தமிழ் மண்ணில் தழைக்குது நல்லிணக்கம் வேருக்கு நீராய் இருந்து விந்தை புரியுது ஆர்.எஸ்.எஸ்.

மீபத்தில் புணேயில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ்ஸின் சிவசக்தி பேரணியில் சுமார் ஒன்றரை  லட்சம் ஸ்வயம்சேவகர்கள் கணவேஷ் எனப்படும் சங்கச் சீருடை அணிந்து கலந்து கொண்டனர். இது, சங்க வரலாற்றில் ஒரு சிறப்பு மிக்க நிகழ்வு. இந்த நிகழ்ச்சியில், வேறு பல சிறப்பம்சங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று, மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த மாபெரும் மகாத்மா ஜோதிபா புலே அவர்கள் பரம்பரையில் தோன்றிய தாத்தாத்ரேய, ரித்திஷ், நிதிஷ் ஆகியோர் பங்கேற்றது.  தன் வீட்டருகில் நடைபெறும் மகாத்மா புலே பெயரிலான ஷாகாவில், சிறுவயது முதல் தான் பங்கேற்று வந்ததாகவும், ஆர்.எஸ்.எஸ்ஸால் தான் சமுதாய நல்லிணக்க உணர்வு தன் மனதில் பதிந்ததாகவும் நிதிஷ் (வயது 48) தெரிவித்திருக்கிறார்.

ஜோதிபா புலே

மகாராஷ்ட்ராவில் உள்ள சதாராவில் மாலி என்ற பிற்படுத்தப்பட்ட ஜாதியில், 1827 ஏப்ரலில் பிறந்தவர் புலே. பள்ளியில் படிக்கும் போதே, ஜாதி ஏற்றத்தாழ்வுகளால் துயரமுற்றார். 1873ல் சத்திய சோதக் சமாஜ், என்ற அமைப்பை நிறுவினார். இதன் பொருள், உண்மையைத் தேடும் சமுதாயம்” என்பதாகும். சமுதாயத்தில் மேல்ஜாதி ஹிந்துக்களால் அடக்கிவைக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயமக்களின் உரிமைகளை மீட்டெடுப்பது, அவர்கள் கல்வியறிவு பெற ஏற்பாடு செய்வது, இந்த அமைப்பின் நோக்கமாக இருந்தது.

கீழ்ஜாதி மக்கள் மீதான அடக்குமுறை கண்டு வெகுண்டு எழுந்தார்.   ஹிந்து மதத்தில் இருந்தபடியே, அதன் குறைபாடுகளுக்கு எதிராக ஆவேசத்துடன் போராடினார். ஹிந்து மதத்தின் குறைபாடுகளுக்கு எதிராகப்  போராடிய போதும், மதம் மாறுவதை புலே ஆதரிக்கவில்லை. அவரும் அவரது மனைவி சாவித்திரி புலேவும், இணைந்து பாரதப் பெண்களின் நிலை உயரப் பாடுபட்டனர்.

இது ஒரு சாதாரண விஷயம் அல்ல. ஹிந்து மதத்தின் குறைபாடுகளுக்கு எதிராக ஆவேசமாகப் போராடிய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், இன்று சங்கத்தில் உறுப்பினராக உள்ளார் என்றால் அவருக்கு ஆர்.எஸ்.எஸ். எவ்வளவு பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்க வேண்டும்.

கம்யூனிச இயக்கம் வளர்வதற்கு அடிப்படைத் தேவை எது என்று கம்யூனிஸ்ட் தலைவர் ஸ்டாலினிடம் வினவியபோது அவர் கூறியதாவது வெறுப்பு! வெறுப்பு!! தீவிரமான வெறுப்பு! வெறுப்புதான் கம்யூனிசம் வளர்வதற்கு அடிப்படை”.

