட உறுதி மொழியை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

கிராமங்களில் நகர்புற வசதிகள்

நகரை நோக்கி கிராமப்புற மக்கள் குடி பெயர்வதை தடுக்க கிராமப்புறங்களில் நகர்புற வசதிகள் செய்துகொடுக்க வேண்டும். நமது நாட்டில் நிமிடத்திற்கு 30 பேர் வீதம் நகரங்களை நோக்கி குடிபெயர்கிறார்கள் என்கிறது புள்ளிவிவரம். கிராமப்புற மக்கள் நகர் புறத்தை நோக்கி குடிபெயர்வதை தடுக்க நகர் புற வசதிகளை கிராமப்புற மக்களுக்கும் கிடைக்கச் செய்வதைப் பற்றி டாக்டர் அப்துல் கலாம், பண்டின் தீன்தயாள் உபாத்யாய இருவருமே கருத்து வெளியிட்டிருக்கிறார்கள். ஸ்மார்ட் நகரங்களுக்கு பதில் ஸ்மார்ட் கிராமங்கள்தான் அதிகம் தேவை.

 

 

மூன்று முத்துக்கள்

நமது சமுதாயத்தில் நிறைய வேற்றுமைகள் உள்ளன. இந்த நிலையில் சமுதாயத்தை ஒருங்கிணைக்க மூன்று சூத்திரங்கள் (1) ஹிந்து கலாச்சாரம்

(2) முன்னுதாரணமான மூதாதையர்

(3) உயிர்ப்புள்ள தாய் நாடு