‘தமிழக அரசு பணிகளுக்கு நேர்முக தேர்வு கூடாது!’

தமிழக அரசு பணிகளுக்கு, நேர்முக தேர்வை நீக்க வேண்டும்’ என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முக தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட, பல்வேறு சீர்திருத்தங்களை, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி.,யை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும். டி.என்.பி.எஸ்.சி.,யால் நடத்தப்படும் அனைத்து பணிகளுக்கும், நேர்முக தேர்வு கூடாது என்பதே, பா.ம.க.,வின் நிலைப்பாடு. நேர்முக தேர்வுகள் அகற்றப்பட்டால் தான், நேர்மையான முறையில் பணியாளர்களை தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் ஏழை, நடுத்தர மக்களுக்கும் வேலை கிடைக்கும்.

மத்திய அரசு பணிகளை பொறுத்தவரை, ‘குரூப் ஏ, குரூப் பி’ அரசிதழ் பதிவு பணிகள் தவிர, மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. அதேபோல, தமிழகத்திலும் அரசு பணிகளுக்கு நேர்முக தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும். குரூப் 2 ஏவில் உள்ள பணிகள் சாதாரணமானது என்பதால், இனி ஒரே தேர்வை நடத்த வேண்டும். தேர்வு முடிவுகளை, 30 மாதங்கள் வரை தாமதமாக டி.என்.பி.எஸ்.சி., வெளியிடுகிறது. இதனால், தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களை செய்ய வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.