இதே கேள்வியை ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஸ்ரீகுருஜியிடம் வினவியபோது, அன்பு! அன்பு! அன்புதான் அடிப்படைத்தேவை என்றார்.culture-temp

வெறுப்பை மையமாக வைத்துச் செயல்படும் கம்யூனிஸ்ட், நக்ஸலைட், திராவிட இயக்கங்கள் இன்று சமுதாயத்தை பிளந்து வெறுப்பையும் நஞ்சையும் ஏற்படுத்தி பரப்பி வருவதைப் பார்க்கலாம்.

ஆனால் அன்பை மையமாக வைத்து செயல்படும் சங்கம் சமுதாயத்தில் நல்லிணக்கம் கொண்டுவரும் பணியில் சிறப்பாக செயல்படுகிறது. அதற்கு பல உதாரணங்களை கூறலாம்.

டாக்டர் அம்பேத்கர்

டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கையில் ஒரு சம்பவம். மகாராஷ்ட்ர மாநிலம் காலாராம் நாசிக் கோயிலில் தாழ்த்தப்பட்ட மக்கள் வழிபடும் உரிமைக்காக 1930ல் அம்பேத்கர் போராடினார். பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. ஆனால், கோயில் நிர்வாகிகள் அவர்களை அனுமதிக்கவில்லை.

2005ம் ஆண்டு அந்த ஊரில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. யார், டாக்டர் அம்பேத்கரை கோயிலுக்குள் அனுமதிக்க மாட்டேன் என்று தடுத்து நிறுத்தினார்களோ, அவர்கள் பரம்பரையைச் சேர்ந்த கோயில் அர்ச்சகர்கள், டாக்டர் அம்பேத்கர் பரம்பரையைச்  அணுகி, கோவிலுக்கு வரவேண்டும் என அழைப்பு விடுத்தனர். அதை ஏற்றுக் கொண்ட டாக்டர் அம்பேத்கர் பரம்பரையினர், காலாராமர் கோயிலுக்குள் நுழைந்தனர். அவர்களை, மரியாதையுடன் வரவேற்றார், கோயில் தலைமை அர்ச்சகர்.

இந்த மாற்றம் ஏற்பட என்ன காரணம்? தலைமை அர்ச்சகருக்கு  சங்கத்துடன் நெருக்கம் ஏற்பட, அவர் மனதில் பெரிய மாற்றம். அந்த மாற்றம் அந்த ஊரில் அமைதியாக ஒரு புரட்சியை ஏற்படுத்தியது.

ஆத்மநாத ஸ்வாமி

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.எஸ். தலைவராக  இருந்தவர் அமரர் இவர் ராமநாதபுரம் அரச பரம்பரையைச் சேர்ந்தவர். கோவிந்தன் ஜி என்ற ஆர்.எஸ்.எஸ். பிரசாரக் அவரைத் தொடர்பு கொண்டு சங்கத்தை அறிமுகப்படுத்தினார். சங்கத்தின் கருத்துக்களை அவருக்கு புரிய வைத்தார். தீண்டாமை ஒழிப்பு, சமுதாய நல்லிணக்கம் என்ற சொற்கள் அவர் மனதில் ஆழமாக பதிந்தன.

ஒரு முறை அவர் கிராமக் கோயிலில் பெரிய விழா நடைபெற்றுக்கொண்டிருந்து. கோயில் முன்பு போடப்பட்டிருந்த பந்தலில், ஹிந்துக்களின் ஒரு பிரிவினர் அமர்ந்திருந்தனர். தாழ்த்தப்பட்ட சமுதாய”த்தைச் சேர்ந்தவர்கள்  வெளியே நின்றுகொண்டிருந்தனர். பூஜை நேரம் ராஜ பரம்பரை என்ற முறையில் ஆத்மநாத ஸ்வாமிக்கு தான் முதல் மரியாதை கொடுக்க வேண்டும். ஆனால், அவர் அப்போது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் நின்றுகொண்டிருந்த பகுதியில்  நின்று கொண்டிருந்தார். எல்லோரும் அவரை கோயிலுக்குள் வந்து முதல் மரியாதை ஏற்கும்படி அழைத்தனர். ஆனால், அவர் அதை மறுத்து விட்டார்.

