தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் வரலாறு 6−6−2025 இதழின் தொடர்ச்சி…

முழுநேர ஊழியர்கள்

சங்க வேலையின் அவசியத்தை உணர்ந்து தங்களுடைய படிப்பு முடித்த பிறகோ அல்லது அலுவலக வேலையையோ, தொழிலையோ விட்டுவிட்டு சங்க பிரச்சாரகராக வேலை செய்ய தமிழ்நாட்டிலுள்ள ஸ்வயம்சேவகர்கள் 1944ம் வருடத்திலிருந்தே வர ஆரம்பித்தார்கள். அப்பொழுது தமிழ்நாட்டிலுள்ள 36 பிரசாரகர்களில் வெளி மாகாணங்களிலிருந்து வந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கைவிரல்களால் எண்ணக்கூடிய அளவுதான்.

அருமையான வழிகாட்டிகள்

மானனீய தாதாஜி பரமார்த் புது இடங்களில் வேலை துவங்குவதில் நிபுணராக இருந்தார். அவர் 1946ம் வருடம் அஸ்ஸாம் மாகாணத்தில் சங்க வேலை துவங்குவதற்காக அனுப்பப்பட்டார். பிறகு பாபாஜி தேஷ்பாண்டே என்பவரும், மானனீய தத்தாஜி டிடோல்கர், மானனீய இராமகோபாலன் ஆகியோர் பிராந்த பிரச்சாரகர்களாக, (மாநில அமைப்பாளர்களாக) வேலை செய்தார்கள். பின்னர் மானனீய சூரியநாராயண ராவ் தமிழ்நாட்டு பிராந்த பிரச்சாரகாகவும், மானனீய இராமகோபாலன் சஹ பிராந்த பிரச்சாரகாகவும் வேலை செய்தார்கள்.

தமிழ்நாட்டில் நடந்து வந்த சங்கவேலையில் மானனீய ஆ.தக்ஷிணாமூர்த்தி (மானனீய அண்ணாஜீ என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர்) அவர்களின் பங்கு மிக பெரியதும் முக்கியமானதும் ஆகும். அவர் தமிழ்நாடு, கேரளா சேர்ந்த பகுதிக்கு பல வருடங்கள் பிராந்த காரியவாஹ் (மாநிலச் செயலாளர்) என்ற பொறுப்பில் இருந்தார். அவர் மதுரையில் பிரபல வக்கீல். எல்லா ஸ்வயம்சேவகர்களுடன் ஷாகாக்களிலும், தனிப்பட்ட முறையிலும் நன்கு தொடர்பு வைத்து சங்கவேலையின் வளர்ச்சிக்காக வழிகாட்டி வந்தார். மானனீய வி.ராஜகோபாலாச்சாரி காலமான பிறகு பல வருடங்கள் பிராந்த சங்க சாலக் என்ற பொறுப்பில் யாரும் இல்லாமல் இருந்தது. 1978-ம் வருடம் மே மாதத்திலிருந்து மானனீய ரங்கசாமி தேவர் அந்த பொறுப்பை ஏற்றார்.

தீயிலிட்ட பொன்

நாட்டு மக்களின் உள்ளத்தில் தேசபக்தி மற்றும் ஒற்றுமை உணர்ச்சி ஏற்படுத்த வேலை செய்யும் இந்த சங்கத்திற்கு, பல சோதனை காலங்கள் வந்தது உண்டு. சங்கத்தின் மேல் காந்தியைக் கொன்றதாக ஒரு பொய் குற்றச்சாட்டைச் கூறி 1948ம் வருடம் சங்கம் தடை செய்யப்பட்டது. அந்த தடை ஒன்றரை வருடம் நீடித்தது. சங்கம் குற்றவாளி இல்லை என்று அரசாங்கத்திற்கு தெரியும். கோர்ட்டிலும் நிரூபணமாகி விட்டது. இருந்தாலும் அரசாங்கம் தடையை நீக்கத் தயாராக இல்லை. தடை வந்ததும் தமிழ்நாட்டிலும் பலபேர் காரணமில்லாமல் கைது செய்யப்பட்டார்கள்.

