‘தமிழ் மொழி அழகானது, தமிழ் மக்கள் அபூர்வமானவர்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம்

‘தமிழ் மொழி அழகானது. தமிழ் மக்கள் அபூர்வமானவர்கள்’ என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி, சமீபத்தில் சீன அதிபர் ஸீ ஜின்பிங்கை, மாமல்லபுரத்தில் சந்தித்து பேசினார். அங்குள்ள கோவளத்தில், தனியார் ஓட்டலில், ஒரு நாள் இரவு தங்கினார். மறுநாள் அதிகாலை, கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்டார்.

இந்நிலையில், மாமல்லபுரம் கடற்கரை குறித்து, தான் எழுதிய கவிதையின் தமிழாக்கத்தை, நேற்று முன்தினம் தன், ‘டுவிட்டர்’ பக்கத்தில், பிரதமர் வெளியிட்டார். அந்த கவிதை, தமிழக மக்களிடம் வேகமாக பரவியது.கவிதையை பார்த்த, நடிகர் விவேக், தன், ‘டுவிட்டர்’ பக்கத்தில், ‘இயற்கையை வணங்குவது, கடவுளை வணங்குவதற்கு சமம். ஏனெனில், இயற்கையே சர்வ சக்தியுடையது; பெரியது. ‘மதிப்பிற்குரிய மோடி சார், மாமல்லபுரம் கடற்கரை குறித்த, உங்கள் கவிதைக்காக, நம் தேசத்தின் சார்பாக, உங்களுக்கு நன்றி’ என, கூறியிருந்தார்.

அதற்கு, பிரதமர் நன்றி தெரிவித்து, பதிவு வெளியிட்டுள்ளார். அதில், ‘இயற்கையின் மீதான மரியாதை என்பது, நம் நெறிமுறைகளின் முக்கிய பகுதியாகும். ‘இயற்கை தெய்வீக தன்மையையும், மகத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது. மாமல்லபுரத்தின் அழகிய கரையோரங்களும், காலை அமைதியும், என் சில எண்ணங்களை வெளிப்படுத்த, சரியான தருணங்களை அளித்தன’ என்று கூறியுள்ளார்.

அதேபோல, தன் கவிதையை பாராட்டி, நன்றி தெரிவித்த, தயாரிப்பாளர் தனஞ்செயனுக்கும், பிரதமர் நன்றி தெரிவித்து உள்ளார். அதில், ‘ஒரு துடிப்பான கலாசாரத்தை வளர்த்த, உலகின் பழமையான மொழியில், என்னை வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சி. தமிழ் மொழி அழகானது; தமிழ் மக்கள் அபூர்வமானவர்கள்’ என, குறிப்பிட்டுள்ளார்.