தமிழ் வளர்த்த வள்ளல்

நான்காம் தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டதில் முக்கிய பங்கு வகித்தவர், சிறந்த தமிழறிஞரும் மன்னர் வம்ச வாரிசுமான பாண்டித்துரை தேவர். ராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்தார். தமிழ்மொழியில் ஆழ்ந்த பற்றும் எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் கொண்டிருந்தார்.

திருக்குறளில் பல இடங்களில் எதுகை, மோனை சரியாக அமையவில்லை என்றும் அதையெல்லாம் திருத்தி எழுதி சரியான திருக்குறளை அச்சிட்டிருப்பதாக ஒரு ஆங்கிலேய பாதிரியார் இவரிடம் கூறினார். திருக்குறளைப் புரிந்துகொள்ளாத அவரது அறிவீனத்தை உணர்ந்து, அவரிடமிருந்து நூல்கள் அனைத்தையும் விலைகொடுத்து வாங்கி அவற்றைத் தீயிட்டுக் கொளுத்தினார் பாண்டித்துரை தேவர்.

தமிழுக்குப் புத்துயிரூட்டவும், தமிழை வளர்க்கவும் மன்னர் பாஸ்கர சேதுபதியின் முன்னிலையில், இவரது தலைமையில் மதுரையில் 1901-ல் தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டது. தமிழகம் முழுவதிலிருந்தும் ஏராளமான தமிழறிஞர்கள் இதில் பங்கேற்றனர். இது ‘நான்காம் தமிழ்ச் சங்கம்’ என வரலாற்றில் முத்திரை பதித்தது.

தேவாரத் திருமுறைப் பதிப்புகள், சிவஞான ஸ்வாமி பிரபந்தத் திரட்டு உள்ளிட்ட நூல்களை வெளியிடச் செய்தார். பன்னூற்றிரட்டு, சைவ மஞ்சரி உள்ளிட்ட ஏராளமான நூல்களைத் தாமே தொகுத்து வெளியிட்டார். இவர் இயற்றிய காவடிச் சிந்து மிகவும் புகழ் வாய்ந்தது. தமிழ்ச்சங்கம் சார்பில் வெளிவந்த செந்தமிழ் இதழில், உ.வே.சா., அரசன் சண்முகனார், ராமசாமிப் புலவர், சுப்பிரமணியக் கவிராயர் உள்ளிட்ட தமிழறிஞர்களின் படைப்புகள் வெளிவந்தன. வ.உ.சி.யின் சுதேசிக் கப்பல் திட்டத்துக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் நிதியை அள்ளிக்கொடுத்த தேசபக்தர் பாண்டித்துரை தேவர்.