தாய்மதம் காக்க தன்னுயிர் ஈந்தவர்

நமது நாட்டின் சமய மறுமலர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர் சுவாமி சிரத்தானந்தர். மதம்  மாறியவர்களை தாய்மதம் திருப்ப முடியும் என்று நிரூபித்தவர். இவரது இயற்பெயர் முன்ஷிராம்.  கடவுள் நம்பிக்கையற்றவரான முன்ஷிராம், சுவாமி தயானந்த சரஸ்வதியை சந்தித்தார். தயானந்தரின் போதனைகளால்  மனம் மாறினார். மகாத்மா முன்ஷிராம் என்று பலரால் அழைக்கப்பட்டார்.
ஹரித்வார், காங்க்ரியில், குருகுலம் அமைத்தார். தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்தார்.  தென் ஆப்பிரிக்காவிலிருந்து தாயகம் திரும்பிய காந்தி,  காங்க்ரியில் முன்ஷிராமைச் சந்தித்தார். இருவரும் நாட்டின் நிலை குறித்து விவாதித்தனர். அப்போது காந்திக்கு முன்ஷிராம் அளித்த பட்டம்தான்  ‘மகாத்மா’.
ஜாலியன் வாலாபாக் படுகொலையை அடுத்து அமிர்தசரஸில் மாநாடு நடத்த காங்கிரஸ் தயங்கியது. அப்போது,  அஞ்சாமல் தலைமையேற்று அங்கு மாநாட்டை நடத்தினார். ரௌலட் சட்டத்தை எதிர்த்தும் வெற்றிகரமாக பேரணி நடத்தினார். முஸ்லிம்களின் கிலாபத் இயக்கத்தால் மனம் நொந்தார். இதனால், ‘ஹிந்து ஒற்றுமை’ இயக்கத்தில் சேர்ந்தார். பின்னர் ‘சுத்தி’ இயக்கத்தில் இணைந்தார்.
ஹிந்து மதத்திலிருந்து பிற மதங்களுக்கு  மதம் மாறியவர்கள் மீண்டும் தாய்மதம் திரும்ப முடியாத சூழல் நிலவியது. அதனால் தாய்மதம் திரும்பும் ‘சுத்தி’ சடங்கை சுவாமி  சிரத்தானந்தர் நடத்தினார்.  இதனால்  ராஜஸ்தானில், வாள்முனையில் முஸ்லிமாக மதம் மாற்றப்பட்ட  ‘மல்கானா ராஜபுத்திரர்கள்’ பல்லாயிரம் பேர் ஹிந்து மதத்திற்குத் திரும்பினர்.   முஸ்லிம் பயங்கரவாதிகள் சிரத்தானந்தருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். சிரத்தானந்தர் மிரட்டல்களுக்கு அஞ்சவில்லை. அப்துல் ரஷித் என்னும் முஸ்லிம் பயங்கரவாதி,  தில்லியில் சுவாமி  சிரத்தானந்தரை  அவரது ஆசிரமத்தில் சுட்டுக் கொன்றான்.
சுவாமி சிரத்தானந்தரின் நினைவு தினம் இன்று.