திருப்பாவை 24

மாவலியால் தேவர்களும் மற்றோரும் சொல்லொணாத துன்பங்கள் பெற்ற காலத்தில் இவ்வுலகினை உனதுத் திருவடிகளால் அளந்து உன்னுடையது என்று உணர்த்தியவனே! நீ பல்லாண்டு வாழ்க! நீ  ராமாவதாரம் எடுத்த போது, சீதையை மீட்க தெற்கிலுள்ள இலங்கைக்கு சென்று ராவண சைன்யத்தை வெற்றி கொண்டவனே, உன் வீரம் வாழட்டும்! சக்கர வடிவில் வந்த சகடன் என்ற அசுரனை ஒரே உதையில் வீழ்த்தியவனே, உன் புகழ் வாழ்க! கன்று வடிவில் வந்த வத்சாசுரனை எரிதடியாகக் கொண்டு, அவனை விளாமர வடிவில் வந்த கபித்தாசுரன் மீது எறிந்து அழித்தவனே, உன் வீரக்கழல்கள் வாழ்க! கோவர்த்தனகிரியை குடையாக்கி ஆயர்குலத்தவரை இந்திரன் அனுப்பிய மழையில் இருந்து காத்தவனே! உன் இரக்க குணம் வாழ்க! பகைவர்கள் எவ்வளவு பலவான்களாயினும் அவர்களை உன் கையிலுள்ள வேலால் சம்ஹாரம் செய்தவனே, உன் வேல் வாழ்க!  என்று, கண்ணனது வீரச்செயல்களைப் பாடிப் பலவாறாக வாழ்த்தி,

‘உன் லீலைகளை புகழ்ந்து கொண்டு பறை பெறுவதற்காக இப்போது நாங்கள் வந்துள்ளோம். எங்கள் மீது இரக்கம் காட்டு கண்ணா’ என்று தோழியர் வேண்டுகின்றனர். போற்றிப் பாசுரம் என்று நாம் கொண்டு, இதனைக் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்து, கண்ணன் பாலகனாக இருந்தபோது நிகழ்த்திய லீலைகள், வீரதீரத் செயல்கள் போன்றவற்றை அடுத்த தலைமுறைக்கு நாம்தான் எடுத்துச்சொல்ல வேண்டும். குழந்தைகள் தன்னம்பிக்கை, தைரியம், இவற்றை வளர்த்துக்கொண்டு வாழ்வில் வெற்றிபெற நாம் அவர்களைத் தயாராக்குவோம்.