திருப்பாவை – 12

கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கிரங்கி
நினைத்து முலைவழியே நின்று பால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழ நின்வாசல் கடை பற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக் கினியானை பாடவும் நீ வாய் திறவாய்
இனித்தானெழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத்தாளும் அறிந்தேலோ ரெம்பாவாய்!

விளக்கம்;
பசுமாடுகள் தாங்கள் ஈன்ற கன்றுக்குட்டி களின் பசி அறிந்து, அவற்றின் பசியை தணிக்கும் வண்ணம், அவற்றின் மீது இரக்கம் கொண்டு அழைக்கின்றன. அவ்வாறு கூப்பிடும் ஓசை, இரக்கத்துடன் அழைப்பது போல், அப்பசுக்கள் சுரந்த பால் அவர்களின் இல்லத்தை நனைத்து ச் சேறாக்கி விடுகின்றனவாம். இல்ல வாசல் சேறாகி விட்டதால், அவளது வீட்டுக்குள் நுழைய இயலாத நிலை என் செய்வார்கள் ? வீட்டு வாசலிலுள்ள கட்டை ஒன்றினைப் பிடித்துக் தொங்கியபடி அவளைத் தூக்கத்திலிருந்து எழுப்புகிறார்களாம் தோழிகள். அந்த அளவுக்குப் பாத்திரங்கள் வழிய, வழிய பாலைச் சுரக்கவல்லவள்ளல் தன்மை உடைய செழிப்பான பசுக்களைக் கொண்ட செல்வந்தனான ஆயனின்
தங்கையே! சொரியும் மார்கழி மாதத்துப் பனி எங்களது தலை மீது பொழிந்து, நடுக்கத்தை ஏற்படுத்தினாலும் கூட, அதைப் பொருட்படுத்தாது சீதாப்பிராட்டியாரைக் கவர்ந்து சென்ற இலங்கை வேந்தன் கொடியவன் ராவணனைக் கொன்ற விஜயராகவனின் வீரத்தையும் புகழையும் பாடியபடி உனது வீட்டு வாசலில் நிற்கிறோம். நோன்பு நோற்க உன்னை அழைத்து போக காத்திருக்கிறோம் என்பது உனக்குத் தெரியவில்லையா? நீ மறுமொழி கூறாமல், வாய் மூடி, கண் வளர்த்தபடியே பேசாதிருக்கிறாயே. நாங்கள் உன்னைக் கூவி க்கூவி அழைக்கும் சப்தம் கேட்டு, அக்கம் பக்கத்தில் இருப்போர் எல்லாம் கூட தூக்கம் கலைந்து எழுந்து விட்டனர்.

ஆனால் நீயோ உறக்கத்திலிருந்து எழாமல், , வாளாவிருக்கிறாயே. உடனே எழுந்து திருமாலின் புகழ்பாடி எங்களுடன் சேர்ந்து பாவைநோன்பு நோற்க எங்களுடன் வருவாயாக என்று அன்பொழுக அழைக்கிறாள் கோதை நாச்சியார். எத்தனை சிரமங்கள் வந்திடினும், ஒருவர் விடாமல் எல்லாரும் இறைவன் பாதகமலங்களை சேர வேண்டும் என்கின்ற உயரிய கருத்தை இப்பாசுரம் மூலம் அறியலாம்.