துப்புரவுத் தொழிலாளர்கள் பிரச்சனைகள்

பாரதிய மஸ்தூர் சங்கம் மற்றும் தத்தோபந்த் தெங்கடி அறக்கட்டளை சார்பில் “பாரதத்தில் துப்புரவுப் பணியாளர்கள் இறப்புகள்” குறித்த தேசிய மாநாடு டெல்லியில் உள்ள மாளவியா பவனில் நடைபெற்றது. இதில் 11 மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், “துப்புரவுத் தொழிலாளர்களின் பிரச்சனைகள்; மற்ற எஸ்.சிக்களின் பிரச்சனைகளுடன் ஒப்பிடுகையில் வேறுபட்டவை. இந்த துப்புரவு தொழிலாளர்களின் பிரச்சனைகளை தேசிய எஸ்சி கமிஷனால் தீர்க்க முடியாது. தேசிய தூய்மை ஆணையத்திற்கு அரசியலமைப்பு அங்கீகாரம் மற்றும் உரிமைகள் வழங்கப்பட வேண்டும். 7 மாநிலங்களில் மட்டுமே துப்புரவு பணியாளர்கள் ஆணையம் உள்ளன. இந்த ஆணையம் அனைத்து மாநிலங்களிலும் அமைக்கப்பட வேண்டும். இந்த நவீன யுகத்தில் துப்புரவுத் தொழிலாளியின் மரணம் மற்றும் சக மனிதர்கள் சாக்கடை கால்வாயில் இறங்கி கையால் சுத்தம் செய்ய வேண்டிய நிலை என்பது மனித குலத்தின் அழியாத அடையாளமாக உள்ளது. இதை தடுக்க இயந்திரமயமாக்கலை மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும். பல இடங்களில், ஒப்பந்ததாரர்கள், விதிகளுக்கு மாறாக, எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி, உடல் பாதுகாப்பு கவசங்கள் ஏதுமின்றி, அனுபவமற்றவர்களை சாக்கடையில் இறக்குவதுதான் இந்த உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணம். துப்புரவு பணியின்போது இறந்தவர்களுக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் 2014ல் தீர்ப்பு வழங்கியது. ஆனால் இழப்பீட்டுத் தொகையின் பொறுப்பு குறித்து தெளிவான வறையறை அதில் இல்லை. ஏதேனும் இயலாமை, காயம் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் இழப்பீடு குறித்து அதில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்த இடைவெளிகளை அகற்ற வேண்டும். இத்தகைய பல இறப்புகளும் பதிவாகவில்லை. சாக்கடையில் இருந்து விஷ வாயுக்கள் வருகின்றன. மூடியை அகற்றிய நீண்ட நேரம் பிறகு, சரியான பாதுகாப்பு உடைகள் மற்றும் உபகரணங்களுடன் சாக்கடையில் இறங்க வேண்டும். இறப்புகளுக்கு உடனடியாக அந்தந்த நகராட்சி மூலம் 10 லட்சம் கொடுக்கப்பட வேண்டும். இந்தச் சட்டத்துடன் மோட்டார் வாகனச் சட்டத்தையும் சேர்க்க வேண்டும். அனைத்து துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் சுகாதாரப் பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும். துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு சீரான இடைவெளியில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்த விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்” என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.