திருப்புல்லாணி கோயிலில் ரூ.1 கோடி மதிப்பு நகைகள் மாயம்

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் ஆதி ஜெகநாதப்பெருமாள் கோயிலில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க மற்றும் வெள்ளி நகைகள் காணவில்லை என அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில் உள்ளது. ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தில் கீழ் இக்கோயில் உள்ளது. கோயிலில் மூலவருக்கும், தாயாருக்கும் அணிவிக்கப்படும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகளை, கோயிலில் உள்ள பாதுகாப்பு பெட்டகம் மற்றும் ராமநாதபுரம் அரண்மனையில் உள்ள அறங்காவலர் பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த பெட்டகம் மற்றும் அதன் சாவி ஆகியவை சீனிவாசன் என்ற ஸ்தானிகர் வைத்து இருப்பது வழக்கம்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு, ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்தின் திவானும், நிர்வாக செயலாளருமான பழனிவேல் பாண்டியன் நகைகளை ஆய்வு செய்தார். அப்போது பல நகைகள் காணவில்லை. இதனையடுத்து சீனிவாசனிடம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து, அவரை பழனிவேல் பாண்டியன் சஸ்பெண்ட் செய்தார். இச்சூழ்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி.,யிடம் 30 வகையான தங்க நகைகள், 16 வெள்ளி நகைகள் காணவில்லை எனவும், இவற்றின் மதிப்பு ரூ.1 கோடி என பழனிவேல் பாண்டியன் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.