திமில் உள்ள நாட்டு காளைக்கு மட்டுமே ஜல்லிக்கட்டில் அனுமதி

திமிலுடைய நாட்டு இனக் காளைகள் மட்டுமே ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதிக்கப்படும் என தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை திட்டவட்டமாகத் தெரிவித் துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படும். குறிப்பாக மதுரை மாவட்டத்தில் 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடக்கும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மிகவும் பிரசித்தி பெற்றவை.

பாரம்பரியமாக நடக்கும் இந்தப்போட்டி களில் பங்கேற்பதை காளை வளர்ப்போரும், மாடுபிடி வீரர்களும் கவுரவமாகப் பார்ப்பார்கள். இந்தப் போட்டிகள் நெருங்கிவிட்டதால் அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

ஜல்லிக்கட்டுப் போட்டில்களில் கலந்து கொள்ளும் காளைகளுக்கான உடற் தகுதிச் சான்று வழங்கப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்துகொள்ள தகுதியான வகையில் உயரம் மற்றும் உடல்திறன் உள்ளதா என்பதைப் பரிசோதனை செய்த பின்னரே கால்நடை மருத்துவர்கள் இந்தத்தகுதிச் சான்றிதழ்களை வழங்கி வருகின்றனர்.

வரும் 12-ம் தேதி வரை அந்தந்தப் பகுதிகளில் உள்ள கால்நடை மருத்துவ மனைகளில் பரிசோதனை செய்து தகுதி உடைய கால்நடைகளுக்குத் தகுதிச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம் என கால்நடைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.