ஜோதிராவ் கோவிந்தராவ் புலே

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் பிறந்தார் புலே. ஜார்ஜ் வாஷிங்டன், சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை வரலாறு, கபீர், துக்காராம், தியானேஷ்வர் உள்ளிட்ட ஞானிகளின் கவிதைகள், மார்ட்டின் லூதர், புத்தர், பசவண்ணாவின் நூல்கள் என பலவிதமான புத்தகங்களையும் படித்தார். அந்த நூல்கள் இவரிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

1848-ல் பெண்களுக்காக பள்ளியைத் துவங்கிய முதல் இந்தியர் புலே.  இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரும் இவர் மனைவி சாவித்ரி பாய்தான்.  இவரது முனைப்புகளால் அரசுப் பள்ளிகள் அதிகம் தொடங்கப்பட்டன. 12வயது வரை ஆரம்பக் கல்வி கட்டாயம், கல்வி அமைப்பு முழுவதும் அரசின் வசம் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். சமூக அடிமைத்தனமும், அதை வலியுறுத்தும் ஜாதி அமைப்புக்கும்  எதிராக புரட்சிக் கொடியை உயர்த்தினார். சமத்துவம், மனித உரிமைகள் பாதுகாக்க முதன்முதலாக முழங்கினார். பால்ய விதவை ஆன பெண்களின் தலையை மழித்துவிடும் கொடிய பணியை செய்யும் மக்களை வைத்தே அதை நாங்கள் செய்யமாட்டோம் என அறிவிக்க செய்தார்.

விதவை மறுமணம் போன்ற கருத்துக்களை பரப்பவும்,  தொழிலாளர்கள், விவசாயிகளை அமைப்பு ரீதியாகத் திரட்டி போராடி உரிமைகளை பெறவும் சத்யசோதக் சமாஜத்தை துவங்கினார். டாக்டர் அம்பேத்கர், ராஜா ராம்மோகன் ராய் உள்ளிட்ட சமூகப் புரட்சியாளர்களுக்கு உத்வேக சக்தியாகத் திகழ்ந்தவர்  புலே.  புலேவின் வாழ்க்கை வரலாற்றை தான் எழுத விரும்புவதாக, தனஞ்செய் கீரிடம் டாக்டர் அம்பேத்கர் தெரிவித்திருந்தாராம். இவரது சமூக சேவையைப் பாராட்டி பொதுக்கூட்டம் ஒன்றில்  இவருக்கு ‘மகாத்மா’ பட்டம் வழங்கப்பட்டது.

மகாத்மா ஜோதிராவ் புலே நினைவு தினம் இன்று

 ஆர்.கே