ஐ.நா.,வின் சர்ச்சை கருத்து: துணை ஜனாதிபதி பதிலடி

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து, ஐ.நா., தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மதுபான கொள்கை ஊழலில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கெஜ்ரிவாலின் கைது குறித்து உலக நாடுகள் கருத்து தெரிவித்து வருகின்றன.

முதலில் குரலெழுப்பிய ஜெர்மனிக்கு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு, ‘எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம்’ என கேட்டுக்கொண்டது. அடுத்ததாக அமெரிக்காவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்தியாவில் உள்ள அமெரிக்க துாதரக அதிகாரியை நேரில் அழைத்து தங்கள் கண்டனத்தை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து ஐ.நா., பொதுச் செயலர் ஆண்டனியோ குட்டரசின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் நேற்று கூறியதாவது: இந்தியாவிலோ அல்லது தேர்தல் நடக்கும் எந்த நாட்டிலோ, மக்களின் அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அங்கெல்லாம் அனைவரும் சுதந்திரமாகவும், நியாயமாகவும் ஓட்டளிக்கும் சூழல் நிலவுவதாக நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு, நம் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது:

இந்தியாவின் சட்டம் ஒழுங்கு குறித்து வெளியில் இருந்து யாரும் பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நேர்மையான நீதி நடைமுறை உள்ள ஜனநாயகம், இந்தியாவில் உள்ளது. எந்த ஒரு தனி நபருக்காகவோ, ஒரு குழுவினருக்காகவோ, சட்டம் ஒழுங்கு விஷயத்தில் சமரசம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. இங்கு சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம். இவ்வாறு அவர் கூறினார்.