திருப்பாவை – பாசுரம் 1

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.

விளக்கம்:
திருப்பாவைத் தேனமுதத்தின் முதல் பாசுரம்.. இதில், பாவை நோன்பு , யாரை முன்னிட்டு, யார் யார் நோற்றுக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற நெறிமுறைகளுக்கான முன்னுரையை முன்வைக்கிறாள் தமிழை ஆண்ட கோதை. செல்வத்தினால் திளைத்துள்ள திருவாய்ப்பாடியில், இறைபணி செய்யக்கூடிய செல்வத்தைக் கொண்டும், அழகுசேர் ஆபரணங்களைப் பூண்டிருக்கும் நங்கையரே!!! மாதங்களில் மகத்துவம் கொண்ட இம் மார்கழியில் இன்று நன்னாளாக …அதுவும் பூரணசந்திரனாக நிலவு ஒளிரும் ஒப்பற்றதாக நமக்கு வாய்த்த நாளிது.

கூர்மையான வேல் ஆயுதத்தின் துணை கொண்டு, கண்ணனாகிய பாலகனுக்குத் தீங்குசெய்ய வரும் அரக்கர் மீது சீறி அவர்களை அழிக்கும் கொடுந் தொழில் புரியும் நந்தனகோபன் குமாரனாகப் பிறந்தவனும், அழகுமிகு கண்களை உடைய யசோதைப் பிராட்டியாரின் சிங்கக் குட்டி போலத் திகழ்பவனும்,கார் மேகக் கூட்டத்தை ஒத்த மேனி அழகு கொண்டவனும், தாமரை போன்ற நயனங்களையும் சூரிய சந்திரர் போன்ற பிரகாஸமான முகத்தையும் உடையவனான அவனே நாராயணன். அவனே நமக்கு தொண்டு என்னும் பறையைக் கொடுக்கும் நிலையில் இருக்கிறான் என்று கூறி இந்த நோன்பிலே ஊன்றி, திளைத்து நீராட விரும்பும் பெண்களே! உலகத்தார் மெச்ச அவனைப்பாடி நோன்பு நோற்கத் தொடங்குவோம்.”