துணைவேந்தர்கள் தேடல்குழு கலைப்பு கோர்ட் உத்தரவால் திருப்பம்

நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றி, துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான தேடல் குழு அரசாணையை, கவர்னர் ரவி திரும்ப பெற்றுள்ளார். புதிய அரசாணை பிறப்பிக்க, தமிழக அரசு தேவையான நடவடிக்கை எடுக்க காத்திருப்பதாக, கவர்னர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, கவர்னர் ரவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவை பாரதியார் பல்கலை, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை மற்றும் சென்னை பல்கலைகளுக்கு வேந்தர் என்ற முறையில், துணை வேந்தர்களை தேர்வு செய்வதற்கான தேடல் குழுக்களை, கடந்த செப்டம்பரில் அமைத்து கவர்னர் ரவி உத்தரவிட்டார். ஆனால், பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி.,யின் ஒழுங்குமுறைகளை பின்பற்றாமல், தமிழக அரசு சார்பில், மேற்கண்ட மூன்று பல்கலைகளுக்கும் தேடல் குழுவை அமைத்து அரசு ஆணை பிறப்பித்தது. இது, அரசிதழிலும் வெளியானது.

இந்நிலையில், புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை துணை வேந்தர் நியமனம் குறித்த வழக்கில், ‘யு.ஜி.சி.,யின் 2018ம் ஆண்டு ஒழுங்குமுறைகளை பின்பற்றாமல், துணை வேந்தர்களை தேர்வு செய்யும் தேடல் குழுக்களை அமைக்க முடியாது’ என, சென்னை உயர்நீதிமன்றம், கடந்த டிசம்பர் 19ல் பிறப்பித்த தீர்ப்பில் கூறியுள்ளது.

இதுகுறித்து, யு.ஜி.சி., ஒழுங்குமுறைகளின்படி, புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலையின் சட்டத்தை தாமதமின்றி திருத்த வேண்டும் என்றும், நீதிமன்றம் உத்தரவிட்டது. மேற்கண்ட காரணங்கள் அடிப்படையில், துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பாக, தேடல் குழுக்கள் அமைக்கப்பட்ட அரசாணைகள் திரும்ப பெறப்படுகின்றன. அதன் அடிப்படையில், தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என, நம்புகிறேன். இனி, உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஆகியவற்றின் உத்தரவுகளை பின்பற்றி, அரசு துணை வேந்தர்களை தேர்வு செய்யும் குழுக்களை அமைக்கும் என, நம்புகிறேன்.

தமிழக மாணவர்களின் உயர் கல்வி மற்றும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, இதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.