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரையும் மற்ற ஹிந்துக்கள் போல உள்ளே அனுமதித்தால் மட்டுமே, தாம் உள்ளே வந்து மரியாதையைப் பெற முடியும்  என்று கண்டிப்புடன் கூறிவிட்டார். நீண்ட விவாதங்களுக்குப் பிறகு தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

சங்கத் தொடர்பினால் ஆத்மநாத ஸ்வாமி மனதில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அது அந்த கிராமத்தில் எதிரொலித்தது. வெட்டு, குத்து, கொலை, பஸ் எரிப்பு இல்லாமல் அமைதியாக ஒரு பெரிய புரட்சி  நடந்தேறியது என்றால் அதற்கு அமரர் ஸ்ரீ ஆத்மநாத ஸ்வாமி அவர்களுக்கு பின்புலத்தில் இருந்தது ஆர்.எஸ்.எஸ்.

அரங்கநாத பட்டாசாரியார்

ஆற்காடு அருகில் கே. வேலூர் என்று ஒரு கிராமம். அவ்வூரில் 400 ஆண்டுக்காலப் பெருமாள் கோயில், அதை புனருத்தாரணம் செய்ய விரும்பினார் அந்த கோயிலின் பட்டாச்சாரியார் அரங்கநாதன்.

அரங்கநாதன் பள்ளியில் ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். ஓய்வுக்குப் பிறகு அந்த கோயில் பணிகளை ஏற்றுக் கொண்டார். பல ஆண்டுகள் ஆசிரியராக இருந்த காரணத்தால், சுற்றுவட்டார கிராமங்களில் இவர் பிரபலம். பெருமாள் கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்திட ஆசை. இவர் தனி ஒருவராக அந்தக் காரியத்தில் பெரும் பங்காற்ற முடிந்தது.

கோயில் கும்பாபிஷேகம் எப்போது எப்படி என்பதற்கு ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஊர்ப் பெரியவர்கள் கலந்து கொண்டு பல கருத்துக்களைக் கூறினார்கள். அரங்கநாத பட்டாச்சாரியார் தன் முறை வரும்வரை காத்திருந்து, ஒரு கருத்தைக் கூறினார். அவர் கூறிய கருத்து இதுதான். இந்தக் கிராமத்து மக்கள் எல்லாரும் சேர்ந்து இந்தக் கும்பாபிஷேகத்தை கொண்டாடவேண்டும்”. மற்றவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அதைப் பற்றித்தானே நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்; இவர் என்ன புதிதாகச் சொல்லியிருக்கிறார்? எல்லோரும் ஒன்றும் புரியாமல் அவரைப் பார்த்தனர். அவர் மீண்டும் அதே வாக்கியத்தைக் கூறினார். அப்போதும், அங்கு கூடியிருந்த ஊர்ப் பெரியவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று விவரமாகக் கூறுங்கள்” என்று கேட்டுக் கொண்டனர்.

அதற்கு, அரங்கநாத பட்டாச்சாரியார் கூறுகிறார்: இந்த கிராமத்து மக்கள் எல்லாம் சேர்ந்து என்று சொல்லும்போதே, இந்தக் கிராமத்தில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட சமுதாய”த்தைச் சேர்ந்த மக்களையும் சேர்த்துதான் நான் சொல்கிறேன். அவர்களையும் இணைத்து, நாம் கோயில் கும்பாபிஷேகத்தைக் கொண்டாட வேண்டும்” என்றார். அங்கு கூடியிருந்த ஊர்ப் பெரியவர்களுக்கு பெரிய அதிர்ச்சி. அவர்கள் அதைக் கற்பனை செய்தே பார்க்கவில்லை. தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களிடமிருந்து எந்தக் கோரிக்கையும் வரவில்லை. ஒரு ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்த இவரா இப்படி பேசுவது? ஊர்ப் பெரியவர்கள், ஸ்தம்பித்துப் போய்விட்டனர். ஆனாலும் ஊர் பெரியவர்களால், அவரது பேச்சை மறுக்க முடியவில்லை. ஒன்று பெரியவர்; இரண்டு, அங்கிருந்த பலருக்கு அவர் ஆசிரியராக இருந்துள்ளார்; மூன்று, இந்த கோயில் கும்பாபிஷேகத்திற்கு  பெரும் நிதி அவர் மூலமாகவே பெறப்பட்டுள்ளது.  கடைசியாக, ஊர்ப் பெரியவர்கள், மகிழ்ச்சியுடன், தாழ்த்தப்பட்ட சமுதாயத்து மக்களுடன் இணைந்து கும்பாபிஷேகம் நடத்த ஒப்புக் கொண்டனர்.

