நடிகர் சங்க கட்டடத்திற்கு விஜயகாந்த் பெயர்: விஷால்

”நடிகர் சங்க புதிய கட்டடத்திற்கு, விஜயகாந்த் பெயரை வைப்பதில், எந்த பிரச்னையும் இருக்காது,” என, நடிகர் சங்க பொதுச்செயலர் விஷால் கூறினார். சென்னை கோயம்பேடில் உள்ள தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில், விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின், விஷால் கூறியதாவது:

விஜயகாந்த் நல்லடக்கத்தின் போது, நான் இங்கு இருந்திருக்க வேண்டும். முயற்சி செய்தும், சந்தர்ப்ப சூழ்நிலைகளால், என்னால் வர முடியவில்லை. நடிகர் சங்க புதிய கட்டடத்திற்கு, விஜயகாந்த் பெயரை வைப்பதில், எந்த பிரச்னையும் இருக்காது. அனைத்து நிர்வாகிகளும், உறுப்பினர்களும் இதை ஏற்பர். விஜயகாந்திற்கு, நடிகர் சங்கம் வாயிலாக வரும் 19ம் தேதி அஞ்சலி கூட்டம் நடத்தப்பட உள்ளது. இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத துணை நடிகர்கள், அதில் பங்கேற்க உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.