1948-ம் வருடம் டிசம்பர் 8-ம் தேதி அன்று அரசாங்கத்தின் அநியாயமான போக்கை எதிர்த்து சத்யாகிரகம் நடந்தது. தமிழ் நாட்டிலும் சென்னை, சேலம், மதுரை முதலிய இடங்களில் சத்யாகிரகம் நடந்தது. ஸ்ரீ ஓ.பி. ராமசாமி ரெட்டியார் அப்பொழுது மதராஸ் மாகாணத்தின் முதல் மந்திரி.  சத்யாகிரகத்தை அடக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் எல்லா ஊர்களிலுள்ள சத்யாகிரகி களையும் போலீஸ் தடியால் அடித்தார்கள். ஆனால் இதன் விளைவாக மறுநாளிலிருந்து சத்யாகிரகம் செய்யும் ஸ்வயம்சேவகர்களின் எண்ணிக்கை அதிகமாகத் தான் மாறியது. பல பேருக்கு சிறைவாசம் கிடைத்தது. சங்க ஸ்வயம்சேவகர்களின் கோஷங்கள் Prove the charges or Lift the Ban’ `குற்றச்சாட்டுகளை நிரூபி அல்லது தடையை நீக்கு’- – ‘பாரத்மாதா கீ ஜெய்’ கோஷங்கள்தான் எல்லா இடங்களிலும் எழுந்தன. எல்லா பொதுஜன தொடர்புப் பணிகள் இந்த அறப்போரில் சங்கத்திற்கும், அரசாங்கத்திற்கும் மத்தியஸ்தராக டி.ஆர்.வெங்கடராம சாஸ்திரி என்ற பெரியவர் செயல் புரிந்தார். டி.ஆர்.வி.சாஸ்திரி மதராஸ் பிரசிடென்சியின் அட்வகேட் ஜெனரலாக இருந்தவர். அவர் முயற்சிகளின் பலனாக 13-ம் தேதி ஜுலை 1949 சங்கத்தின் மேல் போட்ட தடை நீக்கப்பட்டது. சங்கத்தின் (சர்சங்கசாலக்) அகில பாரதத் தலைவர் பரம பூஜனீய குருஜி சிறையிலிருந்து விடுதலை ஆனதும் முதலில் சென்னைக்கு வந்து டி.ஆர்.வெங்கடராம சாஸ்திரி அவர்களைச் சந்தித்து பிறகுதான் தன்னுடைய மற்ற சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார்.

மாய்க்க வந்தது மாலை ஆயிற்று

1975ல் ஜூன் 26-ம் தேதி நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது. 30-ம் தேதி சர்சங்கசாலக் பரம பூஜனீய பாலாசாஹேப் தேவரஸ் கைது செய்யப்பட்டார். ஜுலை 4-ம் தேதி அன்று சங்கத்தின் மீது தடை விதிக்கப்பட்டது. மக்களின் அடிப்படையான உரிமைகள் பறிக்கப்பட்ட காலம் அது. அந்த 20 மாத காலத்தில் தலைமறைவு இயக்கம் நடத்தி அநியாயத்தை எதிர்க்க சத்யாகிரகம் நடந்தது. சர்வாதிகாரத்தை எதிர்த்த எல்லா கட்சிகளையும் ஒன்றாக சேர்க்க பெருமுயற்சி நடந்தது. பத்திரிகைகளில் செய்திகள் பிரசுரிப்பது கட்டுப்படுத்தப் பட்டிருந்ததால் அவசரகால அட்டூழியங்கள் பற்றிய செய்திகளைச் சிறு பிரசுரங்கள் மூலமாக நாம் வெளியிட்டு மக்களுக்கு தெரிவிக்கும் நிர்பந்தம் ஏற்பட்டது.

