ஜெகத்ரட்சகன் ஆவணங்களை ஆய்வு செய்ய 10 சிறப்பு குழு

தி.மு.க., – எம்.பி., ஜெகத்ரட்சகன் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்ய, 10 சிறப்பு குழுக்களை, வருமான வரித் துறை அமைத்துள்ளது. தி.மு.க.,வைச் சேர்ந்த அரக்கோணம் தொகுதி எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு, தமிழகத்தில் மட்டுமல்ல; வெளிநாடுகளிலும், கல்வி நிறுவனங்கள், மதுபான ஆலைகள், நட்சத்திர ஓட்டல்கள், மின் உற்பத்தி நிறுவனங்கள் என, ஏராளமான தொழில்கள் உள்ளன.

இந்நிறுவனங்களில் வரி ஏய்ப்பு நடப்பதாக புகார் எழுந்தது. ஜெகத்ரட்சகன் வீடு உட்பட, 40 இடங்களில், வருமான வரித் துறை அதிகாரிகள், ஐந்து நாட்களாக சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வரி ஏய்ப்பு தொடர்பாக, ஏராளமான ஆவணங்கள் சிக்கியுள்ளன. மேலும், ஏராளமான சொத்து பத்திரங்கள், கணக்கில் வராத பணம், பணப் பரிமாற்றம் தொடர்பான தகவல்கள் உள்ள கம்ப்யூட்டர், லேப்டாப் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. மொத்தம், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இவற்றை ஆய்வு செய்ய, வருமான வரித் துறையில், 10 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. புலனாய்வு பிரிவின் துணை கமிஷனர்கள் மூன்று பேர் தலைமையில், இந்த குழுக்கள் செயல்படும். ஜெகத்ரட்சகன் வீட்டில் சிக்கிய ஆவணங்களின் நகல்களை, அமலாக்கத் துறை அதிகாரிகள் பெற்றுள்ளனர். அதன் அடிப்படையில், சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக விசாரணை நடக்கிறது. விரைவில், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என, அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.