அந்த மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவிக்க இவரே அந்த  மக்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்றார். விஷயத்தைச் சொன்னார். அங்கிருந்த மக்களுக்குப் பெருத்த சந்தோஷம்; மகிழ்ச்சி. அதைப் போல் அந்த ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து அந்தக் கும்பாபிஷேகத்தைக் கொண்டாடினார்கள். இந்த எண்ணம் உருவாக என்ன காரணம்?

இவரும், ஆரம்பத்தில், மற்ற உயர்ஜாதி ஹிந்துக்களைபோல  இருந்துள்ளார். மேல் ஜாதி, தீண்டாமை போன்ற பழக்கங்கள் இவரிடம் காணப்பட்டன. அப்போது இவரின் மகள் திருமணம் நடைபெற்றது. மணமகன் தேவநாதன், அந்த மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸில் முக்கிய பொறுப்பாளராக இருந்தவர். ஆர்.எஸ்.எஸ். மாவட்டச் செயலாளராக இருந்துள்ளார்.

கே. வேலூர் கிராமத்தில் காணப்பட்ட தீண்டாமைக் கொடுமையைக் கண்டு மனம் வெதும்பினார். தம் மாமனாரிடம் அதைப்பற்றி சரியான விதத்தில் எடுத்துக் கூறினார். அது மாமனார் கண்களைத் திறந்தது. கும்பாபிஷேகம் நடைபெற்ற அடுத்த சில மாதங்களில், அரங்கநாத பட்டாச்சாரியார் காலமாகி விட்டார். அவர் செய்த மிகப்பெரிய பணியை அறிந்து வர, சில சங்க அதிகாரிகளுடன் அந்த ஊருக்குச் சென்று இருந்தேன்.  அந்தப்பெருமாள் கோயிலில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எல்லா ஜாதி மக்களும் அதில் கலந்துகொண்டனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு அனுபவத்தைக் கூறினர். rss

அந்த கூட்டத்தில்  தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் கூறினார். இந்த பட்டாச்சாரியார், எனக்குப் பல வருடங்களாகத் தெரியும். ஆசிரியராக இருக்கும்போது, அவர் வீட்டில் ஒரு சிறிய தபால் நிலையம் செயல்பட்டுவந்தது. அப்போது கார்டு, கவர், வாங்க நான் செல்வேன். அவர் கார்டு, கவர்களை என்கையில் கொடுக்கமாட்டார். எடுத்துப் போடுவார். அதைப்போல, காசையும் கை நீட்டி வாங்க மாட்டார். அப்படித் தீண்டாமையைக் கடைபிடித்த அவர் கடைசியில் இப்படி மாறினார், என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது, என்றார்.

அப்படிப் பலபேர்  பல  அனுபவங்களை கூறினார்கள், கடைசியில் அவர் வீட்டில் எல்லோருக்குமே உணவு. யார் கார்டு கவர்களை  தூக்கி போடுவாரோ, யார் கையில் காசு வாங்கமாட்டாரோ அவரது வீட்டில் எல்லா ஜாதியை உணவருந்தினர். அந்த குடும்பத்தை சேர்ந்த தாய்மார்களே அன்புடன் பரிமாறினார்கள். எச்சில் இலைகளை அவர்களே எடுத்தார்கள்.