தமிழ்நாட்டிலும் எல்லா செய்திகளையும் ரகசியமாகத் திரட்டி பிரசுரங்கள் தயார் செய்து பொதுமக்களுக்கு வினியோகிக்கும் வேலை சங்கத்தின் மூலம் சிறப்பாக நடந்தது. பிராந்த சங்கசாலக் அவர்களும் மற்றவர்களும் சங்கத்திற்கு தடைவந்ததும் ‘மிசா’வில் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டார்கள். திரு.ரங்கசாமித் தேவரின் உறவினரே போலீஸ் டிஐஜியாக இருந்தபோதும், அவர் சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவரவில்லை. 1975-ம் வருடம் நவம்பர் மாதம் 14-ம் தேதி நாடு முழுவதும் ஒரே சமயத்தில் ஆரம்பித்த சத்யாகிரகத்தில் தமிழ்நாட்டில் 1000 பேருக்கும் மேல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ரகசிய -இயக்கத்தின் விவரங்களை கண்டுபிடிக்க போலீஸார் செய்த முயற்சி எதுவும் பலனளிக்கவில்லை. தமிழ் நாட்டிலுள்ள ஏழு மத்திய சிறைகளிலும், ஸ்வயம்சேவகர்கள் இருந்தார்கள். அவர்களுடைய சிறைவாசம் சங்கத்தின் பயிற்சி முகாம் போல் இருந்தது. சிறையில் அவர்களுக்கு தி.க, தி.மு.க, ஜமாயத்-ஏ-இஸ்லாமி போன்ற அமைப்புகளில் உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. ஸ்வயம்சேவகர்கள் பழகும் முறையைப் பார்த்து அவர்கள் மனதில் சங்கத்தைப்பற்றி இருந்த தப்பான அபிப்பிராயங்கள் மாறி நல்ல எண்ணம் உண்டாயிற்று.

பொதுஜன தொடர்புப் பணிகள்

தினசரி நடக்கும் சங்க ஷாகாவைத் தவிர பெரிய அளவில் பொது ஜனங்களுடன் தொடர்பு ஏற்படுவதற்காக பல நிகழ்ச்சிகள் நடப்பது உண்டு. உதாரணமாக பசு வதையை தடைசெய்ய வேண்டும் “என்ற கோரிக்கைக்கு ஆதரவை திரட்ட நாடு முழுவதும் ஒரு மாதம் முயற்சி செய்து ஒன்றே முக்கால் கோடி மக்களின் கையெழுத்து வாங்கி அந்த மனுவை அப்பொழுது ஜனாதிபதியாக இருந்த ஸ்ரீ ராஜேந்திர பிரசாத் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

விவேகானந்தர் பாறையில் நினைவு சின்னத்தை ஏற்படுத்துவதற்காக பொது மக்களை பெரிய அளவில் தொடர்பு கொண்டு நிதியை திரட்டினார்கள். தஞ்சையில் புயல் வந்த சமயத்திலும் சரி, திருச்சியில் வெள்ளம் வந்த சமயத்திலும் சரி, இயற்கை சீற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய ஸ்வயம்சேவகர்கள் அவ்வப் பொழுது வேலை செய்துகொண்டு வந்தார்கள்.

இரத்ததான இயக்கம்

ஆர்.எஸ்.எஸ் இரத்ததான இயக்கத்தை 1978-ம் வருடம் ஏப்ரல் 23-ம் தேதி தமிழ்நாடு ஆளுநர் ஸ்ரீ பிரபுதாஸ் பட்வாரி அவர்கள் டாக்டர் கே.எஸ்.சஞ்சீவி தலைமையில் துவக்கி வைத்தார். ரத்ததானம் செய்வது எவ்வளவு அவசியம் என்பதைப்பற்றி பொதுமக்களுக்கு தெரிவிப்பதோடு மட்டுமின்றி சென்னையில் அரசு பொது மருத்துவமனை, ரெயில்வே மருத்துவமனை, வேலூரில் சி.எம்.சி. மருத்துவமனை ஆகிய இடங்களில் இதய நோய் அறுவை சிகிச்சைகளுக்காக ஸ்வயம்சேவகர்கள் ரத்ததானமும் செய்து வந்தார்கள். மிகப்பெரிய அளவில் இந்த வேலை நடக்க வேண்டும் என்ற அவசியத்தை எல்லோரும் தெரிந்திருக்கிறார்கள். அடையாரிலுள்ள வி.ஹெச்.எஸ். இந்த வேலைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தது.

(விஜயபாரதம் 01.10.1979
விஜயதசமி மலரிலிருந்து)