திருப்பாவை – 18

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

விளக்கம்:
மதநீர் சிந்தும் யானைக்கூட்டங்களை உடையவன் நந்தகோபன். அது மட்டுமின்றி போரில் பின்வாங்காத தன்மை உடைய வலிய தோள்வலிமை உடையவன் அவன். இத்தகைய சிறப்புக்களை சுமந்து கொண்டிருக்கும் நந்தகோபனின் மருமகளே! நப்பின்னைப் பிராட்டியே! பரிமள வாசனை சிந்தும் கூந்தலை உடையவளே! நினது வாசலின் மணிக் கதவைத் திறப்பாயாக ! விடியற்காலை நேரம் உணர்ந்து கோழிகள் கூவும் ஒலி நாலாபுறத்தில் இருந்தும்கேட்கத் துவங்கிவிட்டது. மாதவிப் பந்தலின் மேல் அமர்ந்து குயில்கள் பாடத் துவங்கி விட்டன. பூப்பந்தினை உருட்டிக்கொண்டு கண்ணனிடம் களி செய்கின்ற மென்மையான கை விரல்களைக் கொண்டவளே! புருஷோத்தமனான உன் கணவனின் புகழ் பாட நாங்கள் வந்துள்ளோம். அளவு சற்றும் மாறாத அமைத்துக்கொண்ட உனது அழகிய வளையல்கள் ஒலிக்கும் வண்ணம் உனது செந்தாமரை போன்ற கையால் உன் மாளிகை வாசல் கதவைத் திறப்பாயாக ! நாங்கள் பேருவகை கொள்வோம் . ஸ்ரீமன் நாராயணனிடம் நேரடியாகக் கோரிக்கை வைப்பதைக் காட்டிலும் தாயார் காதில் போட்டு வைத்தால், அவள் மூலம் தங்கள் கோரிக்கை உடனே
நிறைவேற்றப்பட்டுவிடும் என்கின்ற நம்பிக்கையில் பாவை நோன்பிருக்கும் பெண்கள், மாதவனின் மனைவி நப்பின்னையை எழுப்பி அவள் மூலமே கண்ணனை எழுப்புகிறார்கள்.