திருப்பாவை – 4

 

ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்                        
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

மழை எப்படி வர்ஷிக்கிறது என்கின்ற விஞ்ஞான நுட்பத்தைத் தனதுஇந்த பாசுரத்தில் புகுத்தி, அதற்குக் காரணன் கண்ணனே என்று கூறி, அனைவரும் அவனைப் பிரார்த்தனை செய்யப் பணிக்கிறார் ஸ்ரீஆண்டாள் நாச்சியார்.
ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னரே மழை எப்படி பொழிகிறது என்று , திருப்பாவையில் சொல்லி இருக்கிறார் எனவே ஆண்டாள் ஒரு தெய்வீகக் கவி மட்டுமல்ல; விஞ்ஞான மேதையும் கூட அவரது திருப்பாவையில்
மெய்ஞானமும், விஞ்ஞானமும் இனைந்து நிற்கின்றது. இந்தியா ஒரு புண்ணியபூமி என்று உலக மக்களால் போற்றப்படும் நாடு. சித்தர்களும், முனிவர்களும், ரிஷிகளும் வாழ்ந்த பூமி. அண்ட சராசரங்களையும் அறிவியலே இல்லாத கால கட்டத்தில் கூட எடுத்துச்சொன்னவர்கள் … நம் முன்னோர்கள் வாழும் முறை, வாழ்வதற்கான வழி முறைகள், வாழ்க்கை தத்துவம் , மருத்துவம், வானசாஸ்திரம், கணிதம் , பொருளாதாரம் போன்ற அனைத்துத் துறைகளிலும் வல்லவர்கள் நம் இந்தியர்கள். நேற்று மூன்றாம் பாசுரத்தில் நோன்பு நோற்பதால் கிடைக்கும் பலனைச் சொன்னார் ஆண்டாள்.

நாடெல்லாம் மும்மாரி பெய்து பசுக்கள் பாலால் இல்லங்கள் நிறைந்து, செல்வம் பெருகும் என்றவர், இந்தப் பாசுரத்தில் தாம் சொன்ன சுபிட்சத்துக்காக கண்ணனே கருணை மழையாகப் பொழிய வேண்டும் என்று வேண்டுகிறார். “மழை மண்டலத்துக்குத் தலைவனாக விளங்கும் கண்ணனே! உன் கொடையில் எதையும் நீ ஒளிக்காமல் அருள வேண்டும்., நீ கடலினுள் புகுந்து, அங்கிருந்து நீரினை முகந்து கொண்டு பேரொலி எழுப்பி கர்ஜனை செய்து, ஆகாயத்தின் மேல் ஏறி, ஊழி காலம் முதலான அனைத்துக்கும் காரணனாக விளங்கும் எம்பெருமானின் திருமேனியைப் போலே கறுத்து, பெருமை பொருந்திய சுந்தரத் தோளுடையானும், நாபியிலே கமல மலர் கொண்டு திகழும் பெருமானின் வலக்கையிலே திகழும் சக்கரத்தாழ்வானாகிய திருவாழியைப் போலே ஒளிர்ந்து, இடது கரத்தில் திகழும் பாஞ்சஜன்யப் பெரும் சங்கினைப் முழக்கி, வெற்றியை மட்டுமே ஈட்டும் சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் அம்புகளைப் போல் மழை பொழிவாயாக! அம்மழையால் நாங்கள் இவ்வுலகில் மகிழ்வுடன் வாழ்வோம். மார்கழி நீராடலுக்காக எல்லா நீர்நிலைகளையும் நிரப்பி எங்களை மகிழ்ச்சியடையச் செய்வாயாக.. கடல்நீரை மேகம் எடுத்துக்கொண்டு கரியமேகமாக மாறி மின்னலாக மின்னி, இடியாக முழங்கி சரமழையாகப்பொழிவதை எத்தனை அழகாக விளக்குகிறார் ஆண்டாள்.