கே.வேலூர் கிராமத்தில் இந்த மாற்றம் ஏற்பட்டதற்கு யார் காரணம்? ஆர்.எஸ்.எஸ்! அமைதியான முறையில், ஆக்கபூர்வமான முறையில் சமுதாய நல்லிணக்கம். இதைப் போன்று, பல உதாரணங்கள் பாரத நாடு முழுவதும் சொல்லமுடியும். கடைசியில் ஒரு உதாரணம்:

மாடப்பள்ளி தி.க.காரர்

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகில் மாடப்பள்ளி கிராமம். அந்த ஊரில், ஆர்.எஸ்.எஸ். கிளை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அவ்வூரில் இருந்த  திராவிடர் கழகத்தினர் சிலர் ஷாகா நடப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். ஷாகா நடைபெறும் போது உள்ளே நுழைந்து கலாட்டா செய்தனர். அவ்வூரில் சங்கத்துக்கும் திகவினருக்கும்  தொடர்ந்து போராட்டம். ஒரு முறை ஷாகா நடைபெற்றுக்கொண்டுருக்கும்போது, அங்கு அந்த ஊரைச் சேர்ந்த ஒரு தி.க.காரர் வந்தார். சரி, இன்றைக்கும் கலாட்டா என்று ஸ்வயம்சேவகர்கள் எண்ணிக் கொண்டனர். ஆனால் அந்த தி.க.காரர் ஷாகாவுக்குள் நுழையாமல் வெளியே நின்று வேடிக்கை பார்த்தார். ஷாகா பிரார்த்தனை முடியும்வரை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். பிரார்த்தனை முடிந்தபின், உள்ளே வந்தார். ‘சரி, இப்போது கலாட்டா செய்ய ஆரம்பித்துவிட்டார்’ என்று எல்லோருமே நினைத்துக் கொண்டிருக்கையில் அவர் தன் கையில் வைத்திருந்த பையைத் திறந்தார். அதில் நிறைய சாக்லேட்டுகள் இருந்தன. எல்லோருக்கும் இனிப்பு வழங்கினார்.

சங்க ஸ்வயம்சேவகர்களுக்கு ஒன்றும் புரியவில்லை; கலாட்டா செய்ய வருகிறார் என்று நினைத்து இருக்கும்போது, இனிப்புகளை கொடுக்கிறாரே என வியந்தனர் காரணம் கேட்ட போது, அவர் கூறினார்: இங்குதான் எல்லா ஜாதி பையன்களும் ஒன்றாக விளையாடிக்கொண்டிருக்கிறீர்கள்; ஈ.வே.ராமசாமி இதைத்தான் எதிர்பார்த்தார். ஈ.வே.ரா. கண்ட கனவை நாங்களே நிறைவேற்ற முடியவில்லை. அதை நீங்கள் நிறைவேற்றி உள்ளீர்கள்” என்று  மனப்பூர்வமாக பாராட்டிப் பேசினார்.

ஆம். ஆர்.எஸ்.எஸ் அமைதியான முறையில், ஆக்கபூர்வமான முறையில், சமுதாய நல்லிணக்கத்தை உண்டாக்கி வருகிறது. வெறுப்பு இல்லை. பாகுபாடு இல்லை. அன்பு மட்டுமே குறிக்கோள். ஆனால், திராவிடர்கழகம் போன்ற  இயக்கங்கள், மக்களிடம் வெறுப்பையும் விஷத்தையும் கக்கி வருகின்றன. மக்களைப் பிரித்து வைத்து வருகின்றன. அவர்களால் சமுதாயத்தில் நல்லிணக்கத்தை உண்டாக்க முடியாது. சமுதாயத்தில் நல்லிணக்கம் உண்டாக வேண்டுமானால் அது ஆர்.எஸ்.எஸ்ஸால் மட்டுமே முடியும்.