திருப்பள்ளியெழுச்சி 1

மாணிக்கவாசக சுவாமிகள் திருப்பெருந்துறையில் (இன்றைய ஆவுடையார் கோவில்) எழுந்தருளியிருந்தபோது, அதிகாலைப் பொழுதில் இறைவனைத் துயில் எழுப்புவதாக அருளிச்செய்த பாசுரங்களை உள்ளடக்கியது ‘திருப்பள்ளியெழுச்சி’. வைகறையில் அதிகாலைப் பொழுதில் இருள் நீங்கி ஒளி எழுவதுபோல, ஆன்மாக்களுடைய திரோதானமலம் அகல, ஞான ஒளி வெளிப்படுகின்ற முறைமையை இப்பாசுரங்கள் குறிக்கின்றன.

போற்றி! என் வாழ் முதல் ஆகிய பொருளே எனது தொடங்கும் இப்பாசுரத்தில், குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் உறையும் சிவபெருமானே, நந்திக் கொடியை உடையவனே, என்னையும் ஆட்கொண்டவனே, என் வாழ்வின் முதல் பொருளே! பொழுது புலர்ந்து விட்டது. உனது பூப்போன்ற திருவடிகளில் மலர் தூவி வழிபட வந்துள்ளேன். எம்பெருமானே! உன் அழகிய முகத்தில் புன்னகை பூத்தபடி எனக்கு அருள் செய்வாயாக! என வேண்டுகிறார் மணிக்கவாசகர். நாமும் அவரது கவியமுதத்தில் மூழ்கி, இப்பாசுரங்களை ஓதி, எம்பெருமானின் திருவடிகளை அடைய முயல்வோமாக.