திருப்பாவை – பாசுரம் 10

‘நாற்றத் துழாய்முடி நாராயணன்’: நறுமணம் கமழும் துழாய் ஹாரத்தை முடிமேல் அணிந்திருக்க, அது இல்லாதபோதும்
தலைமுடியிலும் மேலும் சுகந்தம் நீங்காதாயிற்று. திருப்பாவை முழுவதுமே பெருமாளின் நாமங்களை மனதில் ஏத்திச் சொல்லிப் பாடி மகிழ்கிறோம். அனைவரும் கூடியிருந்து கூட்டு வழிபாடாக இதுபோன்று நாமஜெபம் செய்வது மிக உன்னதமானது அல்லவா? பாமரரும் மற்றவரும் கூடக் கடைத்தேற சாதனமாய் இருப்பது நாம ஜபமே. அதனால்தான் கோதை
இந்த மார்கழியில் பகவான் பரந்தாமனின் நாமாவைச் சொல்ல அனைவரையும் அழைக்கிறாள்.

நாராயணனின் மகிமையைத் தோழி முந்தைய தினம் சொன்னபோது `நோன்பினை நோற்று நான் சொர்க்கம் புகுவேன்’ என்று சில தோழிகள் வைராக்கியமும் பேசினார்கள். ஆனால், அப்படிப் பேசியவர்களில் சிலர் கதவை அடைத்துக்கொண்டு உறங்குகின்றனர். “நாங்கள் நாராயணனின் திருநாமத்தைப் பாடிக்கொண்டிருக்கிறோம்.  அவை உன் காதுகளில் விழவில்லையா. கும்பகர்ணன் உன்னிடம் தூங்குவதில் தோற்குமளவு தன் பெருந்துயிலை உனக்குத் தந்துவிட்டானோ?? சீக்கிரம்
தெளிந்து வாசல்கதவு திறந்து வெளியே வா!! அருங்கலமே!!” என்று அன்புடன் அழைக்கிறாள் தோழி.