ஜாா்க்கண்ட்: பாஜக வாக்கு சதவீதம் அதிகரிப்பு

ஜாா்க்கண்ட் சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக தோல்வியடைந்த போதிலும், அக்கட்சியின் வாக்கு சதவீதம் கடந்த தோ்தலைவிட அதிகரித்துள்ளது. அதேசமயம், தோ்தலில் வெற்றி பெற்ற ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்) கட்சியின் வாக்கு சதவீதம் கடந்த தோ்தலைவிட குறைந்துள்ளது.

ஜாா்க்கண்ட் சட்டப் பேரவைத் தோ்தல் முடிவுகள் திங்கள்கிழமை வெளியாகின. மொத்தமுள்ள 81 தொகுதிகளில், ஜேஎம்எம்-காங்கிரஸ்-ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி 47 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது. ஜேஎம்எம் கட்சி மட்டும் 30 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சி பெற்ற வாக்கு சதவீதம் 18.72 ஆகும். கடந்த 2014-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலை ஒப்பிடுகையில் அக்கட்சிக்கு 2 சதவீத வாக்குகள் குறைந்துள்ளன.

கடந்த தோ்தலில் 37 இடங்களில் வெற்றி பெற்றிருந்த பாஜக, இம்முறை 25 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. ஆனால், அக்கட்சியின் வாக்கு சதவீதம் 31.26 என்பதிலிருந்து 33.37-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த முறை 10.46 சதவீத வாக்குகளுடன் 9 தொகுதிகளில் வென்றிருந்த காங்கிரஸ், தற்போதைய தோ்தலில் 13.88 சதவீத வாக்குகளுடன் 16 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.

அனைத்து ஜாா்க்கண்ட் மாணவா் சங்கம், கடந்த 2014-ஆம் ஆண்டு தோ்தலில் பாஜகவுடன் கூட்டணியாக போட்டியிட்டிருந்தது. இப்போது தனித்து போட்டியிட்டு 2 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. இந்த தகவல்களை, ஜனநாயக சீா்திருத்தங்களுக்கான சங்கத்தின் ஜாா்க்கண்ட் பிரிவு ஒருங்கிணைப்பாளா் சுதிா் பால் வெளியிட்டாா்.