திருவள்ளுவர் சிலை பிரான்சில் திறப்பு

ஐரோப்பிய நாடான பிரான்சில், திருவள்ளுவரின் முழு திருவுருவச் சிலை திறக்கப்பட்டுள்ளது. பிரான்சுக்கு கடந்த ஜூலை மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, செர்ஜி நகரில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும் என, தெரிவித்திருந்தார். இதையடுத்து, திருவள்ளுவர் சிலை நிறுவ, பிரான்சில் உள்ள தமிழ் கலாசார சங்கம் முன்னெடுத்தது.

இந்நிலையில், பிரான்சின் செர்ஜி நகரில், பார்க் பிரான்ஸ்வா மித்தேரான் என்ற இடத்தில், திருவள்ளுவரின் முழு திருவுருவச் சிலை நிறுவப்பட்டு உள்ளது. இந்த சிலையை, புதுச்சேரி பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் திறந்து வைத்தார். திறப்பு விழாவில், பிரான்ஸ் நாட்டுக்கான இந்திய துாதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், ‘பிரான்சின் செர்ஜியில் உள்ள திருவள்ளுவர் சிலை, நம் கலாசாரப் பிணைப்புகளுக்கு அழகான ஒரு சான்று. திருவள்ளுவர் ஞானம் மற்றும் அறிவின் அடையாளமாக உயர்ந்து நிற்கிறார். அவரது எழுத்துக்கள் உலகம் முழுதும் லட்சக்கணக்கானவர்களை ஊக்குவிக்கின்றன’ என, குறிப்பிட்டுள்ளார்.