திருப்பாவை 30

பாற்கடலைக் கடலைக் கடைந்து அமுதளித்த மாதவனை கேசவனை, சந்திரனை ஒத்த அழகு முகத்தையும் செம்மையான அணிகலன்களை உடைய ஆய்ச்சியர், பாவை நோன்பு முடித்துச் சென்று திருமாலின் பேரருள் பெற்ற வரலாற்றை ஆண்டாள் பாடி அருளினாள். நோன்பு நோற்ற கோபியர்கள் மற்றும் அதனை அநுகரித்த ஆண்டாளும் பகவத் விஷயத்தில் மிக்க ஈடுபாடுடையவர்களாய் இருந்தமையால் பலம் பெற்றார்கள். சரி… நம் போன்ற பாமரர்களும் பலன் பெறுவது எப்படி? ஆண்டாள் மற்றும் பிற கோபியர்கள் சம்பந்தமுடைய சங்கத் தமிழ் மாலை திருப்பாவையின் பாசுரங்கள் முப்பதையும் தவறாமல் நாளும் அனுசந்தத்திக் கொண்டு சரணம் புகுந்தால் திருமால் அவர்களுக்கு அருளியது போல நமக்கும் இஹலோகத்திலும் பரலோகத்திலும் பிராட்டியும் தானுமாய் இருந்து கிருபை செய்ய, பகவத் அனுபவம் ஆகிய ஆனந்தம் பெற அருள் புரிவான். கார் உள்ள அளவும் கடல் நீருள்ள அளவும் திருப்பாவை என்னும் இந்த பக்தி இலக்கியம் அன்பர் நெஞ்சத்திரைகளில் நீங்காத ஓவியமாய், காவியமாய் மிளிரும்.