கர்தார்புருக்கு ரூ.1,400 கட்டணம்: பாகிஸ்தான் முடிவுக்கு இந்தியா அதிருப்தி

கர்தார்புரில் உள்ள குருத்வாராவுக்கு செல்வதற்கான ஒப்பந்தம், நாளை கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில், ஒவ்வொரு யாத்திரிகரிடமும், தலா, 1,400 ரூபாய் கட்டணம் வசூலிப்பதில் பாக்., உறுதியாக இருப்பதற்கு, மத்திய அரசு அதிருப்தி தெரிவித்துள்ளது.சீக்கியர்களின் மத குருவான குரு நானக்கின், 550வது பிறந்த நாள், நவ., 12ல் கொண்டாடப்பட உள்ளது. நம் அண்டை நாடான பாக்.,கின் கர்தார்புரில் உள்ள தர்பார் சாஹிப் குருத்வாராவில், குரு நானக் தனது இறுதி காலத்தை கழித்தார்.அதனால், அவருடைய, 550வது பிறந்த நாளையொட்டி, கர்தார்புரில் உள்ள குருத்வாராவுக்கு சீக்கியர்கள் யாத்திரை மேற்கொள்வதற்கு அனுமதிப்பது தொடர்பாக, கடந்த சில ஆண்டுகளாக, பாக்.,குடன் பேச்சு நடந்து வந்தது.

சிறப்பு பாதைஅதன்படி, பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்புரில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவில் இருந்து, அண்டை நாடான பாக்.,கின் கர்தார்புரில் உள்ள தர்பார் சாஹிப் குருத்வாராவுக்கு சிறப்பு பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது.விசா இல்லாமல் பயணம் மேற்கொள்வது, பாதுகாப்பு உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து இரு தரப்பும் பலமுறை கூடி விவாதித்துள்ளன. ஜம்மு – காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, இந்தியா – பாக்., இடையேயான உறவு மோசமாக இருந்தபோதும், கர்தார்புர் சிறப்பு பாதை தொடர்பாக, இரு தரப்பும் தொடர்ந்து பேசி வந்தன.நவ., 9ல் இருந்து, இந்த சிறப்பு பாதை வழியாக யாத்திரிகர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதற்கு முன், இரு தரப்பும் நாளை ஒப்பந்தம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிபந்தனை

இந்நிலையில், இந்தியாவில் இருந்து வரும் சீக்கிய யாத்திரிகர்களிடம் இருந்து, தலா, 1,400 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற நிபந்தனையை கைவிட பாக்., மறுத்து வருகிறது. பெரும்பாலான நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டுள்ள பாக்., இதில் மிகவும் உறுதியாக உள்ளது. இதற்கு, இந்திய தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக, வெளியுறவுத் துறை நேற்று வெளியிட்டு உள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:சீக்கிய யாத்திரிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, கர்தார்புர் குருத்வாராவுக்கு, விசா இல்லாமல் பயணம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக ஒப்பந்தம் செய்வதற்கு தயாராக உள்ளதாக, பாக்., தரப்புக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், யாத்திரிகர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படும் என்று பாக்., தொடர்ந்து கூறி வருவது, அதிருப்தி அளிப்பதாக உள்ளது. யாத்திரிகர்களின் மத மற்றும் மன உணர்வை புரிந்து கொண்டு, கட்டணம் வசூலிக்கக் கூடாது என, பாக்., தரப்பை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.யாத்திரிகர்களுக்கு கட்டணம் விதிக்கப்படுவதன் மூலம், பாக்.,குக்கு ஆண்டுக்கு, அந்நாட்டு பணத்தின் மதிப்பில், 571 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.

இந்திய மதிப்பில் இது, 258 கோடி ரூபாய். ஒரு நாளுக்கு, 5,000 யாத்திரிகர்களை அனுமதிப்பதன் மூலம் பாக்.,குக்கு, 1.6 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். இந்திய மதிப்பில் இது, 71 லட்சம் ரூபாய். வெட்கக்கேடு!மத நம்பிக்கையை பாக்., வியாபாரமாக்குகிறது. கட்டணம் வசூலிப்பதால், தன் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பெறும் என, பாக்., பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். இவ்வாறு பேசியதற்காக அவர் வெட்கப்பட வேண்டும். கட்டணம் வசூலிக்கும் முடிவை கைவிட வேண்டும்.-ஹர்சிம்ரத் கவுர் பாதல்மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில் துறை அமைச்சர், சிரோன்மணி அகாலிதளம்.