தி.மு.கவுக்கு பத்திரிகையாளர்கள் நல்ல பதிலடி கொடுத்ததாக ஒரு செய்தி உலவிக் கொண்டுள்ளது. அது குறித்து எந்த ஊடகங்களும் வாய் திறக்கவில்லை. இதனால், அச்செய்தியின் உண்மை தன்மை குறித்தும் கேள்வி எழுந்துள்ளது. விஷயம் இதுதான். சமீபத்தில் தி.மு.க அலுவலகமான அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் நின்று கொண்டு, நீண்ட வரிசையில் வந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற தி.மு.க வேட்பாளர்களை சந்தித்தார். இந்நிகழ்ச்சியை படம் பிடிக்க வந்த பத்திரிக்கையாளர்கள் அமர்வதற்கு இருக்கைகள் போடப்பட்டிருந்தன. ஆனால், அன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர்களுக்கு இருக்கைகள் தரப்படவில்லை. காரணம் கேட்டதற்கு, காலையில் ஸ்டாலினே நின்றுகொண்டிருந்தார். ஆனால், பத்திரிகையாளர்கள் இருக்கையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தது அவருக்கு அவமரியாதை ஆகிவிட்டது. அதனால்தான் இருக்கைகள் போடப்படவில்லை என கூறப்பட்டது. இதற்கு பதிலடியாக, நிகழ்ச்சி ஆரம்பித்ததும் நிருபர்கள், கேமரா மேன்கள் எல்லாம் கேமராவை ஆன் செய்து வைத்துவிட்டு பக்கத்தில் உள்ள கட்டடத்தின் படிகட்டில் சென்று அமர்ந்துவிட்டனர். கலைஞர் டிவி, கேமராமேன், சில யூடியூபர் சானல் ஆட்கள் தவிர யாரும் அங்கில்லை. கேமரா மட்டும் ஓடிக்கொண்டிருந்தது. இதைப்பார்த்து காவலர்களும் அதிகாரிகள் கையைப் பிசைந்துக்கொண்டிருந்தனர்.